அடிமடியிலேயே கைவைத்த இஸ்ரேல்.. யாரும் யாரை வேண்டுமானாலும் தாக்கலாம்? கையிலேயே காத்திருக்கும் எமன்!
பெய்ரூட் : காசா மீது மூர்க்கத்தனமாக போர் தொடுத்ததை போல தற்போது ஹிஸ்புல்லாவை அழிக்கிறேன் என்ற பெயரில் லெபனான் மீது தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கிறது இஸ்ரேல். இந்த நிலையில் இஸ்ரேலின் நடவடிக்கைகள் தனிமனித சுதந்திரத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் இருப்பதாகவும், தகவல் தொழில்நுட்ப சாதனங்களை வைத்து யாரும் யாரை வேண்டுமானாலும் தாக்கலாம் என்ற தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி உள்ளதாக விமர்சிக்கின்றனர் போர் நிபுணர்கள்.
காசா மீது கோரமாக தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலுக்கு எதிராக லெபனான் நாட்டில் இருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பினரும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அவர்களை குறி வைத்து பேஜர்களை வெடிக்க வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக பரபரப்பு புகார் எழுந்திருக்கிறது.

லெபனான் நாட்டில் இருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேலுக்கு எதிராக போராடி வரும் நிலையில் அவர்களது செல்போன்கள் உள்ளிட்டவை ஒட்டு கேட்பதாக புகார் எழுந்திருக்கிறது. இதை அடுத்து அவர்கள் தங்கள் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்காக பேஜர்களை பயன்படுத்தி வருகின்றனர்.
மொபைல் போன் பயன்படுத்தும் போது இஸ்ரேல் உளவு பார்க்கலாம் என்பதன் காரணமாகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் பேஜர்களை வைத்தே தாக்குதல் நடத்தி இருப்பதாக இஸ்ரேல் மீது பரபரப்பு குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது. கடந்த 17ஆம் தேதி தெற்கு லெபனான் தலைநகரான பெய்ரூட்டில் பல பேஜர்கள் திடீர் திடீரென வெடித்தன. குறிப்பாக ஹிஸ்புல்லா ஆயுத குழுவினர் வைத்திருந்த பேஜர்கள் அடுத்தடுத்து வெடித்ததாக கூறப்படுகிறது.
அடுத்தடுத்து பேஜர் வெடிப்புகள் நிகழ்ந்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் பெய்ரூட்டின் புறநகர் பகுதிகளிலும் ஹிஸ்புல்லா அமைப்பினர் வைத்திருந்த பேஜர்கள் வெடித்துச் சிதறின. லெபனான் மட்டுமல்லாது அந்நாட்டுக்கு வெளியேயும் பேஜர் வெடிப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. நாட்டில் சுமார் 1000 பேஜர்கள் வெடித்து சிதறியாக கூறப்படும் நிலையில் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த 37 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 2800க்கு மேற்பட்டோர் காயமடைந்து இருப்பதாகவும், பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆனால் தாக்குதல் குறித்து இஸ்ரேல் இதுவரை வாய் திறக்கவில்லை. அதே நேரத்தில் இஸ்ரேல் தான் தாக்குதலுக்கு காரணம் என ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் ஹிஸ்புல்லா மீது தாக்குதலை தொடங்கி இருக்கிறது. போர் விமானங்கள், ராக்கெட் லாக்கர்கள் உள்ளிட்டவை மூலம் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் 300-க்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்படுகிறது.
இஸ்ரேலின் நடவடிக்கைகள் சர்வதேச ரவுடி போல இருப்பதாக விமர்சனங்கள் எழுந்திருக்கிறது. இஸ்ரேலுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிய வேண்டும் என கோரிக்கையும் எழுந்திருக்கிறது. இதற்கிடையே இஸ்ரேல் நடத்தி இருப்பது சைபர் கிரிமினல் தனத்தின் உச்சம் என்கின்றனர் போர் நிபுணர்கள். கடந்த காலங்களில் பல்வேறு வகையிலான போர்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தகவல் தொழில்நுட்ப சாதனங்களை வைத்து தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது இதுவரை கண்டிராதது என்கின்றனர்.
இதனால் யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் தாக்கலாம் என்பது தவறான முன்னுதாரணம் என்கின்றனர். கடந்த காலங்களில் குற்றவாளிகள் அல்லது காணாமல் போனவர்களை தேடுவதற்காக அவர்களது செல்போன் சிக்னல் , ஜிபிஎஸ், சாட்டிலைட் உள்ளிட்ட வசதிகளோடு அவர்களை பின்தொடர்வார்கள். ஆனால் தற்போது இஸ்ரேல் நடத்தி இருக்கும் இந்த தாக்குதல் உலக மக்களின் தனி உரிமையை பாதிப்பது போல உள்ளது.
மேலும் தைவான் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் மூலம் வாக்கி டாக்கிகள், பேஜர்கள் வாங்கப்பட்ட நிலையில் அது இஸ்ரேலின் மொசாட் நிறுவனத்தில் ஏற்பாடு என்றும் போலியாக நிறுவனங்களை ஆரம்பித்து வாக்கி டாக்கிகள் மற்றும் பேஜர்களை விற்று, அதற்கு முன் அதில் வெடி மருந்துகளை நிரப்பி ஒரே நேரத்தில் வெடிக்க வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் உலகில் மற்ற ராணுவங்களும் தங்கள் தகவல் தொடர்பு சாதனங்களின் பாதுகாப்பு குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டி உள்ளது. பல நாடுகள் இஸ்ரேலிடமிருந்து போர் விமானங்கள், ஆயுதங்கள், தகவல் தொடர்பு சாதனங்களை வாங்கி இருக்கும் நிலையில் அதிலும் இஸ்ரேல் இதுபோன்ற ஏதாவது ஒரு வேலையை காட்டி இருக்குமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
மேலும் வருங்காலங்களில் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் போல மற்ற நாடுகளின் ராணுவங்கள், அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படாமல் இருக்க வேண்டும் என்றால் தாங்களாகவே தகவல் தொடர்பு சாதனங்களையும் ஆயுதங்களையும் உருவாக்க வேண்டும். மேலும் ஏற்கனவே இருக்கும் ஆயுதங்கள் தகவல் தொழில்நுட்ப சாதனங்களை அழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications