For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொரோனா தடுப்பூசி இஸ்லாம் மதத்துக்கு ஏற்புடையதா? முஸ்லிம் நாடுகளில் தீவிர விவாதம் #FACTCHECK

By BBC News தமிழ்
|
கொரோனா
Getty Images
கொரோனா

உலகமே கொரோனா வைரஸால் கதி கலங்கிப்போயுள்ளது. அதன் தடுப்பூசி எவ்வளவு விரைவில் மக்களை சென்றடையும் என்று எல்லோருமே கவலையுடன் உள்ளார்கள்.

பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் தடுப்பூசி போடும் பணி ஏற்கனவே தொடங்கி விட்டது. ஆனால், மத காரணங்களுக்காக இந்த தடுப்பூசி முஸ்லிம்களுக்கு ஹலால் (ஏற்புடையது) என்றும் ஹராம் (விலக்கப்பட்டது) என்றும் சில நாடுகளில் விவாதம் தொடங்கியுள்ளது.

முஸ்லிம்கள் அதிகமாக வாழும் நாடுகளான இந்தோனீசியா மற்றும் மலேசியாவில் இந்த உரையாடல் ஆரம்பமாகியுள்ளது. இந்த இரு நாடுகளில் கொரோனா வைரஸின் தாக்கம் இந்தோனீசியாவில் அதிகம் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

தற்போது 6.71 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 20,000 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

கொரோனா
Getty Images
கொரோனா

ஹலால் சான்றிதழ் வழங்கல்

மற்ற நாடுகளைப் போலவே, இந்தோனீசியாவும் தடுப்பூசிகளுக்காக பல்வேறு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

அந்த நாடு சீனாவைச் சேர்ந்த சினோவேக் பயோடெக் நிறுவனத்துடன் தடுப்பூசிக்காக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தின் தடுப்பூசி மருந்து பரிசோதனை தற்போது நடந்து கொண்டிருக்கிறது.

இந்தோனீசியாவின் இஸ்லாமிய மதகுருக்களின் உயர்மட்ட அமைப்பான இந்தோனீசிய உலேமா கவுன்சில், தடுப்பூசிக்கு ஹலால் சான்றிதழ் வழங்குமாறு கேட்டபோது, தடுப்பூசியின் ஹலால் குறித்த விவாதம் தொடங்கியது.

அதே நேரம் மலேசியாவும் தடுப்பூசிக்காக ஃபைசர் மற்றும் சினோவேக் நிறுவனங்களுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. மேலும் இந்தத் தடுப்பூசி ஹலால் அல்லது ஹராம் என்பது குறித்து அந்த நாட்டிலும் முஸ்லிம் சமூகத்தினரிடையே விவாதங்கள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் தடுப்பூசி ஹராமா, ஹலாலா என்பது குறித்து பல்வேறு முஸ்லிம் நாடுகளில் கடும் விவாதம் நடந்து வருவதாக சமூக ஊடகங்களில் சித்தரிக்கப்படு வருகிறது.

ஆனால் உண்மை என்னவென்றால், இந்தோனீசியா மற்றும் மலேசியாவில் மட்டுமே இந்த விவாதம் நடைபெறுகிறது.

இந்த தடுப்பூசி ஹராம் ( இஸ்லாமிய சட்ட திட்டங்களுக்கு உட்பட்டது அல்ல) என அறிவிக்கப்பட்டுள்ளதாக பல பயனர்கள் சமூக ஊடகங்களில் வதந்திகளை பரப்புகின்றனர்.ஆனால் அது உண்மை அல்ல.

விவாதம் தொடங்கியது ஏன்?

இஸ்லாமிய மதத்தில், மது அல்லது பன்றி இறைச்சி போன்ற 'ஹராம்' விஷயங்கள் பயன்படுத்தப்படாத தயாரிப்புகள் 'ஹலால்' என்று அழைக்கப்படுகின்றன.

சமீபத்திய ஆண்டுகளில், முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத நாடுகளில் ஹலால் அழகு சாதனங்களின் பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி குறித்த ஹராம் அல்லது ஹலால் விவாதம் ஏன் தொடங்கியது என்ற கேள்வி இப்போது எழுகிறது.

ஒரு தடுப்பூசியை நீண்ட காலம் பாதுகாக்க பன்றி எலும்பு, கொழுப்பு அல்லது தோலில் இருந்து தயாரிக்கப்படும் ஜெலட்டின் பயன்படுத்தப்படுகிறது.

இருப்பினும், சில நிறுவனங்கள் பல ஆண்டுகளாக பணியாற்றி இவை இல்லாமல் தடுப்பூசிகளை தயாரிப்பதில் வெற்றி கண்டுள்ளன.

பன்றி இறைச்சி இல்லாத தடுப்பூசி

ஸ்விட்சர்லாந்து நிறுவனமான நோவார்டிஸ், மூளைக்காய்ச்சலுக்கு பன்றி இறைச்சி இல்லாத தடுப்பூசியை தயாரிப்பதில் வெற்றி அடைந்துள்ளது என்று அசோசியேடெட் பிரெஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.

அதே நேரத்தில், செளதி அரேபியா மற்றும் மலேசியாவை தளமாகக் கொண்ட ஏ.ஜே. ஃபார்மா, தனது சொந்த தடுப்பூசி தயாரிக்கும் பணியை முன்னெடுத்திருக்கிறது.

கொரோனா தடுப்பூசி ஹலால் அல்லது ஹராம் என்ற விவாதம் இங்கே முடிந்துவிடவில்லை.

பன்றி இறைச்சி ஜெலட்டின் பயன்பாட்டைத் தவிர கொரோனா தடுப்பூசியில் பன்றியின் டி.என்.ஏ பயன்படுத்தப்படுவதாகவும் பேச்சு அடிபடுகிறது.

தனது தடுப்பூசியில் என்ன பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்து சினோவேக் இதுவரை தகவல் வெளியிடவில்லை.

இஸ்லாத்தில் மனித வாழ்க்கை

பன்றி ஜெலட்டின் பயன்பாடு குறித்து முஸ்லிம்கள் மட்டுமல்ல, யூதர்களும் கவலை கொண்டுள்ளனர்.

யூத பழமைவாதிகள் பன்றி இறைச்சியையும் அதன் பொருட்களையும் பயன்படுத்துவதில்லை.

பன்றி ஜெலட்டின் மற்றும் டி.என்.ஏ மூலம் உருவாக்கப்பட்ட தடுப்பூசியை, முஸ்லிம்களோ அல்லது யூத சமூகங்களோ சமய காரணங்களுக்காக இனி பயன்படுத்த முடியாதா?

இஸ்லாத்தில் மனித வாழ்க்கைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்று ஜோத்பூரில் அமைந்துள்ள மெளலானா ஆசாத் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும், இஸ்லாமிய ஆய்வுகள் பேராசிரியருமான அக்தருல் வாஸே , பிபிசி இந்திக்கு அளித்த பேட்டியில், கூறினார்.

"ஒரு மனிதன் பசியுடன் இருந்தால், சாப்பிட ஒன்றும் இல்லை என்றால், அத்தகைய சூழ்நிலையில் மனித உயிரைக் காப்பாற்றுவதற்காக, ஹராமும் ஹலால் ஆகிறது. இஸ்லாமிய நீதிச் சட்டம் இவ்வாறு தெரிவிக்கிறது. கொரோனா தடுப்பூசி குறித்த இத்தகைய விவாதம் காரணமாக, உலகில் முஸ்லிம்கள் மற்றும் இஸ்லாத்தின் பிம்பம் மோசமாகவே இருக்கும், நல்லதாக இருக்காது," என்று அவர் மேலும் கூறுகிறார்.

முஸ்லிம் நாடுகளின் ஆட்சேபம்

ஆரம்பத்தில் போலியோ தடுப்பு மருந்து தொடர்பாக பாகிஸ்தான் உள்ளிட்ட சில முஸ்லிம் நாடுகளில் ஆட்சேபம் பதிவு செய்யப்பட்டது.

இதை மேற்கோள்காட்டி பேராசிரியர் வாஸே கூறுகையில், "போலியோ தடுப்பு மருந்து குறித்து என்ன நடந்தது என்பதை நாம் பார்த்தோம். ஆனால், இந்தியாவில் முஸ்லிம் மத தலைவர்கள் போலியோவைப் பற்றிய கவலையைப் புரிந்துகொண்டு தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் அளித்தது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த ஆதரவு, இந்தியாவில் போலியோ தடுப்பு நடவடிக்கையில் முக்கிய பங்கு வகித்தது," என்று குறிப்பிட்டார்.

"கொரோனா வைரஸின் ஒரு புதிய திரிபு, இப்போது பிரிட்டனில் உருவாகியிருப்பது தெரிய வந்துள்ளது. மனித உயிர் தொடர்பு என்பதால், வரவிருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி, நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்கும் பணியை செவ்வனே செய்ய வேண்டும் என்பது குறித்து மட்டுமே நமது கவலை இருக்க வேண்டும்,"என்று அவர் கூறினார்.

கொரோனா
Getty Images
கொரோனா

பன்றி இறைச்சி பயன்பாடு குறித்து விவாதம்

முஸ்லிம் நாடுகளில் ஹலால் தடுப்பூசி, பன்றி ஜெலட்டின் பயன்படுத்தப்பட்ட தடுப்பூசி ஆகிய இரண்டுமே இருந்தால், அந்த நாடுகள் எதைப் பயன்படுத்த வேண்டும்?

"எந்த தடுப்பூசி பயனுள்ளதாக இருக்குமோ மருத்துவர் அதைத் தேர்ந்தெடுப்பார். பன்றி ஜெலட்டின் தடுப்பூசி பயனுள்ளதாக இருந்தால், அதையே பயன்படுத்த வேண்டும்," என்று பேராசிரியர் வாஸே இந்தக் கேள்விக்கு பதிலளித்தார்.

யூத சட்டம் இயற்கையான முறையில் பன்றி இறைச்சியை பயன்படுத்துவதை அல்லது உண்பதை தடைசெய்கிறது என்று இஸ்ரேலில் உள்ள ரபினிக்கல் அமைப்பின் தலைவரான ராபி டேவிட் ஸ்டோ, செய்தி முகமை ஏ.பியிடம் தெரிவித்தார்.

"இது வாயால் அல்லாமல் ஊசி மூலம் கொடுக்கப்படுகிறதென்றால் அதற்கு எந்தத் தடையும் இல்லை குறிப்பாக நோய்த்தொற்று சூழல் நிலவும்போது," என்று அவர் விளக்கம் அளிக்கிறார்.

பன்றி இறைச்சி பயன்பாடு தொடர்பான விவாதங்களுக்கு மத்தியில், தங்கள் தடுப்பூசிகளில் பன்றி இறைச்சி பொருட்கள் பயன்படுத்தப்படுவதில்லை என்று ஃபைசர், மாடர்னா மற்றும் அஸ்ட்ராசெனிகா நிறுவனங்கள் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.

இதற்கு ஆதரவாக, பிரிட்டனின் இஸ்லாமிய மருத்துவ சங்கம் (பிரிட்டிஷ் ஐ.எம்.ஏ) ஃபைசர் தடுப்பூசி எல்லா வகையிலும் பாதுகாப்பானது என்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த தடுப்பூசியின் பயன்பாடு தற்போது பிரிட்டனில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஃபைசர் தடுப்பூசி தொடர்பாக மட்டுமே இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளதாக பிரிட்டிஷ் ஐ.எம்.ஏ தெரிவித்துள்ளது.

இந்த தடுப்பூசிக்காக முஸ்லிம் சுகாதார ஊழியர்கள், இஸ்லாமிய அறிஞர்கள் மற்றும் பல இஸ்லாமிய அமைப்புகளுடன் கலந்துரையாடியுள்ளதாக கூறும் அந்த அமைப்பு, இந்தத் தடுப்பூசியில் எந்த விலங்கின் பொருளும் பயன்படுத்தப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

BBC Tamil
English summary
Fact Check: Is Corona vaccine opt for Islam Religion? Debates in Gulf countries?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X