விமானத்தில் தீவிரவாதி இருப்பதாக பொய் தகவல்... பெண் டாக்டர் மீது வழக்குப்பதிவு
டெல்லி: டெல்லியில் இருந்து துபாய்க்கு புறப்பட தயாராக இருந்த விமானத்தில் தீவிரவாதி இருப்பதாக விமான நிலையத்தக்கு தகவல் அளித்த பெண் டாக்கடர் மீது டெல்லி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு தனியார் விமானம் திங்கள்கிழமை காலை புறப்படவிருந்தது. அப்போது, அந்த விமானத்தில், தீவிரவாதிகளுடன் தொடர்புடைய ஒருவர் செல்வதாக சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்துக்கு தொலைபேசி மூலம் தகவல் வந்தது. அதையடுத்து, அந்த விமானத்தில் இருந்த பயணிகள் சோதனைக்கு உள்படுத்தப்பட்டனர். இதனால், மூன்று மணி நேரம் தாமதமாக அந்த விமானம் புறப்பட்டுச் சென்றது.
இதுகுறித்து டெல்லி காவல் துறை துணை ஆணையர் டி.கே.குப்தா கூறியதாவது:
மும்பையில் உள்ள "கல்ஃப் கேரியர்' எனும் தனியார் விமான நிறுவன அலுவலகத்துக்கு நேற்று அதிகாலை 5.30 மணிக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய பெண் ஒருவர், டெல்லியில் இருந்து துபாய்க்கு புறப்பட்டுச் செல்லும் விமானத்தில் தீவிரவாதிகளுடன் தொடர்புள்ள ஒருவர் பயணம் செய்வதாகக் கூறி இணைப்பைத் துண்டித்தார்.
இதுகுறித்து கல்ஃப் கேரியர் விமான நிறுவன அலுவலர்கள் டெல்லி சர்வதேச விமான நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, விமான நிலையம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. குறிப்பிட்ட அந்த விமானத்தில் செல்லும் பயணிகள் ஒவ்வொருவரும் தனித்தனியாக விசாரிக்கப்பட்டு அவர்களின் அடையாளம் சரிபார்க்கப்பட்டது. அப்போது அந்த மர்ம பெண் கூறியது போல விமானத்தில் யாரும் இல்லை என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர். அதன் பின்னர் விமானம் புறப்பட்டுச் சென்றது. இதனால் அந்த விமானம் மூன்று மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டு சென்றது.
பின்னர் விமான நிறுவனத்துக்கு வந்த தொலைபேசி அழைப்பு குறித்து விசாரணை நடத்தியதில், அதில் தெற்கு டெல்லியில் உள்ள பெண் மருத்துவர் ஒருவர்தான் இதை செய்தார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் அந்த விமானத்தில் பயணம் செய்ய ஒரு பயணிக்கும் பெண் மருத்துவருக்கும் தனிப்பட்ட பகை இருந்ததாகவும், அதன் காரணமாகவே இதுபோன்ற பொய் தகவலை பெண் டாக்டர் அளித்ததாகவும் தெரிய வந்துள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications