ஈராக் தீவிரவாதப் போரில் இணைந்த 4 மகாராஷ்டிர இளைஞர்கள்.. மீட்டுக் கொண்டு வர கோரிக்கை!
மும்பை: ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்தி வரும் போராட்டத்தில் இந்தியாவைச் சேர்ந்த 18 பேர் இணைந்துள்ளதாக செய்திகள் கூறும் நிலையில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த நான்கு பேரை மீட்டு இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
ஈராக் நாட்டில் அரசுக்கு எதிராக ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் போர் புரிந்து வருகிறார்கள். அவர்கள் அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளை தங்களது வசம் கொண்டு வந்து உள்ளனர். இந்த தீவிரவாதிகள் இந்திய நர்சுகளையும் கடத்தி சென்று, பின்னர் விடுவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.
இந்த போராட்டக் குழுவில் இந்தியாவைச் சேர்ந்த 18 பேரும் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தை சேர்ந்த 4 இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் சேர்ந்து இருப்பதாக பரப்பரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

நான்கு இளைஞர்கள்
தானே மாவட்டம் கல்யாணை சேர்ந்த ஏஜாஜ் பக்ருதீன் மஜ்ஜித் என்பவரின் மகன் ஆரிப் என்பதும், மற்ற 3 பேர் தானே நகரை சேர்ந்த தன்வீர் சேக், அமன் நைம், சகீன் பாரூக் என்பதும் தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும் 20 வயது கொண்டவர்கள் ஆவர்.

பொறியியல் மாணவர் ஆரிப்
ஆரிப், நவிமும்பையில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திடீரென மாயமானார். அவர் சமீபத்தில் தனது குடும்பத்தினருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார். அந்த கடிதத்தை பார்க்கும் போது அவர் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் சேர்ந்து இருப்பதாக நம்பப்படுகிறது.

போலீஸ் உதவி
இந்த கடிதத்தை குடும்பத்தினர் போலீசில் ஒப்படைத்து விட்டனர். இதேபோல ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் சேர்ந்ததாக கூறப்படும் மற்ற 3 பேரின் குடும்பத்தினரும் போலீசாரை அணுகியுள்ளனர். இதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

எப்படிச் சேர்ந்தனர்...
இளைஞர்கள் 4 பேரும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் சேர்ந்தது எப்படி? என்பது பற்றி தெரியவில்லை. அதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர்கள் 4 பேரும் மாயமானது பற்றி ஏற்கனவே போலீசில் புகார் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடும் அதிர்ச்சியில் தாய் தந்தை
இவர்கள் கடந்த மே மாதம் பெற்றோருக்கு தெரியாமல் புனித பயணம் மேற்கொண்டவர்களுடன் ஈராக் சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக புனித பயணம் மேற்கொண்டவர்களிடம் பெற்றோர் விசாரித்தனர். ஈராக் சென்றதும் அந்த இளைஞர்கள் தங்களை விட்டு பிரிந்து, போர் நடைபெறும் பலூஜா நகருக்கு சென்று விட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.இதனால் இளைஞர்களின் பெற்றோர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். தங்களது மகன்களை மீட்டு தருமாறு சம்பந்தப்பட்ட இளைஞர்களின் பெற்றோர் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்திக்கவும் திட்டமிட்டு உள்ளனர்.

மீட்டுக் கொண்டு வர சிவசேனா கோரிக்கை
இதற்கிடையே, தானேயை சேர்ந்த இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் சேர்ந்து இருப்பதாக வெளியாகி இருக்கும் பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிர அரசை வலியுறுத்தி உள்ளார்.