நேரு, இந்திரா, ராஜீவ் காலத்தில் எதிர்கட்சி தலைவர் பதவி இல்லையே: வெங்கையா நாயுடு
ஹைதராபாத்: சபையை எப்படி நடத்த வேண்டும் என்று எங்களுக்கு தெரியும் என மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
லோக்சபாவின் எதிர்கட்சி தலைவர் பதவி தங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இல்லை என்றால் நீதிமன்றத்திற்கு செல்ல அது ஆலோசித்து வருகிறது.
இந்நிலையில் இது குறித்து மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

நேருஜி, இந்திரா காந்தி காலத்தில் எதிர்கட்சி தலைவர் இல்லை. ஏன் ராஜீவ் காந்தி காலத்திலும் எதிர்கட்சி தலைவர் இல்லை. ஆனால் பாஜக ஆட்சியில் எதிர்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும். அப்போது நிலைமை வேறு தற்போது நிலைமை வேறு. சபாநாயகரின் முடிவுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். அவர் என்ன முடிவு செய்கிறார் என்று பார்ப்போம் என்றார்.
எதிர்கட்சி தலைவர் பதவியை தராவிட்டால் நாடாளுமன்றம் நடக்காது என்று காங்கிரஸ் தலைவர் ஷகீல் அகமது தெரிவித்துள்ளது பற்றி கேட்டதற்கு நாயுடு கூறுகையில்,
அதையும் பார்ப்போம். சபையை எப்படி நடத்த வேண்டும் என்று எங்களுக்கு தெரியும். அவர்களால் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. படுதோல்வி அடைந்த பிறகும் அதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
காங்கிரஸ் மற்றும் அனைவரும் சேர்ந்து நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்தி மக்களின் நன்மைக்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும் தேவையானவற்றை செய்ய வேண்டும் என்றார்.