ஈரான் போர் நின்றாலும் எரிபொருள் தட்டுப்பாடு.. 4 காரணம் இதுதான்... ஹார்முஸ் ஜலசந்தியில் நடப்பது என்ன?
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல், குறிப்பாக ஈரான் உடனான மோதல்கள், உலக நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. போர் நிறுத்தப்பட்டாலும் கூட, எரிசக்தி தட்டுப்பாடும் விலை ஏற்றமும் சரியாக மாற நேரம் பிடிக்கும் என்ற கவலை தற்போது அதிகரித்துள்ளது. இந்த நெருக்கடிக்கான ஆழமான காரணங்களையும் அதன் தாக்கங்களையும் இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.
ஈரான் போர் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்துத் தடைகள் உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தை நிலைகுலையச் செய்துள்ளன.

வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றி வரும் கப்பல்கள் இறக்குமதியாளர்களைச் சென்றடைய பொதுவாக ஒரு மாத காலம் வரை ஆகும். போர் காரணமாக கடந்த சில வாரங்களாக விநியோகம் தடைபட்டுள்ளதால், அதன் உண்மையான தாக்கம் வரும் மாதங்களில் தீவிரமாக உணரப்படும் என்று சர்வதேச எரிசக்தி முகமை எச்சரித்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி
குறிப்பாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் உலகின் 25 சதவீத கடல்வழி எண்ணெய் வணிகம் நடைபெறுகிறது. போர் நிறுத்தப்பட்டாலும், சேதமடைந்த உற்பத்தி நிலையங்களைச் சீரமைக்கவும், கடல்வழிப் பாதைகளை மீண்டும் பாதுகாப்பானதாக மாற்றவும் பல மாதங்கள் அல்லது ஆண்டுகள் கூட ஆகலாம். இதனால் போர் முடிந்த பிறகும் பெட்ரோலியப் பொருட்களின் விலை குறைய வாய்ப்பில்லை என்கிறார்கள்.
அதேபோல எரிசக்தி தட்டுப்பாட்டினால் பணவீக்கம் அதிகரித்து, பல நாடுகளின் பொருளாதார வளர்ச்சி முடங்கும் அபாய நிலை உருவாகியுள்ளது. அதிலும் வியட்நாம், பிலிப்பைன்ஸ் போன்ற வளர்ந்து வரும் நாடுகள் ஏற்கனவே எரிவாயு கொள்முதலைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.
பாகிஸ்தான் மின்வெட்டு
பாகிஸ்தான் கடும் மின்வெட்டை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்திய நிறுவனங்களும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக அதிக விலைக்கு எரிசக்திப் பொருட்களை வாங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளன. போருக்கு முன்பு இருந்த சாதாரண விலை நிலவரம் மீண்டும் திரும்புவது என்பது இப்போதைக்கு சாத்தியமற்ற ஒன்றாகவே வல்லுநர்கள் மதிப்பிடுகிறார்கள்.
எண்ணெய் விநியோகத்தை விட திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு சந்தை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.. கத்தார் போன்ற நாடுகளின் எரிவாயு ஏற்றுமதித் திறன் குறைந்துள்ளதால், சந்தையில் எரிவாயுவின் இருப்பும் வெகுவாக சரிந்துவிட்டது.. ஒருமுறை கொண்டு செல்லப்படும் எரிவாயுவின் விலை போருக்கு முந்தைய விலையை விட டபுள் மடங்கு அதிகரித்துள்ளது. இது உர தொழிற்சாலைகள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களின் செயல்பாட்டை நேரடியாகப் பாதிப்பதாக கூறப்படுகிறது.
ஈரான் போர் - எரிசக்தி தட்டுப்பாடு
இந்த இக்கட்டான சூழலில், ரஷ்யா போன்ற நாடுகள் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு எரிசக்தி வழங்க முன்வந்தாலும், ஒட்டுமொத்த உலகளாவிய தேவையைக் குறுகிய காலத்தில் ஈடுகட்டுவது கடினம் என்கிறார்கள்.. அதனால்தான் பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்த நெருக்கடியைத் தீர்க்க ராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளன.
அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் மற்றும் ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பான விவகாரங்களும் இந்த எரிசக்தி அரசியலில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
ஆக, ஈரான் போர் என்பது வெறும் ராணுவ ரீதியிலான மோதல் மட்டுமே கிடையாது.. அது உலக நாடுகளின் அடுப்படி முதல் தொழிற்சாலை வரை குறிப்பிடத்தக்க தாக்கத்தை செலுத்தும் எரிசக்தி யுத்தமாக மாறியுள்ளது. போர் நின்றாலும் சரி, அதன் காயங்கள் ஆறவும் எரிசக்தி சந்தை பழைய நிலைக்குத் திரும்பவும் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருக்கும் என்பதுதான் தற்போதைய நிலைமையாகும்...!!












Click it and Unblock the Notifications