சீண்டி பார்க்கும் சர்மா ஒலி.. இந்தியாவிடம் இருந்து நேபாள பகுதிகளை மீட்கப் போவதாக சவடால் பேச்சு
காத்மாண்டு: "நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவிடம் உள்ள நேபாள பகுதிகளை மீட்டுக் கொண்டு வருவேன்" என அந்நாட்டு முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே இந்த விவகாரத்தில் இந்தியாவை சீண்டி பார்த்ததால்தான் அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் இந்தியாவை வம்புக்கு இழுக்கும் வகையில் சர்மா ஒலி பேசியுள்ளார்.
பல ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்பட்ட இடங்களை, நேபாளம் சொந்தம் கொண்டாடி வருவது சர்வதேச அளவில் பிரச்சினையை கிளப்பியுள்ளது.

நேபாளம் - இந்தியா உறவு..
நேபாளத்தில் பிரதமர் ஷேர் பகதூர் தேபா தலைமையில் நேபாளி காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது ஆட்சியில் இந்தியாவுடன் நேபாளம் நல்லுறவை பேணி வருகிறது. ராணுவம், வர்த்தகம், கலாச்சாரம் என அனைத்து துறைகளிலும் இரு நாடுகளுக்கு இடையே நல்ல ஒத்துழைப்பு இருந்து வருகிறது. நேபாளத்துக்கு பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் பல உதவிகளை இந்தியா செய்து வருகிறது. ஆனால், முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியின் போது நிலைமை தலைகீழாக இருந்தது. இந்தியாவுடன் தொடர்ந்து மோதல் போக்கை அவரது அரசு கடைப்பிடித்து வந்தது.

இந்தியா ஆக்கிரமித்ததாக குற்றச்சாட்டு..
சீனாவின் சொல்படி சர்மா ஒலி ஆடியதால், இந்தியா - நேபாளம் இடையேயான உறவு கசக்க தொடங்கியது. மேலும், இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள மகாகாளி நதிக்கு கிழக்கே அமைந்திருக்கும் காலாபானி, லிபுலேக், லிம்பியதுரா ஆகிய பகுதிகளை நேபாளத்துக்கு சொந்தமானவை என சர்மா ஒலி கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினர். பல ஆண்டுகளுக்கு முன்பே இந்தப் பகுதிகள் இந்தியாவின் ஒரு பகுதிகளாக அங்கீகரிக்கப்பட்டு விட்டன. ஆனால், பழங்கால ஒப்பந்தம் ஒன்றை சுட்டிக்காட்டி மேற்கூறிய பகுதிகளை நேபாளத்தில் இருந்து இந்தியா ஆக்கிரமித்துவிட்டதாக சர்மா ஒலி பேசி வந்தார்.

கவிழ்ந்தது சர்மா ஒலி ஆட்சி
சர்மா ஒலியின் இந்த பேச்சுக்கு இந்தியா அந்த சமயத்தில் கடும் கண்டனத்தை தெரிவித்தது. ஆனால், சர்மா ஒலி இந்த விவகாரத்தை விடவில்லை. மேலும், காலாபானி, லிபுலேக், லிம்பியதுரா ஆகிய பகுதிகளை சேர்த்து ஒரு புதிய நேபாள வரைப்படத்தை சர்மா ஒலி அரசு வெளியிட்டது. இதனை எதிர்க்கட்சியான காங்கிரஸ் மட்டுமல்லாமல், அவரது கட்சியில் உள்ள சில எம்பிக்களே எதிர்க்க தொடங்கினர். காலம் காலமாக உற்ற நண்பனாக இருந்து வரும் இந்தியாவை பகைக்கக் கூடாது என அவர்கள் கூறினர். இதன் தொடர்ச்சியாக, பல்வேறு விவகாரங்களில் கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த ஆண்டு சர்மா ஒலி ஆட்சி கலைக்கப்பட்டது. தொடர்ந்து, ஷேர் பகதூர் தேபா தலைமையில் புதிய அரசு அமைந்தது. அதன் பிறகு, இந்த விவகாரம் எழுப்பப்படவில்லை.

மீண்டும் இந்தியாவை சீண்டும் சர்மா ஒலி..
இந்நிலையில், ஷேர் பகதூர் தேபா தலைமையிலான நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ளது. இதனை முன்னிட்டு, வரும் 20-ம் தேதி அங்கு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பிரச்சாரம் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், எதிர்க்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் கே.பி. ஒலி இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், "நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நேபாளத்துக்கு சொந்தமான காலாபானி, லிபுலேக், லிம்பியதுரா ஆகிய பகுதிகளை இந்தியாவிடம் இருந்து நிச்சயம் மீட்கப்படும். நாட்டின் பாதுகாப்புதான் எங்களுக்கு பிரதானம். நேபாளத்தின் ஒரு அங்குல நிலத்தை கூட மற்ற நாடுகளுக்கு நாங்கள் கொடுக்க மாட்டோம்" எனப் பேசினார். சர்மா ஒலியின் இந்த பேச்சு மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவரது சொந்த கட்சியை சேர்ந்தவர்களே அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications