For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உத்தர பிரதேச தேர்தல்: பசுக்கள் தாக்குவதால் பறிபோகும் உயிர்கள் - தீர்வு கிடைக்குமா?

By BBC News தமிழ்
|
Stray cattle are a common sight in Indias towns and village
Getty Images
Stray cattle are a common sight in Indias towns and village

கடந்த ஆண்டு நவம்பர் மாதம். அது ஒரு மாலை நேரம். வட இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில் உள்ள தனது வீட்டில் தேநீர் குடித்துக் கொண்டிருந்தார் ராம் ராஜ் . அப்போது மாடு ஒன்று அவரைத் தாக்கியது.

அடுத்த சில நிமிடங்களில், அவரது பேரக் குழந்தைகள் கூச்சலிட்டு, அவரை மாடு தாக்குவதை திகிலுடன் பார்த்தனர். 55 வயதான அந்த விவசாயி பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

"இது ஒரு வேதனையான மரணம். எனது மாமியார் அன்றிலிருந்து சரியாக உணவு சாப்பிடுவதையே நிறுத்திவிட்டார்," என்று அவரது மருமகள் அனிதா குமாரி கூறுகிறார்.

இந்தியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலத்தில் இதுபோன்ற தாக்குதல்கள் வழக்கமாகிவிட்டன. அங்கு பசுவதைத் தடை இருப்பதால், கால்நடைகளின் எண்ணிக்கையில் பெருக அது வழிவகுத்துள்ளது.

அம்மாநிலத்தில் வரும் பிப்ரவரி 10ஆம் தேதியன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடக்கவிருக்கும் நிலையில், இது ஒரு தேர்தல் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.

இந்துக்கள் பசுவைப் புனிதமாக கருதுகின்றனர். ஆனால், சில காலம் முன்பு வரை, பல விவசாயிகள் தங்கள் பழைய மாடுகளை இறைச்சிக் கூடங்களுக்கு எடுத்துச் சென்றனர்.

"எங்கள் பசுக்கள் பால் கொடுப்பதை நிறுத்தியவுடனோ, வயல்களை உழுவதற்கு ஏற்றதாக இல்லாமல் போனவுடனோ நாங்கள் அவற்றை விற்றோம். அதுவே பணநெருக்கடியாக உள்ள காலத்தில் எங்களுக்கு உதவும் ஒன்றாக இருந்தது," என்கிறார் நெல் விவசாயியான ஷிவ் பூஜன்.

ஆனால், பிரதமர் நரேந்திர மோதியின் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசு, அதன் வலதுசாரி இந்து கொள்கைக்கு ஆதரவாக, பசுவதையை கடுமையாகத் தடுத்துள்ளது. பசுவதை உத்தர பிரதேசம் உட்பட 18 மாநிலங்களில் சட்டவிரோதமாகப்பட்டுள்ளது.

Hindus consider the cow to be a sacred animal
Getty Images
Hindus consider the cow to be a sacred animal

எருமை இறைச்சியின் பெரும்பான்மையாக ஏற்றுமதி செய்யும் உ.பி-யில், இது மிகப்பெரிய வணிகமாக இருக்கிறது. இருப்பினும் 2017ஆம் ஆண்டு பாஜக தலைவரான முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆட்சிக்கு வந்த பிறகு, இங்கு சட்டவிரோதம் என்று அழைக்கப்படுகின்ற பல இறைச்சிக் கூடங்களை மூடினார்.

பசு வியாபாரிகளில் பலர் முஸ்லிம்கள் அல்லது தலித்துகள் (முன்னர் தீண்டத்தகாதவர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள்; இந்து சாதிய படிநிலையின் அடிமட்டத்தில் இருப்பவர்கள் என கருதப்படுபவர்கள்). பெரும்பாலும் பா.ஜ.க அல்லது உள்ளூர் வலதுசாரி குழுக்களுடன் தொடர்புடைய ஆட்களால், இவர்கள் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

அதனால், மாடுகளை வாங்கவோ, கொண்டு செல்லவோ பயந்து பலர் அத்தொழிலை கைவிட்டனர். விவசாயிகள் இப்போது பழைய, பலனளிக்காத மாடுகளை கைவிடுகின்றனர்.

"இப்போது மாடுகளை வாங்குபவர்கள் யாரும் இல்லை, அதனால், யாரும் அவற்றை விற்க முடியாது," என்று பூஜன் கூறுகிறார். அவரும் மற்றவர்களும் வயதான கால்நடைகளை அருகிலுள்ள காடுகளில் விட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இந்த கால்நடைகள் உ.பி-யில் உள்ள நகரங்களிலும் கிராமங்களிலும் அடிக்கடி சுற்றித் திரிவதைப் பார்க்கலாம். அங்கு அவை பசி கொண்டதாகவும், ஆக்ரோஷமாகவும் மாறுவதாக விவசாயிகளும் உள்ளூர்வாசிகளும் கூறுகின்றனர்.

அப்படிப்பட்ட ஒரு மாடு ராம் ராஜின் வீட்டு முற்றத்தில் நுழைந்ததுள்ளது. அவரும் அவரது குடும்பத்தினரும் பயந்து கூச்சலிட தொடங்கியதும், அது அவரைத் தாக்கியுள்ளது.

சமீபத்தில், தனது வயலில் இருந்து துரத்த முயன்ற போது, வீதிகளில் உலவும் பசுக் கூட்டத்தால் தாக்கப்பட்டார் பூஜன்.

"அவற்றில் இரண்டு மாடுகள், என்னை தரையில் தள்ள முயன்றன. நான் என் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடினேன்," என்று அவர் கூறினார். அப்போது அவர் கம்பி வேலியைத் தாண்ட முயற்சி செய்யப்போது, கையில் காயப்பட்டதைக் காட்டினார்.

