டார்கெட் ஹவுதி.. ஏமன் நோக்கி பாய்ந்த இஸ்ரேல் ஏவுகணைகள்.. மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த பதற்றம்!
தெஹ்ரான்: மத்தியக் கிழக்கில் கடந்த மாதம் மிகப் பெரிய மோதல் வெடித்திருந்தது. இஸ்ரேல் ஈரான் நாடுகள் நேரடியாக மோதிக்கொண்டன. அமெரிக்கா உள்ளே வந்து தாக்குதல் நடத்திய பிறகே அந்த மோதல் முடிவுக்கு வந்தது. இப்போது தான் அங்கு மெல்ல அமைதி திரும்பும் நிலையில், மீண்டும் ஏமன் மீது இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்துள்ளது.
மத்தியக் கிழக்கில் கடந்த சில காலமாகவே மோதல் போக்கு நிலவி வந்தது. குறிப்பாக இஸ்ரேல் ஈரான் இடையே கடந்த மாதம் நேரடியாகவே மோதல் வெடித்தது. ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதாகச் சொல்லி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அதற்கு ஈரானும் பதிலுக்குத் தாக்குதல் நடத்தியதால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு அமெரிக்கா பங்கர் பஸ்டர் தாக்குதலுக்கு பிறகே மோதல் முடிவுக்கு வந்தது.

இஸ்ரேல் படைகள்
இதற்கிடையே இஸ்ரேல் படைகள் இன்று திங்களன்று ஏமனில் ஹவுதி இலக்குகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியது. ஹவுதி படைகள் இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தியதற்குப் பதிலடியாக ஹொடைடா, ராஸ் ஈசா மற்றும் சாலிஃப் துறைமுகங்கள் மற்றும் கடற்கரையில் உள்ள ராஸ் காண்டிப் மின் உற்பத்தி நிலையம் ஆகியவற்றை இஸ்ரேல் தாக்கியதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலுக்குப் பிறகு ஹவுதி பதிலடி தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது. பதிலடியாக ஏமனில் இருந்து இரண்டு ஏவுகணைகள் ஏவப்பட்டன அவற்றை இடைமறிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும், இதனால் எந்தவொரு பாதிப்புகளோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என்பதை இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
செங்கடல் கப்பல்கள்
2023 அக்டோபர் மாதம் காசாவில் போர் தொடங்கியதில் இருந்து, ஹவுதி படைகள் இஸ்ரேல் மீதும், செங்கடல் பகுதியில் கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றன. இது உலக வர்த்தகத்தைச் சீர்குலைத்துள்ளது. பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாகவே இதுபோல தாக்குதலை நடத்துவதாக ஹவுதி குழு தெரிவித்துள்ளது.
2023ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஹவுதி படைகள் கேலஸ்கி லீடர் என்ற கப்பலைக் கைப்பற்றியது. அதை ராஸ் ஈசா துறைமுகத்தில் நிறுத்தியிருந்தனர். அந்தக் கப்பலில் ஹவுதி படைகள் ஒரு ரேடார் அமைப்பை நிறுவியுள்ளனர். அதன் மூலம் சர்வதேச கடல் பகுதியில் உள்ள கப்பல்களை கண்காணித்து வருகின்றனர் என்று இஸ்ரேல் ராணுவம் கூறியது. இதன் காரணமாகவே அந்தத் துறைமுகம் மீதும் இஸ்ரேல் தாக்குதலை நடத்தியுள்ளது.
அதேபோல அங்குள்ள மின் நிலையத்தில் தாக்குதல் நடந்துள்ளதால் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரச் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்தத் தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
பின்னணி
முன்னதாக ஹொடைடா அருகே சென்று கொண்டிருந்த கப்பல் மீது திடீரெனத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் கப்பலில் நீர் உள்ளே வர ஆரம்பித்தால் கப்பல் குழுவினர் வேறு வழியில்லாமல் கப்பலைக் கைவிட்டனர். இந்தத் தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை என்றாலும் ஹவதி தாக்குதலைப் போலவே இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதல் நடந்து சில மணி நேரங்களில் இஸ்ரேல் பதிலடி தாக்குதலை நடத்தியுள்ளது.
ஹவுதி உட்பட அங்குள்ள பல்வேறு ஆயுதக் குழுக்களுக்கு ஈரானே ஆயுதங்களை வழங்குவதாக அமெரிக்கா உட்பட அனைத்து மேற்குலக நாடுகளும் குற்றஞ்சாட்டி வருகின்றன. இருப்பினும், அதை அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்தே வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications