காபூல் தற்கொலை படை தாக்குதல்; 13 அமெரிக்க ராணுவ வீரர்கள் உட்பட 90 பேர் பலி: பொறுப்பேற்ற ஐஎஸ்ஐஎஸ்-கே
காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரில் நேற்று நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 13 அமெரிக்க ராணுவ வீரர்கள் உட்பட 90 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு, ஐஎஸ்ஐஎஸ்-கே அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் வரும் 31ம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் வெளியேற வேண்டும் என்று அந்த அமைப்பு கெடு விதித்தது.
அதே நேரம் தாங்கள் கடந்த காலத்தைப் போலல்லாமல் இனிமேல் பிற நாடுகளுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாகவும் அறிவித்திருந்தது.

ஜோ பிடன் எச்சரிக்கை
சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் செய்தியாளர்கள் சந்திப்பின்போது காபூல் நகரத்தில் இருந்து அமெரிக்க படைகள் , குடிமக்களை அவரவர் நாடுகளுக்கு பத்திரமாக அனுப்பி வைத்துக் கொண்டிருக்கின்றன. இதுவரை அமெரிக்க ராணுவம் பார்த்த மிகக்கடினமான வெளியேற்ற நடவடிக்கை இதுதான் என்றும், அமெரிக்க படைகள் மீது ஏதாவது தாக்குதல் நடைபெற்றால் எங்களது பதிலடி மிகத் தீவிரமாக இருக்கும் என்றும் எச்சரிக்கை பிறப்பித்திருந்தார்.

காபூல் விமான நிலையம்
இந்த நிலையில்தான் காபூல் விமான நிலையம் அருகே மற்றும் அருகே உள்ள ஹோட்டலில் அடுத்தடுத்து 2 குண்டுவெடிப்புகள் நேற்றிரவு நடைபெற்றன. அமெரிக்க ராணுவத்தை சேர்ந்த 13 பேர், கடல் படை மருத்துவர் ஒருவர் , மற்றும் 90 ஆப்கன் பொதுமக்கள், இந்த தாக்குதலில், கொல்லப்பட்டுள்ளனர்.120க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

ஜோ பிடன் ஆலோசனை
அதேநேரம், பொது மக்களை வெளியேற்றும் பணிகளை நிறுத்த மாட்டோம் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த குண்டுவெடிப்புக்கு, இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். இதனிடையே தாக்குதல் நடைபெற்றதும் உடனடியாக அமெரிக்க அதிபர் ஜோ பிடன், ஆலோசனை கூட்டம் நடத்தினர். அப்போது அவர் இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா பதிலடி கொடுக்கும், தாக்குதல் நடத்தியவர்கள் உரிய விலை கொடுக்க வேண்டி வரும் என்று தெரிவித்துள்ளார்.

பொறுப்பேற்பு
இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ்-கே தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஐஎஸ்ஐஎஸ்-கே அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி அமெரிக்க ராணுவத்திற்கு மொழிபெயர்ப்பு உதவி செய்தவர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது. அமெரிக்கா மற்றும் இந்திய உளவு அமைப்புகளுக்கும் இது தாக்குதலில் ஈடுபட்டது ஐஎஸ் அமைப்புதான் என்ற தகவல் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு பிறகு காபூல் நகரில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

யார் இவர்கள்
ஐஎஸ்ஐஎஸ்-கே என அழைக்கப்படும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் இந்த தற்கொலைப் படைத் தாக்குதலை நடத்தியதாகக் கூறியுள்ளனர். ஆனால் இதை உறுதி செய்ய இதுவரை ஆதாரங்கள் கிடைக்கவில்லை. ஐஎஸ்ஐஎஸ்-கோரசன் என்பது சிரியா மற்றும் ஈராக்கில் தோன்றிய ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதக் குழுவின் மற்றொரு பிரிவாகும். ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானை உள்ளடக்கிய பகுதிகளில் இவை செயல்படுகின்றன. கே என்பதற்கு, "கோரசன்." என்பது பொருளாகும். இஸ்லாமிக் ஸ்டேட் கோராசன் மாகாணம் என்பது இதன் முழு அர்த்தம்.












Click it and Unblock the Notifications