பூஜன் இந்து மதத்தைச் சேர்ந்தவர்; அவர் பசு புனிதமானது என்று நம்புகிறார். ஆனால், அவை அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அரசின் உத்தரவால் விரக்தியடைவதாகவும் அவர் கூறுகிறார்.

வீதிகளின் உலவும் பசுக்கள் பயிர்களை நாசம் செய்வதாகவும், சாலை விபத்துகளை ஏற்படுத்துவதாகவும், மக்களைக் கொல்வதாகவும் அவரைப் போன்ற விவசாயிகள் கூறுகின்றனர்.

"இப்போது சுற்றித் திரியும் பசுக்களால், என் மகன் ஆதரவற்றவனாக இருக்கிறான். எங்களை யார் கவனித்துக்கொள்வார்கள்?" என்று பூனம் துபே கேட்கிறார். அவரது கணவர் வீதிகள் உலவிய ஒரு காளையால் கொல்லப்பட்டார்.

36 வயதான பூபேந்திர துபே, 2020ஆம் ஆண்டில், கோவிட் தொற்று காலத்தின் முதல் அலையின்போது வேலையை இழந்து தனது கிராமத்திற்குத் திரும்பியுள்ளார். தனது மகனுக்கு இனிப்புகள் வாங்க உள்ளூர் சந்தைக்கு அவர் சென்றப்போது, பசு ஒன்று அவரைத் தாக்கியதில் அவர் இறந்தார்.

சுமார் 100 கிமீ தொலைவில் 80 வயதான ராம் காளி, 2019ஆம் ஆண்டு, பசுவால் தாக்கப்பட்டதில் இருந்து கோமா நிலையில் உள்ளார். கடந்த ஆண்டு தொடக்கத்தில், அவரது ஒரே மகன் கோவிட்-19 தொற்று நோயால் இறந்ததுகூட அவருக்கு இன்னும் தெரியாது என்று அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.

விவசாயிகள் முக்கியமாக வாக்களிக்கும் தொகுதியாக இருக்கும் கிராமப்புற மாநிலமான உ.பி.யில் எதிர்க் கட்சிகள் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளன.

பாஜக சொல்வது என்ன?

ஆளும் பாஜகவின் மாநில செய்தி தொடர்பாளர் சமீர் சிங் கூறுகையில், இந்த பிரச்னையை சமாளிக்க அரசு "புதிய உத்திகளை வகுத்து வருகிறது" என்றார்.

"இந்த விலங்கு இந்து கலாசாரத்தின் ஒரு பகுதியாக இருப்பதால், இவற்றை வீதிகளில் சுற்றும் மாடுகள் என்று அழைக்கக்கூடாது. நம்மை சார்ந்த முதியவர்களுக்கு வயதாகும்போது இறந்து போகட்டும் என்று விட்டுவிட மாட்டோம். அப்படி இருக்கும்போது, நாம் மாடுகளை எப்படி சாலையில் இறக்க விட முடியும்?" என்கிறார் அவர்.

பசுக்கள் அதற்கான காப்பகங்களில் அடைக்கப்பட வேண்டும். இன்னும் கூடுதலான தங்குமிடங்களைக் கட்டுவதற்கு, ஆதித்யநாத்தின் அரசு கோடிக் கணக்கான ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. அரசு நடத்தும் ஆயிரக்கணக்கான பசுக் கூடங்களை பராமரிக்க சிறப்பு மது வரியையும் விதித்தனர்.

ஆனால், இது சிக்கலை தீர்க்கவில்லை. அயோத்தி மாவட்டத்திலுள்ள அரசு நடத்தும் பசுக் கூடத்திற்கு பிபிசி இந்தி சென்றது. அங்கு, போதிய இட வசதியில்லாமல் பசுக்களால் நிரம்பியிருந்தது.

"இங்கே 200 மாடுகள் உள்ளன. இது எங்களின் அதிகபட்ச எண்ணிக்கையாகும். சுமார் 700-1,000 மாடுகள் இன்னும் இப்பகுதியில் சுற்றித் திரிகின்றன," என்று அத்தங்குமிடத்தை கவனித்து வரும் சத்ருகன் திவாரி கூறினார்.

இதற்கிடையில், பல விவசாயிகள் தங்கள் பண்ணைகளை 24 மணி நேரமும் பாதுகாத்து வருகின்றனர்.

குளிர்காலத்தையும், பாம்புகளையும் எதிர்த்து, இரவு முழுவதும் வயல்களில் காவல் காப்பதற்காக அவர்கள் குழுக்களை உருவாக்கியுள்ளனர்.

" கிராமம் முழுவதிலும் உள்ள மக்கள் குழுக்கள் மாறி மாறி பாதுகாத்து வருகின்றன. எங்களுக்கு பதிலாக ஒரு புதிய குழு காலையில் வரும். பின்னர் நாங்கள் வீட்டிற்குச் சென்று ஓய்வெடுப்போம்," என்று 64 வயதான விவசாயி பிம்லா குமாரி கூறுகிறார்.

தினா நாத் போன்ற மற்றவர்கள், இந்த பிரச்னையால் சலிப்படைந்துவிட்டதாகவும், தேர்தலைப் புறக்கணிப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

"எங்களின் பிரச்னைகள் தீர்க்கப்படாவிட்டால், வாக்களிப்பதில் என்ன பயன்?" என்று கேட்கிறார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
Cows in Roads of Uttar Pradesh is creating huge problem for drivers. Uttar Pradesh Election 2022 latest updates in tamil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X