ஹிஜாப் போராட்டம்.. இணையத்தை முடக்கிய ஈரான்.. இதோ இன்டர்நெட்! ஸ்டார் லிங்க்கை அனுப்பும் எலான் மஸ்க்

Subscribe to Oneindia Tamil

தெஹ்ரான்: ஈரானில் ஹிஜாபை எதிர்த்து போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், போராட்டத்தை முடக்க நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இன்டெர்நெட் வசதி துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டம் ஈரானை கடந்து கனடா வரையிலும் பரவியுள்ள நிலையில் ஈரானின் 'கலாச்சார காவலர்களுக்கு' எதிராக அமெரிக்கா நேற்று பொருளாதார தடையை அறிவித்தது.

இதன் தொடர்ச்சியாக ஈரானில் 'ஸ்டார் லிங்க்' இணைய வசதியை தொடங்கப்போவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இதன் மூலம் நேரடியாக இணைய வசதியை பெற முடியும்.

 கடும் கட்டுப்பாடுகள்

கடும் கட்டுப்பாடுகள்

இஸ்லாமிய சமயநெறிகளை கறாராக பின்பற்றும் நாடுகளின் பட்டியலில் ஈரானும் ஒன்று. இந்நாட்டில் பெண்கள் 9 வயது முதல் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சமயநெறிமுறைகள் சரியாக கடைப்பிடிக்கப்படுகிறதா? என்பதை கண்காணிப்பதற்கு காவல்துறையில் 'கலாச்சாரப் பிரிவு' ஒன்று தனியாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் ஹிஜாப் அணிவது, தொழுகைகளை முறையாக செய்வது ஆகியவை பின்பற்றப்படுகிறதா? என்பதை கண்காணிப்பார்கள். மேலும் இஸ்லாமிய மத நெறிமுறைகளை அவமதிக்கும் செயல்பாடுகளையும் கண்காணித்து அதற்கெதிரான நடவடிக்கையில் ஈடுபடுவோரை கைது செய்வார்கள்.

படுகொலை

படுகொலை

இந்நிலையில் கடந்த 15ம் தேதி குர்திஸ்தானை சேர்ந்த மாஷா அமினி (வயது 22) எனும் இளம்பெண் ஒருவர் தனது குடும்பத்துடன் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களை பரிசோதனை செய்த கலாச்சார காவல் குழுவினர், ஹிஜாப்பை சரியாக அணியவில்லையென்று மாஷா அமினி மீது தாக்குதல் நடத்தி கைது செய்தனர். காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கும் தாக்குதல்கள் தொடர்ந்துள்ளன.

போராட்டம்

போராட்டம்

இதனால் மயக்கமடைந்த மாஷா அமினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ஆனால் கோமாவில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 17ம் தேதி உயிரிழந்துவிட்டார். ஏற்கெனவே நாடு முழுவதும் ஹிஜாப் கட்டாயம் எனும் சட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்த படுகொலை சம்பவம் இப்போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது. அமினியின் சொந்த ஊரான சாகேஸ் பகுதியில் அமினியின் கல்லறை அருகே திரளான அளவில் திரண்ட பெண்கள் ஹிஜாபை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மோதல்

மோதல்

கடந்த 18ம் தேதி தொடங்கிய இந்த போராட்டம் காட்டு தீயை போல நாடு முழுவதும் பரவியுள்ளது. சுமார் 50 நகரங்களில் தற்போது போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டக்காரர்கள் இஸ்லாமிய குடியரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். இந்த போராட்டத்தின் போது பாதுகாப்புப் படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல போராட்டக்காரர்களின் தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் காயமடைந்ததாகவும் சொல்லப்படுகிறது.

அழைப்பு

அழைப்பு

கடந்த சில மாதங்களாகவே இதுபோன்ற அராஜக நடவடிக்கைகளை 'கலாச்சார காவல்துறையினர்' அதிகரித்து வருகின்றனர். இது தொடர்பாக சில வீடியோக்கள் வெளியாகியுள்ளன. அதில், ஹிஜாபை சரியாக அணியவில்லையென கூறி பெண்களை காவல்துறையினர் கன்னத்தில் அறைவதும், லத்தி கொண்டு தாக்குவதும், அவர்களை கைது செய்து வலுக்கட்டாயமாக காவல்துறை வாகனங்களில் ஏற்றுவதும் தெளிவாக தெரிகிறது. இதனையடுத்து அமினியின் மரணம் குறித்து விசாரணைக்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அலுவலகம் அழைப்பு விடுத்துள்ளது.

 பொருளாதார தடை

பொருளாதார தடை

மறுபுறத்தில் அமெரிக்கா இந்த 'கலாச்சார காவல்துறை'க்கு எதிராக பொருளாதார தடைகளை விதித்துள்ளது. அந்நாட்டு பெண்கள் மீதும், அமைதியாக போராட்டம் நடத்துபவர்கள் மீதும் கொடூரமான அடக்குமுறைகள் ஏவப்படுவதாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. இதனையடுத்து அரசுக்கு எதிராகவும், போராட்டத்தை தூண்டும் விதமாகவும் சமூக வலைத்தளத்தில் பதிவிடப்படும் கருத்துக்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் ஈரான் காவல்துறை தெரிவித்துள்ளது.

கனடாவரை பரவிய போராட்டம்

கனடாவரை பரவிய போராட்டம்

மேலும் போராட்டத்தின் தீவிரத்தை குறைக்கும் விதமாக கடுமையான இணைய கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதித்துள்ளது. பல பகுதிகளில் இணைய வசதி துண்டிக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்துவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த போராட்டம் தற்போது கனடாவரை நீடித்துள்ளது. பெண்கள் பலர் தங்களது ஹிஜாப்பை கழற்றி தீயிட்டு எரித்தும், குப்பைத் தொட்டியில் வீசியும் வருகின்றனர்.

ஈரானில் ஸ்டார் லிங்க்

ஈரானில் ஸ்டார் லிங்க்

பேச்சு சுதந்திரத்திற்கு எதிராக இணைய வசதி துண்டிக்கப்பட்டிருப்பதாகவும், எனவே எலான் மஸ்கின் 'ஸ்டார் லிங்க்' செயற்கைக்கோள் மூலம் இணைய வசதியை ஈரானில் ஏற்படுத்த அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் நேற்று டிவிட் ஒன்றை பதிவிட்டிருந்தார் அதில், "ஈரான் அரசாங்கத்தின் தடைகளை எதிர்த்து ஈரானிய மக்களுக்கு இணைய சுதந்திரம் வழங்கவும், அவர்களுக்கு இலவச இணைய சேவையை வழங்கவும் நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம்" என்று கூறியிருந்தார். இந்த டிவிட்டுக்கு பதிலளித்த எலான் மஸ்க் 'Activating Starlink ...' என்று கூறியுள்ளார். இதன் மூலம் ஈரானில் ஸ்டார்லிங்க் தனது சேவையை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+