பாஜகவை விரட்டியடிக்க ஒன்றுபடுவோம் வாங்க! எதிர்க்கட்சி தலைவர்கள், முதல்வர்களுக்கு மம்தா அதிரடி கடிதம்
கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பாஜக அல்லாத முதல்வர்கள், அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் இன்று கடிதம் எழுதியுள்ளார். அதில், "மத்தியில் ஆளும் பாஜகவை விரட்டியடிக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும். பாஜகவுக்கு எதிரான உத்திகள் குறித்து விவாதிக்க ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும் '' என வலியுறுத்தியுள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், பாஜக தலைவர்களுக்கும் இடையே அடிக்கடி கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. மம்தா பானர்ஜி பாஜகவுக்கு எதிராக தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.
மேலும் 2024 மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து புதிய அணியை தோற்றுவிக்க முயன்று வருகிறார். இது தொடர்பாக பிற மாநில தலைவர்களை அவர் சந்தித்து வருகிறார்.

மம்தா பானர்ஜி கடிதம்
இந்நிலையில் தான் இன்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பாஜகவுக்கு எதிரான கொள்கைகள் கொண்ட முதல்வர்கள், எதிர்க்கட்சி தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் மக்களுக்கு முற்போக்கு ஆட்சியை வழங்கவும், பாஜகவின் அடக்குமுறையை கட்டுப்படுத்தவும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது அவசியமாகி உள்ளது. இதுதொடர்பான உத்திகள் குறித்து விவாதிக்க ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும் என்பன போன்ற பல்வேறு அம்சங்களை குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

தொடர்ந்து தாக்கும் பாஜக
மத்திய பாஜக அரசு நாட்டின் அரசியலமைப்பு ஜனநாயகம் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவது கவலையளிக்கிறது. அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை உள்பட மத்திய விசாரணை அமைப்புகளை பாஜக அரசியல் லாபத்துக்காகவும், எதிர்க்கட்சிகளை மிரட்டவும் பயன்படுத்தி வருகிறது. சமீபத்தில் முடிந்த மக்களவை குளிர்கால கூட்டத்தொடரின்போது எதிர்க்கட்சிகளின் வெளிநடப்புக்கு மத்தியில், டெல்லி சிறப்பு காவல் (திருத்தம்) மசோதா 2021 மற்றும் சிவிசி (திருத்தம்) மசோதா 2021ஆகியவை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தச் சட்டங்கள், முந்தைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அப்பட்டமாக மீறும் வகையில் அமலாக்கத்துறை, சிபிஐ இயக்குனர்களின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகள் வரை நீட்டிக்க மத்திய அரசு உதவி செய்கிறது.

குறிவைக்கப்படும் எதிர்க்கட்சிகள்
எதிர்க்கட்சி தலைவர்களை அடக்கும் ஒரே நோக்கத்துடன் மத்திய விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்தும் ஆளும் பாஜகவின் நோக்கத்தை நாம் எதிர்க்க வேண்டும். தேர்தல்கள் நடைபெறும்போது தான் மத்திய விசாரணை அமைப்புகள் எதிர்க்கட்சியினர் மீது நடவடிக்கையை துவங்குகின்றன. இதன்மூலம் எதிர்க்கட்சிகள் குறிவைக்கப்படுவது அப்பட்டமாக தெரிகிறது.

ஜனநாயகத்தின் ஆபத்தான போக்கு
பாஜகவின் பழிவாங்கும் அரசியலை இனி எதிர்க்கட்சிகள் தலைவர்கள் பொறுத்து கொள்ளக்கூடாது. பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் தொடர்ந்து நீதித்துறையின் உத்தரவுகளை மீறுவதைப் பார்ப்பது எனக்கு வேதனை அளிக்கிறது. எனக்கு நீதித்துறையின் மீது அதிக மதிப்பு உள்ளது. சில பாரபட்சமான அரசியல் தலையீடுகளால், மக்களுக்கு நீதி கிடைக்காமல் போகிறது. இது நமது ஜனநாயகத்தில் ஆபத்தான போக்காக உள்ளது.

ஜனநாயகத்தின் முக்கிய தூண்கள்
நமது ஜனநாயக அமைப்பில், நீதித்துறை, ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் முக்கிய தூண்களாக உள்ளனர். இதில் ஒருபகுதி பாதிக்கப்பட்டாலும் ஜனநாயகம் சீர்குலைந்துவிடும். நீதித்துறையின் ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் மீது செல்வாக்கு செலுத்த முயற்சிப்பதன் மூலம் இந்த நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பை தாக்க பாஜக மீண்டும் மீண்டும் முயற்சிக்கிறது.

ஒன்றுபட்டு ஆலோசனை கூட்டம்
எனவே அனைவரும் ஒன்று சேர வேண்டும். ஒவ்வொருவரின் வசதி மற்றும் நேரத்துக்கு ஏற்றாற்போல் உத்திகள் குறித்து ஆலோசிக்க கூட்டம் நடத்த அழைப்பு விடுக்கிறேன். நமது நாட்டிற்கு தேவையான தகுதியான நல்லாட்சி வழங்கும் அரசாங்கத்திற்கு வழி வகுக்கும் வகையில் ஒன்றுபட்ட கொள்கை ரீதியாக முற்போக்கு சக்திகள் அனைத்தும் பாஜகவை எதிர்க்க உறுதி ஏற்போம்'' என குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications