புதினிடம் மோடி வைக்கும் மேஜர் டிமாண்ட்! இன்று இந்தியா - ரஷ்யா உச்சி மாநாடு.. கவனிக்கும் உலக நாடுகள்
மாஸ்கோ: 2 நாள் பயணமாக பிரதமர் மோடி ரஷ்யா சென்றுள்ளார். நேற்று பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேசிய நிலையில் இன்று இருநாடுகள் இடையேயான உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி ராணுவம், எரிசக்தி உள்பட பல்வேறு துறை சார்ந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளனர். மேலும் இந்த வேளையில் உக்ரைன் போரை கைவிடும்படி பிரதமர் மோடி, புதினிடம் வலியுறுத்தலாம் என்ற பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ரஷ்யா.. இந்தியாவின் நீண்டகால நட்பு நாடுகளில் ஒன்று. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி நடத்தி வரும் நிலையில் அமெரிக்கா, பிரிட்டன் உள்பட பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன. ஆனால் இந்தியா எந்த பொருளாதார தடையும் விதிக்காமல் உள்ளது.

அதேவேளையில் உக்ரைன் மீதான போர் நடவடிக்கைளை ரஷ்யா கைவிட வேண்டும். பிரச்சனையை பேசி தீர்த்து கொள்ளலாம் என பிரமதர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் தான் பிரதமர் மோடி 2 நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக ரஷ்யா சென்றுள்ளார்.
அதாவது இந்தியா - ரஷ்யா இடையே ஒவ்வொரு ஆண்டும் உச்சி மாநாடு என்பது நடந்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக இந்த உச்சி மாநாடு நடைபெறவில்லை. இந்நிலையில் தான் இந்தியா-ரஷ்யா இடையேயான 22வது உச்சி மாநாடு ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் இன்று நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க வரும்படி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி 2 நாள் அரசு முறை பயணமாக ரஷ்யா சென்றுள்ளார்.
சிறப்பு விமானத்தில் நேற்று ரஷ்யா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் பிரதமர் மோடியை, ரஷ்யாவின் மூத்த துணை பிரதமர் டெனிஸ் மன்டுரோவ் வரவேற்றார். ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இந்திய வம்சாவளியினரும் நம் நாட்டின் தேசிய கொடியுடன் வந்து மோடியை உற்சாகமாக வரவேற்றனர்.
அதன்பிறகு பிரதமர் மோடி, அங்கிருந்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் நோவோ-ஓகாரியோவோவில் உள்ள இல்லத்துக்கு சென்றார். அங்கு பிரதமர் மோடியை பார்த்த விளாடிமிர் புதின் அவரை சிரித்த முகத்துடன் வரவேற்றார். மேலும் அவரிடம் கைக்குலுக்கி, கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இதையடுத்து பிரதமர் மோடிக்கு நேற்று இரவு விளாடிமிர் புதின் விருந்து அளித்தார். அதன்பிறகு இருவரும் சிறிது நேரம் பேசி கொண்டிருந்தனர். இந்த பேச்சுவார்த்தை என்பது சுற்றுப்பயணத்தில் குறிப்பிடப்படவில்லை. இந்த வேளையில் விளாடிமிர் புதின், ‛‛ மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். இது உங்கள் நாட்டின் தலைவராக பல ஆண்டுகளாக உழைத்தற்காக கிடைத்த பலனாக பார்க்கிறேன். நீங்கள் மிகவும் ஆற்றல் மிக்க நபர். உங்கள் முழு வாழ்க்கையையும் நாட்டு மக்களுக்காக அர்ப்பணித்துள்ளீர்கள். உங்களை பார்ப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது'' என வரவேற்று பேசினார்.
இதையடுத்து இன்று இந்தியா- ரஷ்யா இடையேயான 22-வது உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி, அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் சந்தித்து பேசி உரையாற்றவுள்ளனர். இந்த சந்திப்பின் போது, இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது பற்றி விவாதிக்க உள்ளனர். பரஸ்பர நலன்சார்ந்த பிராந்திய, சர்வதேச பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர். மேலும் பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளது.
அதாவது இந்தியா - ரஷ்யா இடையேயான ராணுவம், வர்த்தகம், முதலீட்டு உறவு, எரிசக்தி ஒத்துழைப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கல்வி, கலாசாரம், மக்களிடையிலான உறவு ஆகியவற்றில் இருதரப்பு உறவு குறித்து இருவரும் பேசி ஒப்பந்தம் கையெழுத்திட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் பிரதமர் மோடி கடந்த 2019ம் ஆண்டு முதல் முறையாக ரஷ்யா சென்றார். அதன்பிறகு அவர் ரஷ்யாவிற்கு செல்லவில்லை. இதற்கிடையே தான் கடந்த 2022ம் ஆண்டு ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடங்கியது. இந்த போர் 2 ஆண்டுகளை கடந்தும் நடந்து வருகிறது. இந்த போருக்கு பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்துள்ளார். மேலும் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தலாம் என்று சொல்லப்படுகிறது. இதனால் இந்த பயணத்தை அமெரிக்கா உள்பட மற்ற உலக நாடுகளும் உன்னிப்பாக உற்று நோக்கி வருகின்றன.












Click it and Unblock the Notifications