For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காங்கிரஸ் ஸ்டிரைக் ரேட் வீழ்ச்சி: பிகார் தேர்தல் முடிவுகள் சொல்வதென்ன? காங்கிரஸ் துணையா, சுமையா?

By BBC News தமிழ்
|
காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்
Getty Images
காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்

கிரிக்கெட் விளையாட்டில் புழங்கிவந்த ஒரு சொல் கடந்த இரண்டு நாள்களாக இந்தியாவில் அரசியல் விமர்சனத்தில் பயன்படுத்தப்படுகிறது.

அரசியல் விமர்சனத்துக்கு கிரிக்கெட் தந்த கொடை என்றுகூட அந்த சொல்லைக் குறிப்பிடலாம்.

அது என்ன சொல் என்கிறீர்களா?

'ஸ்டிரைக் ரேட்' என்பதுதான் அந்த சொல்.

கிரிக்கெட் விளையாட்டில் ஒரு பேட்ஸ்மேன் எதிர்கொண்ட பந்துகளின் எண்ணிக்கைக்கும், அவர் பெற்ற ரன்களின் எண்ணிக்கைக்கும் உள்ள விகிதத்தைதான் ஸ்டிரைக் ரேட் என்பார்கள்.

ஒருவர் 100 பந்துகளை சந்தித்து 30 ரன் எடுத்தால் அவரது ஸ்டிரைக் ரேட் 30. அது மிக மோசமான ஆடு திறனைக் குறிக்கும்.

ஒருவர் 10 பந்துகளை எதிர்கொண்டு 25 ரன் எடுத்தால் அவரது ஸ்டிரைக் ரேட் 250.

அதெல்லாம் சரி. இப்போது அரசியல் விமர்சனத்தில் இது ஏன் வருகிறது என்று கேட்கிறீர்களா?

பிகார் சட்டமன்றத் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணியில் 70 இடங்களை போராடிப் பெற்ற காங்கிரஸ், அதில் 19 இடங்களை மட்டுமே வென்றது.

243 தொகுதிகளை கொண்ட சட்டமன்றத்தில் காங்கிரஸ் மட்டுமே 51 இடங்களை தோற்றது. இந்நிலையில் 15 இடங்கள் வேறுபாட்டில் ஆட்சிக்கு வரும் வாய்ப்பை பறிகொடுத்திருக்கிறது 'மகா கட்பந்தன்' என்னும் பெருங்கூட்டணி.

பாஜக
Getty Images
பாஜக

இந்தக் கூட்டணியில் எல்லாக் கட்சிகளுமே ஓரளவு தோற்றிருக்கின்றன என்றாலும், காங்கிரசின் தோல்வி விகிதம் புதிய விவாதத்தை தோற்றுவித்திருக்கிறது.

இந்த விவாதம் பிகார் அரசியலை ஒட்டி மட்டுமே நிகழாமல், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கடந்த இரண்டு தேர்தல்களில் பெற்ற இடங்கள் மற்றும் வென்ற இடங்களை அடிப்படையாக கொண்டு, வரும் சட்டமன்றத் தேர்தலில் அவர்களுக்கு எவ்வளவு இடம் தரவேண்டும் என்கிற விவாதமாக நடக்கிறது.

கடந்த 2016 தேர்தலில் 41 இடங்களைப் பெற்ற காங்கிரஸ் அதில் 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இத்தனைக்கும் ஆட்சியில் இருந்த அதிமுக-வுக்கு எதிரான உணர்வு மேலெழுந்த தேர்தல் அது.

அந்த தேர்தலில் 178 இடங்களில் போட்டியிட்ட திமுக 89 இடங்களில் வென்றது. அதன் வெற்றி விகிதம் கிட்டத்தட்ட சரிபாதி. ஆனால், காங்கிரஸ் வெற்றி விகிதம் கால்வாசிக்கும் குறைவு. மிகக்குறைவான இடங்கள் வேறுபாட்டில் கூட்டணிக்கு தலைமை வகித்த திமுக ஆட்சி வாய்ப்பை இழந்தது.

