
2 மாதத்தில் இது 4வது முறை! மோடி துவக்கிய காந்திநகர்-மும்பை வந்தேபாரத் ரயில் மீண்டும் விபத்து.. ஏன்?
காந்திநகர்: பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த காந்திநகர்-மும்பை வந்தே பாரத் ரயில் மீண்டும் மாடு மீது மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. கடந்த 2 மாதத்தில் மட்டும் இந்த வழித்தடத்தில் இயங்கும் வந்தே பாரத் ரயில் 4வது முறையாக விபத்தில் சிக்கியுள்ளது.
இந்தியாவில் ரயில்களில் சேவையை மேம்படுத்தும் நோக்கத்தில் மத்திய அரசு சார்பில் ‛வந்தே பாரத்' ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும் இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை நிறைவு செய்வதை கொண்டாடும் வகையில் மொத்தம் 75 நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில் இயக்க முடிவு செய்யப்பட்டது.
நாள் குறிச்சாச்சு! வானிலையில் நடக்கும் ட்விஸ்ட்.. புயல் வருகிறதா? இன்று தமிழ்நாட்டில் என்ன நடக்கும்?

வந்தே பாரத் ரயில்
சென்னை-மைசூர் உள்பட இந்தியாவில் தற்போது 5 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதம் இறுதியில் பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் காந்திநகர்-மும்பை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை துவக்கினார். இதன்மூலம் முக்கிய தொழில் நகரங்களாக உள்ள காந்திநகர், மும்பை இடையே மக்களின் பயண நேரம் குறைந்துள்ளது.

கால்நடைகள் மீது மோதல்
இந்நிலையில் தான் சமீப காலமாக வந்தே பாரத் ரயில்கள் கால்நடைகள் மீது மோதி விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. சென்னை-மைசூர் ரயில் கூட ஒருமுறை கால்நடை மீது மோதி விபத்தில் சிக்கியது. இதில் குறிப்பாக பிரதமர் மோடி துவக்கி வைத்த காந்திநகர்-மும்பை இடையேயான வந்தே பாரத் ரயில் தொடர்ந்து விபத்துகளை சந்தித்து வருகிறது.

காந்திநகர்-மும்பை ரயில்
இந்நிலையில் நேற்று மாலை மீண்டும் காந்திநகர்-மும்பை வந்தே பாரத் ரயில் மீண்டும் விபத்தில் சிக்கியது. அதன்படி காந்தி நகரில் இருந்து நேற்று மும்பை புறப்பட்ட வந்தே பாரத் ரயில் குஜராத் மாநிலம்உத்வாதா மற்றும் வாபி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தின் குறுக்கே வந்த மாடு மீது வந்தே பாரத் ரயில் மோதியது. இதில் ரயிலின் முன்புறம் லேசாக சேதமடைந்தது. இதையடுத்து ரயில் நிறுத்தப்பட்டது. ரயில் இயக்குவதில் பிரச்சனை எதுவும் இல்லை. இதனால் அடுத்த சில நிமிடங்களில் ரயில் மீண்டும் புறப்பட்டு சென்றது.

2 மாதத்தில் 4வது முறை விபத்து
இந்த மார்க்கத்தில் வந்தே பாரத் ரயில் சேவை துவங்கி வெறும் 2 மாதங்கள் மட்டுமே ஆகிறது. ஏற்கனவே 3 முறை மாடுகள் மீது ரயில் மோதிய நிலையில் தற்போது 4வது முறையாக இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றி மேற்கு ரயில்வே மக்கள் தொடர்பு தலைமை அதிகாரி சுமித் தாகூர் கூறுகையில், ‛‛வந்தே பாரத் ரயில் நேற்று மாலை 6.23 மணிக்கு உத்வாதா-வாபி ரயில் நிலையங்களுக்கு இடையே 87 வது கேட் அருகே கால்நடை மீது மோதியது. இதில் லேசாக முன்புறம் சேதமடைந்தது. இதில் சேவை எதுவும் பாதிக்கப்படவில்லை. உடனடியாக 6.35 மணிக்கு ரயில் புறப்பட்டு சென்றது'' என்றார்.