For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சொந்த கட்சியினரே சூனியம் வைக்கிறாங்களே... டொனால்ட் ட்ரம்ப்புக்கு அப்படி என்னதான் பிரச்சனை?

By Shankar
Google Oneindia Tamil News

வாஷிங்டன் (யு.எஸ்): குடியரசுக் கட்சியின் அறிவிக்கப்படாத வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப்புக்கு, ஒபாமா உட்பட எதிர்க்கட்சியினரின் தாக்குதல் ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் சொந்த கட்சியின் பெரிய தலைகளே எதிர்ப்பு காட்டுகிறார்கள்.

கடந்து வந்த பாதை

கடந்து வந்த பாதை

எந்த அரசியல் பின்புலமோ, அரசு பொறுப்பு அல்லது அரசியல் பதவியோ வகிக்காமல் நேரடியாக உட்கட்சித் தேர்தலில் போட்டியிட்டு, பெரும்பான்மை வாக்குகளும் டெலிகேட்ஸ் எண்ணிக்கையும் பெற்று அதிபர் வேட்பாளராகி விட்டார் ட்ரம்ப்.

முன்னதாக அவர் குடியரசுக் கட்சியில் இருந்து 2011ம் ஆண்டு வெளியேறி விட்டார். அதிபர் வேட்பாளருக்கு குறி வைத்துத் தான். மீண்டும் 2012 ல் இணைந்தார்.

பெரும் பணக்காரர், வெற்றிகரமான தொழிலதிபர், அரசியல் கறை படியாதவர், ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமானவர் என்பதால் ட்ரம்ப்-ஐ அமெரிக்க அரசியலில் ஒரு மாற்றமாகத்தான் பார்த்தனர்.

அதற்கு ஏற்றார் போல் அவரும், சொந்தக் கட்சி எதிர்க் கட்சி என்று பாகுபாடு இல்லாமல், அரசியல்வாதிகளை வெளுத்து வாங்கினார்.

அலைகடலென ஆதரவு

அலைகடலென ஆதரவு

நடுத்தர வர்க்கமோ 'வந்துட்டாரய்யா ஆபத்பாந்தவன்' என்று கொண்டாடினார்கள். குடியரசுக் கட்சியின் தொண்டர்களோ, ட்ரம்ப்தான் இந்த தேர்தலில் ஹிலரியைத் தோற்கடிக்கக் கூடியவர் என்று அவர் பின்னால் அணி திரண்டனர். பேரணிக்காகவும், கூட்டங்களுக்காகவும் ட்ரம்ப், வஞ்சனை இல்லாமல் பணத்தை வாரி இறைத்தார்.

உட்கட்சித் தேர்தலில் ட்ரம்ப்-க்கு எதிராக கட்சியின் ஜாம்பவன்களான ஜெப் புஷ், க்ரிஸ் கிரிஸ்டி போன்றவர்களால் தாக்கு பிடிக்கமுடியாமல் விரைவிலேயே விலகிவிட்டனர். ஃப்ளோரிடா செனட்டர் மார்க்கோ ரூபியோ சரியான போட்டியாக கருதப்பட்டார். அவரும் சொந்த மாநிலத்திலேயே தோல்வியைத் தழுவி, விலகிக்கொண்டார்.

இறுதிவரையிலும் மல்லுக்கட்டியவர் டெக்சாஸ் செனட்டர் டெட் க்ரூஸ். ஆனால் அவரும் கட்சித் தலைவர்களிடமிருந்து அன்னியப்பட்டு இருந்தவர் தான். தவிர அவருடைய தீவிர வலதுசாரிக் கொள்கைகளுக்கு பெருமளவில் ஆதரவு கிட்டவில்லை. கடைசி வரையிலும் களத்தில் இருந்த ஜான் கேசிக், ஒப்புக்கு சப்பு போட்டியாளராகவே இருந்தார்.

வாய்தான் கொஞ்சம் நீளமோ?

வாய்தான் கொஞ்சம் நீளமோ?

அரசியல்வாதிகளை ட்ரம்ப் கட்டம் கட்டி திட்டியதை குடியரசுக் கட்சி தொண்டர்கள் வெகுவாகவே ரசித்தனர். ட்ரம்ப்-க்கு ஆதரவும் பல மடங்கு பெருகியது. இறுதியில் கட்சியின் அதிபர் வேட்பாளராகவும் ஆகிவிட்டார்.

ஆனால், மெக்சிகோவிலிருந்து சட்டத்திற்கு புறம்பாக குடியேறிவர்கள் அனைவரும் கற்பழிப்பு குற்றவாளிகள், 12 மில்லியன் மக்களையும் நாடு கடத்த வேண்டும், பெண்கள் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துக்கள், இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை அனுமதி வழங்கக் கூடாது என்றெல்லாம் பேசியது, அவர் அதிபர் பதவிக்கு தகுதி வாய்ந்தவர் தானா என்ற கேள்விகளையும் எழுப்பியது.

ஏற்கனவே, கட்சி பாகுபாடில்லாமல் அரசியல்வாதிகளை வெளுத்து வாங்கிவிட்ட நிலையில், ட்ரம்ப்-ன் இத்தகைய பேச்சுக்கள், கட்சித் தலைவர்களுக்கு பெரும் சங்கடத்தையும், குடியரசுக் கட்சியை சிறுபான்மை மக்களிடமிருந்து முற்றிலும் விலகிச் செல்லவும் வைத்து விட்டது.

மணி கட்ட முயன்ற ராம்னி

மணி கட்ட முயன்ற ராம்னி

ட்ரம்ப்-ன் சர்ச்சைக்குரிய பேச்சுக்களை எதிர்த்து முதலில் குரல் கொடுத்தவர் முந்தய அதிபர் வேட்பாளார் மிட் ராம்னி தான். ட்ரம்ப் அதிபர் வேட்பாளராவது குடியரசுக் கட்சிக்கு பெரும் தோல்வியை ஏற்படுத்தும் என்று கூறி, டெட் க்ரூஸ்-க்கு ஆதரவு திரட்டினார். ஆனால் கட்சித் தொண்டர்கள் மத்தியில் எந்த தாக்கத்தையும் அது ஏற்படுத்தவில்லை.

ட்ரம்ப் யுனிவர்சிட்டி மீது மோசடி வழக்கு நடந்து வரும் நிலையில், அதை விசாரித்து வரும் உச்சநீதிமன்ற நீதிபதி. கன்சலோ குரியேல் மெக்சிகோ வம்சாவளியை சார்ந்தவர். ஆகையால் தனக்கு எதிரான வழக்கில் நேர்மையாக நீதி வழங்க மாட்டார் என்ற குற்றச்சாட்டை ட்ரம்ப் எழுப்பினார்.

கிடைச்ச கேப்பில் கிடா வெட்டிய தலைவர்கள்

கிடைச்ச கேப்பில் கிடா வெட்டிய தலைவர்கள்

இதுதான் சந்தர்ப்பம் என்று காத்திருந்தது போல், குடியரசுக் கட்சித் தலைவர்கள் ஒவ்வொருத்தரும், ட்ரம்ப்-க்கு எதிராக கொடி பிடிக்க ஆரம்பித்து விட்டனர். முன்னாள் அவைத்

தலைவர் நியூட் கிங்ரிச், ட்ரம்ப் ஒரு 'கொடுத்து வைத்த கத்துக்குட்டி' என்று வர்ணித்துள்ளார். ஆனாலும் ட்ரம்ப் குறிப்பிட்டது இனவாத பேச்சு இல்லை என்றும் கூறியுள்ளார்.

தற்போதைய அவைத் தலைவர் பால் ரயன், "ட்ரம்ப்-ன் பேச்சு கண்டிக்கதக்கது. இது ஏற்புடைய கருத்து அல்ல. நாட்டு மக்களின் ஆதரவைப் பெறுவதற்கு இத்தகைய கருத்துக்கள் உதவாது. இது போன்ற சம்பவங்கள் தொடராது என நம்புகிறேன். கட்சியினர் பெருமைப்படக்கூடிய வகையில் இனி தேர்தல் பிரச்சாரங்கள் அமைய வேண்டும் என்று விரும்புகிறேன்," என்று கூறியுள்ளார்.

