மமதாவிற்கு நெருக்கடி அதிகமாகிவிட்டது தோல்வி பயத்தில் புகார் சொல்கிறார்கள் - மேற்கு வங்க பாஜக தலைவர்
கொல்கத்தா: திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு தோல்வி பயம் வந்து விட்டதாக மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ் கூறியுள்ளார். மம்தா பானர்ஜி கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளார் என்றும் அதனால் தான் தேர்தலில் முறைகேடு நடைபெறுவதாக தேர்தல் ஆணையத்திடம் திரிணமூல் காங்கிரஸ்கட்சியினர் புகார் தெரிவித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் இன்று முதல்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி புகார் கூறியுள்ளது.
ஈ.வி.எம். மெஷினில் திரிணாமுல் சின்னத்தை அழுத்தினாழும் , பாஜவுக்குத்தான் வாக்குகள் பதிவாகிறது என்று திரிணாமுல் காங்கிரஸ் பகீர் குற்றச்சாட்டு கூறியுள்ளது. காஷிப்பூர் மற்றும் கார்பெட்டா தொகுதிகளில் பாஜகவினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றியதாகவும், மக்களை ஓட்டு போட அனுமதிக்கவில்லை என்றும் அங்குள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டினார்கள்.

முதற்கட்ட வாக்குப்பதிவு
மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. பொதுமக்கள் காலையிலேயே வந்து வரிசையாக ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் உடல் வெப்ப பரிசோதனை செய்த பிறகே வாக்காளர்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். மாஸ்க், கையுறை அணிந்தே வாக்குகளை செலுத்தி வருகின்றனர். தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடிகளில் மாநில போலீசார், பாதுகாப்பு படையினர் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தாமரைக்கு விழும் ஓட்டுகள்
இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் ஈ.வி.எம். மெஷினில் பட்டனை அழுத்தினாலே, பாஜவுக்குத்தான் வாக்குகள் பதிவாகிறது என்று திரிணாமுல் காங்கிரஸ் பகீர் குற்றச்சாட்டு கூறியுள்ளது. புருலியா மாவட்டம் காஷிப்பூர் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில்(பூத் எண் 6) ஈ.வி.எம். மெஷினில் திரிணாமுல் சின்னத்தை அழுத்தினாழும் பாஜகவுக்கு வாக்குகள் பதிவாகிறது என்று வாக்களித்த மக்கள் கூறியுள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் புகார்
காஷிப்பூர் மற்றும் கார்பெட்டா தொகுதிகளில் பாஜகவினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றியதாகவும் மக்களை ஓட்டு போட அனுமதிக்கவில்லை என்றும் அங்குள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டினார்கள். தேர்தல் ஆணையத்திடமும் இது குறித்து புகார் அளிக்கப்பட உள்ளது. உடனடியாக தேர்தல் ஆணையம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் டெல்லயில் தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்திக்கவுள்ளனர்.

பாஜக பதிலடி
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மேற்குவங்க மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ், தேர்தலில் முறைகேடுகள் நடைபெறுவதாக கூறுவது வேடிக்கையாக உள்ளது என்றார். திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினருக்கு தோல்வி பயம் வந்து விட்டது. அதனால் தான் தேர்தலில் முறைகேடு நடைபெறுவதாக புகார்களை தெரிவிக்கின்றனர் என்றும் திலிப் கோஷ் கூறினார்.

மக்கள் நம்பமாட்டார்கள்
மமதா பானர்ஜி கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளார். அதனால் தான் தேர்தல் ஆணையத்திடம் திரிணாமூல் காங்கிரஸ் புகார் அளிக்கிறது. மக்கள் ஆதரவு இல்லாத திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் இதுபோன்ற புகார்களை அளிக்கின்றனர். ஆனால் மக்கள் நம்பத் தயாராக இல்லை என்றும் திலிப் கோஷ் தெரிவித்துள்ளார்.