ப்ளூ வேல் விளையாட்டு தற்கொலைக்கு தூண்டுவது ஏன்?

By: அபர்ணா அலூரி - பிபிசி செய்தியாளர்
Subscribe to Oneindia Tamil
ப்ளூ வேல்
Getty Images
ப்ளூ வேல்

இந்தியாவிலுள்ள பதின்பருவத்தினர் மற்றும் இளைஞர்கள் பலர் சமீப காலமாக தற்கொலை செய்து கொள்வதற்கு காரணமாக கூறப்படும், வதந்தியாக வரும் இணைய சவாலான, நீலத் திமிங்கிலம் எனச் சொல்லப்படும் 'ப்ளூ வேல்' விளையாட்டானது நாடு முழுவதும் பீதியை கிளப்பியிருக்கிறது.

சில நாடுகளில் பதின்பருவத்தினர் தற்கொலை செய்துகொண்டதற்கு விசாரணைகளில் 'ப்ளூ வேல்' குறித்து பேசப்பட்டிருந்தாலும் ப்ளூ வேல் விளையாட்டு என்பது இணையத்தில் இருக்கிறதா, அதற்கும் இந்த தற்கொலைகளுக்கும் ஏதாவதொரு வகையில் தொடர்பு இருக்கிறதா என்பதை இதுவரையில் காவல்துறையினர் உறுதிப்படுத்தவில்லை.

தற்கொலை செய்து கொண்ட சில இந்திய குழந்தைகளின் பெற்றோர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில் அந்த விளையாட்டின் தூண்டுதலால் தங்கள் பிள்ளைகள் தற்கொலை செய்து கொண்டதாக குற்றம் சாட்டுகிறார்கள். இந்தக் குற்றச்சாட்டை இன்னமும் காவல்துறையினர் உறுதிப்படுத்தவில்லை.

சில இணையதள வல்லுநர்கள் புளூவேல் விளையாட்டு ஒரு புரளியாக இருக்கக்கூடும் என சந்தேகிக்கின்றனர். பிரிட்டனில் உள்ள இணையதள பாதுகாப்பு மையம் இதனை "பரபரப்பூட்டப்பட்ட போலிச் செய்திக் கதை" எனக் குறிப்பிடுகிறது.

ஆனால், இந்திய ஊடகங்கள் ப்ளூ வேல் மற்றும் தற்கொலைகள் இடையிலான இணைப்பு தொடர்பான செய்திகளை தொடர்ந்து பரவலாக வெளியிட்டு வருகின்றன. தற்போது உச்ச நீதிமன்றமும் இதில் கவனம் செலுத்தியுள்ளது. "அந்த விளையாட்டை தடை செய்வது சாத்தியமெனில் அதைச் செய்யவேண்டும்" எனக்கோரும் மனு ஒன்றை முன்வந்து விசாரித்திருக்கிறது.

பல உயர்நீதிமன்றங்களும், மாநில அரசுகளும் மற்றும் அதிகாரிகளும் தடை செய்ய வேண்டுமென்றே சொல்கிறார்கள். ஆனால் தடை செய்வதற்கு என்ன வகையான திட்டங்கள் வைத்திருக்கிறார்கள் என்பதை விளக்கவில்லை.

இதற்கிடையில் கூகுள், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட நிறுவனங்கள் ப்ளு வேல் விளையாட்டுடன் தொடர்புடைய தளங்கள், குழுக்கள், இணைப்புகள் போன்றவற்றை நீக்கவேண்டும் என இந்திய அரசு கூறியிருக்கிறது.

ஆனால் அதை எப்படிச் செய்ய முடியும் என்பது தெளிவுபடுத்தப்படவில்லை.

ப்ளூ வேல் விளையாட்டின் தீமைகள் குறித்து தங்களது மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கத் தொடங்கியுள்ளன பல பள்ளிகள். மேலும் பல பெற்றோர்களுக்கும் எச்சரிக்கை மணி அடித்திருக்கின்றன.

இந்தியாவின் வட மாநிலமான உத்தரபிரதேசத்தில் திறன் பேசிகளை பள்ளிகளில் பயன்படுத்த தடை விதித்துள்ளனர். பஞ்சாபில் உள்ள ஒரு பள்ளியானது மாணவர்கள் கையில் ஏதேனும் திமிங்கல வடிவிலான உருவங்கள் பச்சை குத்தப்பட்டுள்ளதா என்பதை அறிய அரை கைச்சட்டைகளை அணிந்து வருமாறு சொல்லியிருக்கிறது.

' ப் ளூ வேல்' என்பது என்ன?

இதன் தோற்றம் குறித்து சில குழப்பங்கள் உள்ளன. ஆனால் இறப்பதற்காகவே கரையில் ஒதுங்கும் திமிங்கிலங்களை குறிப்பிடவே 'நீலத் திமிங்கிலம்' என்ற பெயர் பயன்படுத்தப்படுவதாக நம்பப்படுகிறது.

