For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விவசாயிகள் போராட்டம்... வறட்சி நிவாரண நிதியை அளிக்க அருண் ஜெட்லியிடம் வைகோ கோரிக்கை

வறட்சி நிவாரணப் பணிகளுக்குக் கூடுதல் நிதி அளிக்க வேண்டும் என்றும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியிடம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை வைத்துள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: வறட்சி நிவாரணப் பணிகளுக்குக் கூடுதல் நிதி அளிக்க வேண்டும். டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்ற விவசாயிகளின் கோரிக்கையைக் கனிவுடன் பரிசீலனை செய்து, விவசாயிகளின் பட்டினிப் போராட்டத்தைத் திரும்பப் பெற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அருண் ஜெட்லியை சந்தித்து வைகோ கோரிக்கை வைத்துள்ளார்.

டெல்லியில் தமிழக விவசாயிகள் 15 நாட்களாக பட்டினி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று விவசாயிகளை சந்தித்து ஆதரவு தெவித்தார். இதனைத் தொடர்ந்து இரவு 9 மணி அளவில், மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியை, அவரது இல்லத்தில் வைகோ சந்தித்து மனு அளித்தார்.

வைகோ கோரிக்கை

வைகோ கோரிக்கை

முக்கியமான நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்றுடன் 13 ஆவது நாளாக டெல்லி ஜந்தர் மந்தரில் கட்சி சார்பு அற்ற முறையில் தமிழக விவசாயிகள்நடத்தி வருகின்ற அறப்போராட்டத்தைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விழைகின்றேன். இந்தியாவின் தந்தை எனப் போற்றப்படும் உத்தமர் காந்தி அடிகள் இடுப்பில் அரை ஆடையே அணிந்தார். அதனால் அவரை ஒரு ‘அரை நிர்வாணப் பக்கிரி' என்று வின்ஸ்டன் சர்ச்சில் வர்ணித்தார். காந்தி அடிகளின் வழியில், தமிழக விவசாயிகள் இடுப்பில் மட்டுமே அரை ஆடை அணிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாயிகள் தற்கொலை

விவசாயிகள் தற்கொலை

தமிழகத்தில், நானூறு விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அப்படி உயிர் நீத்த விவசாயிகளின் மண்டை ஓடுகளைக் கொண்டுவந்து தங்கள் கழுத்தில் கட்டிக் கொண்டு விவசாயிகள் போராடுகின்றனர். கடுமையான வறட்சியினால் தமிழகத்தில் டெல்டா பகுதியில் மட்டும் 29 இலட்சம் ஏக்கர் பாசனம் இழந்துவிட்டது. மொத்தத்தில் ஒரு கோடி ஏக்கர் விவசாயம் பாழாகிவிட்டது.

நதிநீர் பிரச்சினை

நதிநீர் பிரச்சினை

நதிநீர்ப் பிரச்சினைகளில் தமிழகத்திற்கு உரிய நியாயம் கிடைக்கவில்லை. கர்நாடகம், கேரளம், ஆந்திரம் போன்ற அண்டை மாநிலங்கள் தமிழகத்தை வஞ்சித்து வருகின்றன. ‘காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரைத் திறந்து விட வேண்டும் என உச்சநீதிமன்றம் பிறப்பித்த ஆணையைக் கர்நாடக அரசு செயல்படுத்தவில்லை. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை.

தமிழக வறட்சி

தமிழக வறட்சி

தமிழகத்தில் ஏற்பட்ட கடுமையான வறட்சியைச் சமாளிக்க ரூ 39,565 கோடி தேவை என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்தது. ஆனால் மத்திய அரசு வெறும் 1698 கோடியே 45 இலட்சம் மட்டுமே ஒதுக்கி உள்ளது. அதுவும்கூட அடுத்த பயிரீட்டுக்கு தேவையான இடுபொருட்களை வாங்குவதற்கு என்று அறிவித்துள்ளது.

விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் போராட்டம்

2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், வரலாறு காணாத அளவிற்குத் தமிழகத்தைத் தாக்கிய வர்தா புயலால் விளைந்த பெரும் சேதத்தை ஈடுகட்டுவதற்காகவும், மறுவாழ்வுப் பணிகளுக்காகவும் தமிழக அரசு கோரிய அளவிற்குப் போதுமான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. கோடிக்கணக்கான தமிழக விவசாயிகளின் சார்பில், ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கின்றார்கள். திருச்சியைச் சேர்ந்த வழக்குரைஞர் அய்யாக்கண்ணு அவர்கள், தமிழகத்தில் இருந்து விவசாயிகளைத் திரட்டிக் கொண்டு வந்து இந்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்திக் கொண்டு இருக்கின்றார்.

விவசாயிகள் கோரிக்கை

விவசாயிகள் கோரிக்கை

தேசிய வங்கிகள், கூட்டுறவு வங்கிகளிடம் விவசாயிகள் வாங்கிய கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு கோரிய வறட்சி நிவாரண நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும். தென்னக நதிகள் இணைப்புக்கு உடனே நடவடிக்கை வேண்டும். தமிழகம் தொடர்ந்து மத்திய அரசால் புறக்கணிக்கப்படுவதால், தமிழக விவசாயிகள் இடையே மத்திய அரசு மீது வெறுப்பும் வேதனையும் ஏற்பட்டு இருக்கின்றது. வறட்சி நிவாரணப் பணிகளுக்குக் கூடுதல் நிதி அளிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் என்றும் வைகோ தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

English summary
MDMK general secretary Vaiko on Saturday met Union Finance Minister Arun Jaitley to urge consider farmers demand.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X