செனட் அவைத் தலைவர் மிச் மெக்கானல், ட்ரம்ப்-க்கு நாட்டில் உள்ள பிரச்சனைகள் பற்றி தெரியவில்லை. அவருடைய பிரச்சாரங்கள் அவரை நல்ல அதிபர் வேட்பாளராக வெளிப்படுத்தவில்லை. இஷ்டத்துக்கும் கருத்துகளை சொல்லாமல், எழுதி வைத்தாவது படிக்கட்டும்," என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

கடைசி நிமிட த்ரில்லர் காட்சி?

கடைசி நிமிட த்ரில்லர் காட்சி?

பெரும்பான்மையான கட்சித் தொண்டர்களின் தேர்வு என்பதால் ட்ரம்ப் அதிகாரப்பூர்வ அதிபர் வேட்பாளராவதில் எந்த சிக்கலும் இருக்க வாய்ப்பில்லை. அனைத்து தலைவர்களும் ட்ரம்ப் தான் கட்சி வேட்பாளர் என்பதை தெளிவாக ஒப்புக் கொள்கின்றனர்.

ஆனால், அவருடைய பிரச்சாரத்தையும், திடீர் திடீரென்று ட்விட்டரில் வெளியிடும் கருத்துக்களையும் ஜீரணித்துக் கொள்ள முடியாத நிலையில் இருக்கின்றனர். ட்ரம்ப்- தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாவிட்டால் கட்சிக்கு பெரும் சேதம் ஏற்படும் என்ற அச்சம் நிலவுகிறது.

இன்னொரு பக்கம், கட்சி மாநாட்டில் டெலிகேட்ஸ்களை நிர்பந்தித்து ட்ரம்ப்-க்கு பதிலாக வேறொருவரை முன்னிறுத்தும் முயற்சியும் நடைபெறுகிறது. அப்படி நடந்தால் அது கட்சிக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், முக்கிய தலைவர்கள் இந்த முயற்சியை எதிர்த்து வருகின்றனர்.

ஒருமித்த குரலில் ஜனநாயகக் கட்சி

ஒருமித்த குரலில் ஜனநாயகக் கட்சி

ஒபாமாவை தொடர்ந்து, துணை அதிபர் பைடன், செனட்டர் எலிசபெத் வாரன் ஆகியோரது ஆதரவுக்குப் பின், ஹிலரிக்கு ஜனநாயகக் கட்சித் தலைவர்களின் ஒருமித்த ஆதரவு கிடைத்துள்ளது. அனைவரும் ஒரே குரலில் டொனால்ட் ட்ரம்ப்-ஐ விளாசத் தொடங்கியுள்ளனர்.

விரைவில் பெர்னி சான்டர்ஸும் ஹிலரிக்கு ஆதரவாக களத்தில் இறங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

நேற்று காலை ஹிலரியை, எலிசபெத் வாரன் சந்தித்துப் பேசினார். இருவரும் துணை அதிபர் தேர்வு குறித்து விவாதித்ததாக தெரிகிறது. 'இரண்டும் பெண்கள்' என்ற மந்திரத்துடன் களம் இறங்கக்கூடும். ஒட்டு மொத்தமாக பெண்கள் வாக்குகளை அள்ளிவிடவும் வாய்ப்புள்ளது.

ஹிலரியை தோற்கடித்து, வெற்றி பெற்றால் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க அரசியலில் புதிய வரலாறு படைப்பார். குடியரசுக் கட்சியும் நிலைபெற்று இருக்கும். ஹிலரி வெற்றி பெற்று விட்டால், ட்ரம்ப் அவரது தொழில்களை கவனிக்கப் போய்விடுவார். குடியரசுக் கட்சியின் நிலைதான் பெரும் பாடாகி விடும்.

எதிர்பாராத திருப்பங்களும் ஆச்சரியங்களும் நிறைந்தது தானே அமெரிக்கா! என்ன நடக்கும் என்று பார்க்கலாம்!

-இர தினகர்

English summary
Donald Trump, the Republican candidate for US presidential elections is facing challenges from his own party men.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X