அதற்கு முந்தைய 2011 தேர்தலில் அதே திமுக கூட்டணியில், அப்போது மத்திய ஆட்சியில் இருந்த காங்கிரஸ் 63 இடங்களை மிகவும் வலியுறுத்திப் பெற்றது. ஆனால், 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அந்த தேர்தலில் திமுகவின் வெற்றி சதவீதமும் குறைவுதான். 119 இடங்களில் போட்டியிட்ட அந்தக் கட்சி 23 இடங்களில் மட்டுமே வென்று ஆட்சியை இழந்தது. ஆனால், அதைவிடவும் மிகக் குறைவு காங்கிரசின் வெற்றி விகிதம்.

காங்கிரசின் வெற்றி விகிதம் தொடர்ந்து குறைவாக இருப்பது இப்போது கேள்விக்குள்ளாகிறது.

காங்கிரசின் ஸ்டிரைக் ரேட் வீழ்கிறது

இது குறித்து கேட்டபோது, மூத்த பத்திரிகையாளர், தி ஹிந்து ரீடர்ஸ் எடிட்டர், ஏ.எஸ்.பன்னீர்செல்வம் "காங்கிரசின் ஸ்டிரைக் ரேட் பல மாநிலங்களிலும் மிகவும் குறைந்திருக்கிறது" என்று கூறித்தான் தன் பேச்சைத் தொடங்கினார்.

2015 தேர்தலில் பிகாரில் 41 இடங்களைப் பெற்ற காங்கிரஸ் 27 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. தற்போது 70 இடங்களைப் பெற்று அதில் 19 இடங்களைத்தான் வென்றிருக்கிறது என்று கூறிய அவர், தமிழ்நாட்டில் கடந்த இரண்டு சட்டமன்றத் தேர்தல்களிலும் காங்கிரஸ் வெற்றி விகிதம் மிகக் குறைவாக இருப்பதை சுட்டிக்காட்டுகிறார்.

"எடுத்துக்காட்டாக, 2016 சட்டமன்றத் தேர்தலில் சென்னையில் மயிலாப்பூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் கராத்தே தியாகராஜன் அதிமுக வேட்பாளர், முன்னாள் டிஜிபி நட்ராஜிடம் தோற்றுப்போனார். ஆனால், அதற்கு மேலேயும் கீழேயும் உள்ள இரு தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் ஜெ. அன்பழகன், வாகை சந்திரசேகர் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

மோதி எதிர்ப்பு அலையிலும் தோற்ற காங்கிரஸ் தலைவர்

தமிழ்நாட்டில் கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் வீசிய மோதி எதிர்ப்பு அலையிலும், காங்கிரஸ் மாநிலத் தலைவராக இருந்த ஒருவர் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத்திடம் தோற்றுப் போகிறார்.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் ஸ்டிரைக் ரேட் வீழ்ந்திருக்கிறது. கர்நாடகத்தில் குறைந்திருக்கிறது. காங்கிரஸ் ஸ்டிரைக் ரேட் அதிகரித்திருக்கும் ஒரே மாநிலம் ராஜஸ்தான் மட்டும்தான்" என்கிறார் அவர்.

காங்கிரஸ் தலைமைப் பிரச்சனை தீர்க்கப்படாமல் இருக்கிறது. இந்நிலையில் இவர்களின் வெற்றிபெறும் விகிதமும் குறைவாக இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டும் அவர், இவர்களிடம் தொகுதியைக் கொடுத்து இழக்கவேண்டுமா அல்லது, தராமல் அதில் வெல்ல வேண்டுமா என்ற சங்கடம் இவர்களின் கூட்டணிக் கட்சிகளுக்கு வந்திருப்பதாகவும் கூறுகிறார்.

உழைத்தால் வெல்ல முடியும்

காங்கிரஸ் ஸ்டிரைக் ரேட் குறைந்ததற்கு என்ன காரணம் என்று கேட்டபோது, "வெறும் இடங்களைப் பெற்றால் மட்டும் போதுமானதல்ல. வெற்றிக்கு, கீழே இறங்கி உழைக்கவேண்டும். அப்படி உழைத்தால் காங்கிரஸ் வெல்ல முடியும் என்பதற்கு தமிழ்நாட்டில் சிறந்த எடுத்துக்காட்டு ஜோதிமணி. தொடர்ந்து பலமுறை நாடாளுமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற துணை சபாநாயகர், தொகுதியில் மிகுந்த செல்வாக்கு மிக்கவர் ஆகிய தம்பிதுரையை எதிர்த்து ஜோதிமணி வெல்கிறார். ஆனால், இதை ஒப்பிடும்போது பெரிய செல்வாக்கு இல்லாத ரவீந்திரநாத்திடம், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் தோற்றுப் போகிறார்" என்று குறிப்பிட்டார் பன்னீர்செல்வம்.

2009 மக்களவைத் தேர்தலில் காங்கிரசின் மத்திய அமைச்சர்களாகவும், மாநிலத் தலைவர்களாகவும் இருந்த மணிசங்கர் ஐயர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வி.தங்கபாலு போன்றவர்கள் திமுக கூட்டணியில் போட்டியிட்டு தோற்றிருக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டுகிறார் அவர்.

'தமிழ்நாட்டில் எதார்த்தத்தை புரிந்துகொள்வார்கள்'

பிகார் தேர்தலில் காங்கிரசின் நிலை, அதை ஒட்டி எழுந்திருக்கிற உரையாடல் தமிழ்நாட்டின் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் எதிரொலிக்குமா என்று கேட்டபோது, "அந்தக் கட்சியின் வெற்றிபெறும் திறன் குறைந்திருப்பதுதான் கூட்டணிக் கட்சிகளுக்குப் பிரச்சனை. இந்த பிகார் தேர்தல் முடிவுக்குப் பிறகு, எதார்த்தத்தைப் புரிந்துகொண்டு, நடைமுறை சாத்தியமான கோரிக்கைகளை வைக்கும் நிலைக்கு காங்கிரஸ் கட்சியும் மனரீதியாக தயாராகும் வாய்ப்பு உள்ளது.

தேஜஸ்வி யாதவ்
Getty Images
தேஜஸ்வி யாதவ்

ஒப்பீட்டளவில் காங்கிரஸ் கட்சிக்கு கூட்டணிப் பேச்சுவார்த்தையை நிறைவு செய்வது தமிழ்நாட்டைவிட மேற்கு வங்கத்தில்தான் பிரச்சனையாக இருக்கும். தமிழ்நாட்டில் அவ்வளவு பிரச்சனை வராது. மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்டுகளோடு கூட்டணி வைப்பதா அல்லது மம்தாவோடு கூட்டணி வைப்பதா என்பது அந்தக் கட்சிக்கு ஒரு தடுமாற்றத்தைக் கொடுக்கும். இந்த இரு கட்சிகளும் பாஜகவை எப்படி அணுகப் போகின்றன என்பதும் முக்கியக் காரணியாக இருக்கும்" என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த ஸ்டிரைக் ரேட் என்ற சொல்லையும் வாதத்தையுமே முன் வைக்கிறார் மற்றொரு மூத்த பத்திரிகையாளர் டி.எஸ்.கே. என்று அழைக்கப்படும் டி.சுரேஷ்குமார்.

"நேரு குடும்பத்துக்கு வெளியே முதல் முறையாக 10 ஆண்டுகள் இந்தியாவை பிரதமராக இருந்து ஆட்சி செய்தவர் மன்மோகன் சிங். அவரது சாதனைகளை அவர் தன்னுடையதாக்கிக் கொண்டுவிடக்கூடாது என்று நினைத்த காங்கிரஸ் தலைமை, அவர் பலவீனமான பிரதமர் என்ற பிம்பத்தை தொடர்ந்து தக்கவைத்தது. அந்த ஆட்சிக் காலத்தில் கட்சியையும் பலப்படுத்த தவறிவிட்டது.

மாநிலத் தலைமைகளை பிரித்தாளும் முயற்சியில் சரத் பவார், மம்தா பேனர்ஜி, ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் புகழை தம்வசம் வைத்திருந்த அவரது மகன் ஜெகன்மோகன் என பல தலைவர்களை இழந்தது. தமிழ்நாடு போன்ற ஒரு மாநிலத்தில் மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர்களை உருவாக்கவே இல்லை.

ஆட்சியை இழந்திருக்கிற இந்த நிலையிலும் அந்தக் கட்சியின் தலைமையை பிற அடிமட்டத் தலைவர்களால் அணுக முடிவதில்லை. தற்கொலை செய்துகொண்டு இறந்த முன்னாள் அருணாசலப் பிரதேச முதல்வர் கலிகோ புல், தம்மால் பல முறை முயன்றும் தலைமையை சந்திக்க முடியவில்லை என்று கடிதம் எழுதிவைத்திருந்தார்" என்று குறிப்பிட்ட சுரேஷ்குமார்,

மிகவும் பலவீனமான பாஜக தொடர்ந்து ஏதோ ஓர் அரசியல் செயல்பாட்டின் மூலம் தமது கட்சியை தமிழ்நாட்டில் செய்தியில் வைத்திருக்கிறது. ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு அப்படி ஒரு விசிபிலிட்டி (கவனம் கவரும்தன்மை) இல்லை. எனவே அவர்கள் பிராந்திய கூட்டணிக் கட்சிகளுக்கு சுமையாகத்தான் ஆகிவிடுகிறார்கள் என்கிறார்.

ஆனால், அப்படி காங்கிரஸ் கட்சியை ஒதுக்கி வைக்க முடியாது என்கிறார் அரசியல் விமர்சகர் ஆர்.ஷாஜகான். அது ஒரு தேசியக் கட்சி, அதற்குரிய முக்கியத்துவத்தை அளிக்கத்தான் வேண்டும். ஒரு தேர்தலை வைத்து, அந்த தேர்தலுக்கான கணக்குகளை வைத்து மட்டுமே இடங்களை ஒதுக்கக்கூடாது என்கிறார் அவர். பிகார் முடிவுகளை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு குறைவாக இடங்கள் ஒதுக்கவேண்டும் என்று எழுகிற வாதங்களையும் அவர் நிராகரிக்கிறார்.

ஆனால், இன்னொரு மூத்த பத்திரிகையாளர், இதழியல் பேராசிரியர் கே.என். அருண் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளுக்கு சுமையாகிவருகிறது என்கிற வாதத்தை வலியுறுத்துகிறார்.

அந்தக் கட்சிக்கு தற்போது பெரும்பாலான மாநிலங்களில் தலைவர்களும் இல்லை, தொண்டர்களும் இல்லை என்று குறிப்பிடும் அவர், அந்தக் கட்சி தம்மை வலுப்படுத்திக்கொள்ளவேண்டும். அல்லது, எதாரத்தத்தைப் புரிந்து அதற்கேற்ப கூட்டணி பேசவேண்டும் என்கிறார்.

அரசியலில் எதுவும் இலவசம் இல்லை. ஒரு கூட்டணி கட்சி தன்னோடு எப்படி அதிகாரத்தையோ, அல்லது செல்வாக்கையோ, வாக்குகளையோ பகிர்ந்துகொள்கிறது என்பதை கணக்கிட்டுதான் இன்னொரு கட்சி அதனுடன் இடத்தைப் பகிர்ந்துகொள்ளும். ஆனால், அந்த செல்வாக்கு, வாக்குகள் என்பதை எப்படிக் கணக்கிடுவது என்பதில்தான் வெவ்வேறு கட்சிகளுக்கு வெவ்வேறு பார்வை இருக்கும்.

காங்கிரஸ் கட்சி பலம் குறைந்துதான் இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளும் ஷாஜகான், ஆனால், ஒவ்வொரு மாநிலத்திலும் வெற்றி பெற முடியுமா என்று ஒரு கட்சிக்கு எவ்வளவு அச்சம் இருக்குமோ, அதற்கேற்பவே கூட்டணிக் கட்சிகளுக்கு இடத்தை விட்டுக்கொடுப்பார்கள். காங்கிரசுக்கும் அப்படித்தான். அதை வெளியில் இருந்து விமர்சிக்க முடியாது என்கிறார். 2019 மக்களவைத் தேர்தலில் கூட்டணி வைக்கவே விரும்பாத தேஜஸ்வி முற்றிலும் தோற்றுப் போன பிறகுதான் இந்த தேர்தலில் காங்கிரசுக்கு 70 தொகுதி தந்திருக்கிறார். அது அவரது அச்சத்தின் அளவைத்தான் பிரதிபலிக்கிறது என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
What did Bihar election results says about Congress as they lose in Bihar?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X