கண்ணீருக்கு விடை.. மீனவர் தினத்தில் வந்த “குட் நியூஸ்”! இலங்கையில் 14 தமிழ்நாடு மீனவர்கள் விடுதலை
கொழும்பு: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட காரைக்கால் மற்றும் நாகப்பட்டினத்தை சேர்ந்த 14 மீனவர்களை நிபந்தனையுடன் இலங்கை பருத்தித் துறை நீதிமன்றம் விடுதலை செய்து உள்ளது.
கடந்த 16 ந்தேதி காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நாகை மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த மீனவர்கள் ஆழ் கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்தனர்.
தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடிப்பு பகுதியான பருத்தித்துறை கடற்பரப்பில் அவர் மீன்பிடித்துக் கொண்டு இருந்த நிலையில் அங்கு இலங்கை கடற்படையினர் வந்து உள்ளனர்.

மீனவர்கள் கைது
அப்போது தமிழக மீனவர்களை தடுத்து நிறுத்திய இலங்கை கடற்படை அதிகாரிகள், 14 பேரையும் கைது செய்து படகை கைப்பற்றினர். இதனை தொடர்ந்து அவர்களை விசாரணைக்காக காரைநகர் கடற்கரை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

நிறைவடைந்த சிறைக் காவல்
14 மீனவர்களும் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை விசாரித்த நீதிபதி 21 ஆம் தேதி வரை சிறைகாவலில் வைக்க உத்தரவிட்டார். இந்த நிலையில் இன்று மீனவர்களின் சிறைக் காவல் காலம் நிறைவடைந்தது. இந்த நிலையில் இன்று காலை தமிழக மீனவர்கள் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்கள்.

விடுதலை
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை சுமத்திய குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி இன்று, தமிழக மீனவர்கள் 14 பேரையும் நிபந்தனையுடன் விடுதலை செய்ய உத்தரவிட்டது. இதனை அடுத்து இந்திய துணை தூதரக அதிகாரிகள் உதவியுடன் ஒரு சில நாட்களில் அவர்கள் சொந்த ஊர் அனுப்பி வைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராமேஸ்வரம் மீனவர்கள்
இதேபோல் கடந்த 14 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்க அனுமதி பெற்றுக்கொண்டு 2500க்கும் மேற்பட்ட மீனவர்கள் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் வழக்கம் போல மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர்.

பறிபோன பார்வை
அப்போது தமிழக மீனவர்கள் அருகே வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை விரட்டி அடித்ததோடு மட்டுமல்லாமல் அங்கு மீன்பிடித்துக் கொண்டிருந்த அந்தோணிய அடிமை என்பவருக்கு சொந்தமான படகை முட்டி மோதினர். அத்துடன் தமிழக மீனவர்கள் 8 பேரையும் அவர்கள் கடுமையாக தாக்கி உள்ளனர். இதில் ஜான்சன் என்ற மீனவர் 95% பார்வையை இழந்தது குறிப்பிடத்தக்கது.

தொடரும் தாக்குதல்
தமிழ்நாடு மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் தொடர்பாக இலங்கை அரசிடம் தமிழ்நாடு அரசும், இந்திய அரசும் பல முறை புகாரளித்து இருக்கின்றன. ஆனாலும், இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் குறையவில்லை. வாரத்திற்கு ஒரு முறை இதுபோன்ற தாக்குதலை அவர்கள் தொடர்ந்து நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. மீனவர் தினமான இன்று 14 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில் இதுவே கடைசி துயராக இருக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.












Click it and Unblock the Notifications