பிரதமர் பதவியிலிருந்து விலக மாட்டேன்.. கடைசி பந்து வரை நின்று ஆடுவேன்.. இம்ரான் கான் திட்டவட்டம்
இஸ்லாமாபாத்: பிரதமர் பதவியிலிருந்து நான் விலக மாட்டேன். கடைசி பந்து வரை களத்தில் நின்று விளையாடுவேன் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Recommended Video
பாகிஸ்தானில் பொருளாதார மந்தநிலை, விலைவாசி உயர்வு என பல்வேறு பிரச்சினைகள் தலை தூக்கியுள்ளது. இதற்கு அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானின் மோசமான ஆட்சியே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இந்த நிலையில் இம்ரான் கானுக்கு சொந்த கட்சி எம்பிக்களே எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கினர். இதையடுத்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான்கான் அரசு மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தாக்கல் செய்தன.

வாக்கெடுப்பு
இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வரும் ஞாயிற்றுக்கிழமை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இந்த நிலையில் இம்ரான் கான் தனது நிலைப்பாடு குறித்து தெரிவித்துள்ளார். அவர் தொலைகாட்சியில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறுகையில் நாடு கையை மீறி செல்கிறது. சுதந்திர பாகிஸ்தானில் பிறந்தவர்களில் முதல் தலைமுறை நான்தான். எனக்கு கடவுள் அனைத்தையும் கொடுத்துவிட்டதால் நான் அதிர்ஷ்டசாலி.

14 ஆண்டுகள் கஷ்டம்
22 ஆண்டு கால அரசியல் பயணத்தில் முதல் 14 ஆண்டுகளில் நான் ஏன் அரசியலுக்கு வந்தேன் என என்னை பார்த்து ஏளனமாக நிறைய பேர் சிரித்தார்கள். பாகிஸ்தான் உருவான காலத்திலிருந்து பல ஆண்டுகளாக வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

அடிமையாக இருக்க விரும்ப மாட்டேன்
என் நாடு அடிமையாக இருக்க நான் எப்போதும் விரும்பமாட்டேன். எந்த நாட்டிற்கும் நான் எதிரானவன் அல்ல. ஆனால் தவறான கொள்கைளுக்காக பலரை நான் விமர்சித்துள்ளேன். அரசியலில் சேர்ந்தவுடன் எனக்கு மூன்று லட்சியங்கள் இருந்தன. அவை நீதி, மனிதநேயம், தன்னம்பிக்கை ஆகியவற்றை உறுதிப்படுத்துவதுதான் அந்த 3 லட்சியங்கள்.

அமெரிக்கா
அமெரிக்கா பாகிஸ்தானை தங்கள் தேவைக்காக பயன்படுத்திவிட்டு பிறகு தூக்கி எறிந்தனர். இதுவரை பாகிஸ்தான் செய்த தியாகத்திற்கு எந்த வித நற்பெயரும் இதுவரை கிடைக்கவில்லை. அமெரிக்கா டிரோன் தாக்குதலின் போது பாகிஸ்தானியர்கள் கொல்லப்பட்ட போது எந்த அரசியல்வாதிகளும் குரல் கொடுத்ததே இல்லை. காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை இந்தியா ரத்து செய்த போது நான் குரல் கொடுத்தேன். ஆனால் இந்தியாவுக்கு எதிரான வெளிநாட்டு கொள்கையை நான் ஒரு போதும் பின்பற்றவில்லை என்றார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு
நம்பிக்கை வாக்கெடுப்பில் இம்ரான் கான் அரசு கவிழ்ந்தால் பாகிஸ்தான் மன்னிக்கப்படும். ஒரு வேளை இம்ரான் கான் அரசு வென்றால் பாகிஸ்தான் கஷ்ட காலங்களை சந்திக்கும் என சர்ச்சைக்குரிய ஒரு கடிதத்தில் உள்ளது குறித்தும் அவர் வெளிப்படுத்தினார். மேலும் அவர் கூறுகையில் வெளிநாடுகள் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதமருக்கு எதிராக நடந்து கொள்கிறார்கள்.

பிரதமர் பதவியிலிருந்து விலக மாட்டேன்
நம்பிக்கை வாக்கெடுப்பின் முடிவு என்னவாக இருந்தாலும் நான் வலிமையாக இருப்பேன். பாகிஸ்தானின் எதிர்காலம் ஞாயிற்றுக்கிழமை முடிவு செய்யப்படும். பாகிஸ்தான் எந்த வழியில் செல்வது என்பது குறித்து ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பு முடிவு செய்யும். பிரதமர் பதவியிலிருந்து நான் விலக மாட்டேன். வரும் 3ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க தயாராக உள்ளேன். இந்த நாட்டிற்கு துரோகம் நடப்பதை அனுமதிக்க மாட்டேன் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications