என்னது புது நாடுகளா? சீனா, பாகிஸ்தான் சேர்ந்து பலே பிளான்! 'பட்டுப்பாதைக்கு' இந்தியா கடும் எதிர்ப்பு
பீஜிங்: பட்டுப்பாதை திட்டத்தில் 3-ம் நாடுகளை இணைக்கும் சீனா மற்றும் பாகிஸ்தானின் திட்டத்துக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
வல்லரசு நாடான அமெரிக்காவுக்கு சவால் விடுக்கும் வகையில் அசூர வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளில் ஒன்று சீனா.
தற்போது சீனா தெற்காசியாவில் தனக்கு போட்டியாக உள்ள ஒரே நாடான இந்தியாவிடம் அவ்வப்போது வாலாட்டி வருகிறது.

இந்திய சீன எல்லை பிரச்சினை
மக்கள்தொகை பட்டியலில் உலகில் முதல் 2 இடங்களை வகிக்கும் இந்த இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை நிலவி வருகிறது. இந்திய பகுதிக்குள் அவ்வப்போது சீனா அத்துமீறி சாலை அமைப்பதும், உள்கட்டமைப்பு பணிகள் செய்ய முயற்சிப்பதும், அதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுப்பதும் என இந்திய-சீன எல்லையில் அவ்வப்போது சில சம்பவங்கள் நடைபெற்று பதற்றத்தை ஏற்படுத்திச் செல்கிறது. எல்லையில் அத்துமீறுவது மட்டும் இல்லாமல் பொருளாதார ரீதியாகவும் இந்தியாவுக்கு பல வழிகளில் சீனா குடைச்சல் கொடுத்து வருகிறது.

சீனாவின் கனவு திட்டம்
சர்வதேச அளவில் அமெரிக்காவிடம் போட்டிக்கு நிற்கும் சீனா, கடந்த 2013 ஆம் ஆண்டு 'பட்டுப்பாதை' எனப்படும் தனது கனவு திட்டத்தை தொடங்கியது. சி பி இ சி எனவும் வடக்கு-தெற்கு பொருளாதார பாதை எனவும் அழைக்கப்படும் இந்த திட்டத்தை ஜின்ஜியாங்க் மாகாணத்தில் இருந்து, பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மகாணத்தில் உள்ள குவாடார் துறைமுகத்தை இணைக்கும் வகையில், சாலை, இருப்புப் பாதை உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த பட்டுப்பாதை திட்டத்தின் மூலம் சீனா வணிகம் செய்ய எளிதான வழி கிடைக்கும்.

இந்தியா கடும் எதிர்ப்பு
தற்போதைய பாதையான தென் சீனக் கடல் பாதையை விட இது தூரம் குறைந்தது. ஏறத்தாழ 9 ஆயிரம் கி.மீட்டர் தூரம் அளவுக்கு பயணம் தூரம் குறையும். அதேபோல், பாகிஸ்தானுக்கும் இந்த திட்டத்தால் ஏராளமான பலன்கள் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. பாகிஸ்தான் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்பதால் தொழில் வளர்ச்சி செழிக்கும் என்று அந்நாடு நம்புகிறது. இந்த பாதை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக செல்வதால், இந்திய அரசு துவக்கத்தில் இருந்தே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 62 பில்லியன் கொண்ட இந்த திட்டத்தில் ஆர்வமுள்ள 3வது நாடுகளும் இணையலாம் என்று சீனா - பாகிஸ்தான் ஆகிய நாடுகள் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்தன. இதற்கு இந்தியா தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

சட்டத்திற்கு புறம்பானது
இது தொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்த பகச்சி செய்தியாளர்களிடம் கூறுகையில், " சீனா- பாகிஸ்தான் பொருளாதார பாதை திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் இது போன்ற நடவடிக்கைகள் முற்றிலும் சட்டத்திற்கு புறம்பானது. சட்ட விரோதமான இதை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. சிபி இ சி என சொல்லிக்கொள்ளும் திட்டத்தில் மூன்றாம் தரப்பு நாடுகளும் இணைந்து கொள்ளலாம் என முன்மொழியப்பட்டதாக தகவலை நாங்கள் அறிகிறோம். இது போன்ற நடவடிக்கைகளில் எந்த ஒருநாடும் ஈடுபட்டால் அது இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை நேரடியாக மீறும் செயலாக அமையும்"என்றார்.












Click it and Unblock the Notifications