ஆன்லைனில் உள்ள ஒரு குழுவொன்று இந்தப் பெயரைப் பயன்படுத்தி களமிறங்கியிருப்பாகச் சொல்லப்படுகிறது. ஒரு பொறுப்பாளரை நியமித்து இந்த விளையாட்டில் தனிப்பட்ட முறையில் பங்கெடுப்பவர்களை நிர்ணயிக்கப்பட்ட ஐம்பது நாள்களில் பல சோதனைகளில் தேர்ச்சி பெற ஊக்குவிக்கிறது.

இதில் பங்கெடுப்பவர்களுக்கு விளையாட்டின் ஒரு நிலையில் இருந்து அடுத்த நிலைக்குச் செல்ல, இரக்கமற்ற கொடூரமான காணொளிகளை பார்ப்பது, திகிலூட்டும் திரைப்படங்களை பார்க்கச் சொல்வது போன்ற நேரடியான நிபந்தனைகள் வைக்கப்படுகிறது.

உச்சக்கட்டமாக தற்கொலை செய்து கொள்வதும் இதில் ஒதுக்கப்படும் ஒரு பணியே எனக் கூறப்படுகிறது.

இந்தக் குழுவின் நோக்கம் இளைஞர்களை ஈர்ப்பது மட்டுமல்ல, அவர்களது மன ஆரோக்கியத்தில் சீரழிவை ஏற்படுத்தும் விளைவுகளை ஏற்படுத்துவதே !

பேஸ்புக் மற்றும் யூடியூபில் இருக்கும் இந்தக் குழுவில் ஆயிரக்கணக்கான நபர்கள் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ரஷ்யா, உக்ரைன், ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸ் மற்றும் பிரிட்டனைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் இந்தக் குழுவோடு தொடர்புடையதாக அடிபடுகின்றன.

'ப்ளூ வேல்' தற்கொலைகள் தொடர்பாக முதலில் ரஷ்ய ஊடகங்களில் வந்த செய்திகள் மதிப்பிழந்தன. Vkontakte எனும் ரஷ்ய சமூக வலைதளத்தில்தான் புளூவேல் பற்றிய விஷயங்கள் முதன்முதலாக பரவத் தொடங்கியது. அந்த சமூக வலைதளம், பத்தாயிரக்கணக்கான ப்ளூ வேல் ஹேஷ்டேகுகளை அடையாளம் கண்டுகொண்டதாக தெரிவித்துள்ளது.

ப்ளூ வேல்
Getty Images
ப்ளூ வேல்

ஆனால் ஒவ்வொரு நாளும் உள்ளூர் ஊடங்கங்களில் ப்ளூ வேல் தொடர்பான மரணங்கள் குறித்த செய்திகள் விளைவாக இந்திய பள்ளிகள் எச்சரிக்கையுடன் இருக்கின்றன.

"என்னுடைய சொந்தக் கருத்து என்னவெனில், இது போதை மருந்து போன்றது. இதில்முதல் படியையே எடுத்து வைக்கக் கூடாது" என பதினாறு வயதுடைய மாணவர்கள் நிறைந்த அறையில் சொல்லியிருக்கிறார் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஸ்ப்ரிங் டெல் பள்ளியின் முதல்வர் ராஜிவ் ஷர்மா.

"ஒரே ஒரு மந்திரத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். வாழ்க்கையை விட விலைமதிப்பற்ற விஷயம் வேறொன்றும் இல்லை" என அவர் அந்தக் கூட்டத்தில் பேசினார்.

ஷர்மா உரையாற்றிய அரங்கில் கலந்து கொண்ட ஷிவ்ராம் ராய் லுத்ரா என்ற மாணவர் பிபிசி இந்தியிடம் பேசுகையில் "ப்ளூவேல் குறித்து நான் மிகவும் பயந்து விட்டேன். இது உங்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடும். இது போன்றவற்றை முயற்சி செய்து பார்க்கவே கூடாது; இது குறித்து தேடவும் முயற்சிக்கக் கூடாது; அவ்வளவு ஏன் இதை பற்றி யோசிக்கவே கூடாது" என்றார்.

பள்ளி முதல்வரின் இதுபோன்ற முயற்சிகள் சிறந்தவை என எல்லோரும் கருதவில்லை.

" ப்ளூ வேல் குறித்து பள்ளிகளில் எச்சரிக்கை வகுப்பெடுப்பது ப்ளூவேலுக்கு விளம்பரமாகவே அமைகிறது" என பிபிசியிடம் பேசிய இணையதள ஆராய்ச்சியாளரான சுனில் ஆப்ரஹாம் தெரிவித்தார்.

"இணையதளத்தில் நடக்கும் ஏகப்பட்ட கொடுமைகள், பாலியல் பிரச்சனைகள் பற்றிய பல விஷயங்களை பற்றி பேசாமல் ப்ளூவேல் குறித்து மட்டும் தனியாக ஏன் பேச வேண்டும் ? நாம் ஒழுக்க நெறிகளை கடந்து செல்கிறோம் அதற்கு ஒழுக்கவியல் கல்வி என்பதே தேவை. அது மக்கள் தற்கொலை செய்து கொள்வதற்கான மூல காரணங்களை குறைத்து விடும் " என்றார் சுனில் ஆப்ரஹாம்.

ப்ளூ வேல்
BBC
ப்ளூ வேல்

இந்தியாவில் இளைஞர்கள் இறப்பதற்கான காரணிகளில் இரண்டாவது இடத்தில் இருப்பது 'தற்கொலை' என்கிறது 2012-ல் வந்த ஓர் ஆய்வு. வெகு சிலருக்கே தற்கொலைகளுக்கும் ப்ளூ வேலுக்கும் இடையிலான தொடர்புகள் தெரியும்.

"தற்கொலை செய்து கொள்ளும் இந்தக் குழந்தைகளின் வரலாறு நம்மில் யாருக்குமே தெரியாது. நாம் அனைவருமே ஒரு யூகத்தில் இதைச் சொல்லிக்கொண்டிருக்கிறோம்" என பிபிசியிடம் தெரிவித்தார் தொழில்நுட்பம் குறித்து தொடர்ச்சியாக எழுதிவரும் எழுத்தாளர் மாலா பார்கவா.

டெல்லியில் உள்ள மன நல மருத்துவரான அக்கல் பகத் பிபிசியிடம் பேசுகையில், தான் தினமும் பல இளைஞர்களிடம் பேசி வருவதாகவும் இதுவரை ப்ளூ வேலுடன் தொடர்புடைய ஒருவரைக் கூட எதிர்கொண்டதில்லை என்கிறார்.

மக்கள் தங்களது அனுபவங்களை சொல்லும்போது கதைகளையும் சேர்த்துக்கொள்வார்கள் எனச் சொல்லும் மருத்துவர் பகத், அந்த காரணத்தாலேயே வதந்தியாக சொல்லப்படும் இந்தச் சவாலில் பங்குகொண்டதாக எந்த ஆதாரமும் இன்றி சில குழந்தைகள் தெரிவிக்கிறார்கள் என்றார்.

ப்ளூ வேல்
Thinkstock
ப்ளூ வேல்

குழந்தைகளின் மன ஆரோக்கியம் குறித்து தெரிவிக்கையில் "மிகவும் புறக்கணிப்பட்டுள்ளது" ஏனெனில், இந்தியாவில் தற்கொலைகளை தடுக்க எந்த விதமான தேசிய திட்டமும் இல்லை. பள்ளிகளில் குழந்தைகளின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த எந்த வழிகாட்டுதல்களும் இல்லை " என்கிறார் மருத்துவர் பகத்.

"தினமும் குழந்தைகளிடம் எப்படி பேச வேண்டும் என்றே உங்களுக்குத் தெரியாதபோது, இது போன்ற நெருக்கடியான தருணங்களில் அவர்களிடம் எப்படி தொடர்பு கொள்ள வேண்டும் என உங்களுக்கு எப்படித் தெரியும் ?" என கேள்வி எழுப்பும் மருத்துவர் பகத், நாம் அவர்களிடம் எதைச் செய்யக்கூடாது என தெரிவிப்பதை விட குழந்தைகள் பேசுவதை நாம் காது கொடுத்து கேட்க வேண்டும் எனக் கூறுகிறார்.

ப்ளூ வேல் போன்ற யூகத்தின் அடிப்படையிலான விஷயங்கள் குறித்து அதிகம் பேசுவதை விட இளைஞர்கள் மத்தியில் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்ற விஷயங்களில் மீடியாக்களும் மற்றவர்களும் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துகிறார் மருத்துவர் பகத்.

ப்ளூ வேல் இணையதள சவாலால் ஈர்க்கப்பட்டிருக்கும் பதின்பருவத்தினர் குறித்து கவலைப்படும் பெற்றோராக நீங்கள் இருப்பின் அவர்களுக்கு உணர்வு ரீதியான ஆதரவு தேவைப்படும் பட்சத்தில் கண்டிப்பாக மனநல மருத்துவரை அணுக வேண்டும் என பெற்றோர்களுக்கு அறிவுரை கூறுகிறார் மருத்துவர் பகத்.

பிற செய்திகள் :

BBC Tamil
English summary
The rumoured internet challenge known as Blue Whale, which has recently been allegedly linked to several suicides by teenagers and young men in India, has set off near panic in the country.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற