உபி தேர்தல் முடிவுகள்: 15% அதிகரித்த சமாஜ்வாதி வாக்கு சதவிகிதம்.. இருந்தும் வெற்றி பெற முடியாதது என்ன காரணம்?
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், இந்தத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் பெற்ற வாக்கு வங்கிகளைப் பார்க்கும் போது இத்தேர்தலில் யாருக்குத் தோல்வி என்பது தெளிவாகத் தெரிகிறது.
உத்திரப் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. நாட்டிலேயே பெரிய மாநிலமான உபி-இல் ஒரு கட்சி ஆட்சியைப் பிடிக்கக் குறைந்தது 202 தொகுதிகளில் வெல்ல வேண்டும்.
அங்கு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. இவை தவிரப் பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளும் களத்தில் இருந்தன.

உத்தரப் பிரதேசம்
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆத்தியநாத் தலைமையிலான பாஜகவே ஆட்சியில் இருந்தது. கடந்த 2017 தேர்தலில் 312 இடங்களில் வென்று பாஜக மாபெரும் கட்சியாக உருவெடுத்த நிலையில், அதேபோன்ற வெற்றியைப் பெற வேண்டும் என்ற முனைப்பில் பாஜக களமிறங்கியது. இதற்காக முக்கிய பாஜக தலைவர்கள் பலரும் உத்தரப் பிரதேசத்தில் நேரடியாகப் பிரசாரம் செய்தனர். பிரதமர் மோடியும் உத்தரப் பிரதேசத்திற்குச் சென்று, பல்வேறு திட்டங்களை நேடியாகத் தொடங்கி வைத்தார்.

சமாஜ்வாதி
இருப்பினும், கொரோனா பெருந்தொற்றை கையாண்டது, வேலைவாய்ப்பின்மை, பொருளாதாரம் உள்ளிட்டவை காரணமாக பாஜகவை வீழ்த்த முடியும் என நம்பியது சமாஜ்வாடி! மேலும் தேர்தலுக்கு சில காலம் முன்னாள், பாஜக அமைச்சர் உட்பட பலரும் சமாஜ்வாதி பக்கம் சென்றது. இதனால் சமாஜ்வாதி ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாகவே பலரும் கருதினர். இரு கட்சிகளைத் தவிரப் பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளும் தனித்துக் களமிறங்கியதால், 4 முனை போட்டி ஏற்பட்டதாகக் கூறப்பட்டது,

பாஜக வெற்றி
ஆனால், தேர்தல் முடிவுகள் அங்கு இரு முனை போட்டி இருந்ததையே தெளிவாகக் காட்டுகிறது. பாஜக 264 இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில், சமாஜ்வாதி 134 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் வாஷ்அவுட் ஆகிவிட்டது என்றே சொல்லலாம். இந்தத் தேர்தலில் இந்த இரு கட்சிகளுமே உண்மையாகப் படுதோல்வி அடைந்துள்ளது. வாக்கு சதவீதங்களை வைத்துப் பார்க்கும் போது இது தெளிவாகத் தெரிகிறது.

வாக்கு சதவிகிதம்
உத்தரப் பிரதேசத்தில் தலித்துகள் அதிகம் உள்ல மாவட்டங்களில் சமாஜ்வாதி 36.1% வாக்குகளைப் பெற்றுள்ளது. இது கடந்த தேர்தலை விட 15% அதிகம் ஆகும். ஆனால், இது பாஜகவை வீழ்த்த போதுமானதாக இல்லை. பாஜக 44.4% வாக்குகள் (கடந்த 2017ஐ விட 3.2% அதிகம்) பெற்றுள்ளன. அதேபோல முஸ்லீம் மக்கள்தொகை அதிகம் உள்ள நிலையங்களில், சமாஜ்வாதி கடந்த தேர்தலை விட 15.5% வாக்குகள் அதிகம் பெற்று 42.5% வாக்குகளைப் பெற்றுள்ளது. பாஜக 40.9% (கடந்த 2017ஐ விட 1.3% அதிகம்) பெற்றுள்ளது.

யாருடைய வாக்குகள்
சமாஜ்வாதி கட்சியின் வாக்கு வங்கு தலித்துகள் மற்றும் முஸ்லீம்கள் அதிகம் உள்ள மாவட்டங்களில் 15% அதிகரித்த போதிலும், பாஜகவின் வாக்கு வங்கிக்குத் துளியும் பாதிப்பு ஏற்படவில்லை. ஏனென்றால், சமாஜ்வாதி கட்சிக்கு இந்த முறை கூடுதலாக வந்த வாக்குகள் பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் கட்சியின் வாக்குகள் ஆகும். கடந்த 2017 தேர்தலுடன் ஒப்பிடுகையில் தலித்கள் அதிகம் உள்ள மாவட்டங்களில் இந்த முறை பகுஜன் சமாஜ் 12% வாக்குகளையும் (கடந்த 2017ஐ விட 12.1% குறைவு), காங்கிரஸ் 4% வாக்குகளையும் (கடந்த 2017ஐ விட 3.9% குறைவு) பெற்றுள்ளது.
Recommended Video

தோல்வி யாருக்கு
அதேபோல இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள பகுதிகளிலும் பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் முறையே 7.9 & 7.7 சதவிகித வாக்குகளை இழந்துள்ளது. பல பகுதிகளில் சமாஜ்வாதி கட்சி பெற்ற வாக்கு சதவிகிதம் அதிகரித்த போதிலும், அவை பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் வாக்குகள் என்பதால் அதை வெற்றியாக மாற்ற முடியவில்லை. பாஜகவின் வாக்கு சதவிகிதம் எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்பதால் அக்கட்சி மீண்டும் வென்று உ.பி-இல் ஆட்சியைப் பிடித்துள்ளது.












Click it and Unblock the Notifications