
"ரூ.15,000 கோடி!" தங்கத்தை கொள்ளையடிக்கும் ரஷ்யா.. தட்டிக் கேட்டாலே கிளோஸ்.. புலம்பும் சூடான் மக்கள்
மாஸ்கோ: பல ஆயிரம் கோடி மதிப்பிலான தங்கம் தங்கள் மண்ணில் இருந்தும் ஏழ்மை நிலையில் நாட்களைக் கழிக்கின்றனர் சூடான் மக்கள்! இதற்கெல்லாம் காரணம் யார் என பார்க்கலாம்.
கடந்த பிப் மாதம் உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போரைத் தொடங்கியது. பிப். 24ஆம் தேதி தேதி கிட்டத்தட்ட அனைத்து திசைகளில் இருந்தும் உக்ரைனை ரஷ்யா முழு வீச்சில் தாக்கத் தொடங்கியது.
இதற்குப் பல சர்வதேச நாடுகளும் கண்டனம் தெரிவித்தன. ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. இருப்பினும், இதற்கெல்லாம் ரஷ்யா அசைந்து கொடுக்கவில்லை.
விண்வெளிக்கும் சென்ற வல்லரசுகளின் சண்டை! சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து விலகும் ரஷ்யா

ரஷ்ய விமானம்
இதெல்லாம் ஒருபுறம் நடக்க அப்படியே வடக்கு ஆப்பிரிக்காவின் சூடான் நாட்டில் வேறு சில காட்சிகள் அரங்கேறிக் கொண்டு இருந்தன. போர் தொடங்கிய சில நாட்களிலேயே ரஷ்யாவுக்குச் சொந்தமான ஒரு சரக்கு விமானம் சூடான் தலைநகர் கார்டோம் விமான நிலையத்திற்கு வந்து இறங்கியது. விமானத்தில் குக்கீகள் எனப்படும் பிஸ்கெட்கள் மளமளவென ஏற்றப்பட்டது. இதில் வினோதம் என்னவென்றால் சூடானில் ஏற்றுமதி செய்யும் அளவுக்கு குக்கீஸ் உற்பத்தியே இல்லை.

சூடான் அரசு
இதனால் விமானத்தை ஆய்வு செய்யலாமா என கார்டோம் அதிகாரிகள் ஆலோசித்தனர். இருப்பினும், சூடானில் இருக்கும் ராணுவ ஆட்சிக்கும் ரஷ்யாவுக்குமான உறவு நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில், சோதனை செய்வது தங்களுக்குச் சிக்கலைத் தருமா என அவர்கள் அஞ்சினர். கடந்த காலங்களில் பல முறை ரஷ்ய விமானங்களில் சோதனை செய்யச் சென்ற அதிகாரிகள் கடைசி நிமிடத்தில் நிறுத்தப்பட்ட சம்பவங்கள் அவர்கள் கண் முன்னே வந்து சென்றது. ரஷ்யாவின் நடவடிக்கையில் தலையிட்டால் என்னவாகும் என அவர்களுக்கு நன்றாகவே தெரியும்!

ஒரு டன் தங்கம்
தீவிர ஆலோசனைக்குப் பின்னர் விமானத்தைச் சோதனையிடலாம் என முடிவு செய்தனர். விமானத்தில் வண்ணமயமான குக்கீஸ் பெட்டிகள் தான் முன்னே இருந்தது. ஆனால், அதற்குக் கீழ் மரப்பெட்டிகளில் சூடானின் விலைமதிப்பற்ற வளம் மறைக்கப்பட்டு இருந்தது. அது வேறு எதுவும் இல்லை.. தங்கம் தான்! எதோ ஓர் இரு கிலோ என நினைத்துவிடாதீர்கள். சுமார் ஒரு டன் எடையுள்ள தங்கத்தை அந்த ஒரே விமானத்தில் கடத்த ரஷ்யா திட்டமிட்டு இருந்தது.

ரஷ்யா திட்டம்
இந்தச் சம்பவத்தை சூடானின் பல அதிகாரிகள் உறுதி செய்தனர். சூடானில் இருந்து ரஷ்யாவுக்குத் தங்கத்தைக் கடத்தும் 16 விமானங்களில் இதுவும் ஒன்றாகும். உலக நாடுகளின் பொருளாதாரத் தடைகளுக்கு எதிராக ரஷ்யாவைப் பலப்படுத்தும் முயற்சியாகவே சூடானின் செல்வங்களை ரஷ்யா கொள்ளை அடித்து வருகிறது. இதற்காக சூடானின் ராணுவ தலைமையிலான அரசையும் ரஷ்யா கைக்குள் போட்டுள்ளது. இதன் மூலம் ஏழ்மையான சூடானில் இருந்து பல பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கத்தை ரஷ்யா கொள்ளை அடித்து உள்ளது.

ராணுவ ஆட்சிக்கு ஆதரவு
இதற்குப் பதிலாக சூடானின் அதிருப்தி நிறைந்த செல்வாக்கற்ற ராணுவ ஆட்சிக்கு அரசியல் மற்றும் ராணுவ ரீதியாக ரஷ்யா ஆதரவு கொடுத்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சூடானில் இருந்த மக்களாட்சியை அந்நாட்டு ராணுவம் கவிழ்த்தது. ரஷ்யா தான் இதில் முழுக்க முழுக்க பின்னணியில் இருந்ததாக இது குறித்து விவரம் அறிந்த பல அமெரிக்க அதிகாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். அதன் பின்னரே தங்க கடத்தல் விஸ்வரூபம் எடுத்தது.

அந்த ஒற்றை நபர்
இந்த மிகப் பெரிய தங்க கடத்தலில் அதிபர் புதினுக்கு நெருக்கமான எவ்ஜெனி பிரிகோஜின் என்ற ரஷ்யத் தொழிலதிபர் தான் முக்கியமானவர். அவரது மெரோ கோல்ட் என்ற நிறுவனம் தான் தங்கத்தை ரஷ்யாவுக்குக் கொண்டு வருகிறது. மறுபுறம் இதே நிறுவனம் தான் சூடானின் அரசு ராணுவத்திற்கு ஆயுதங்களையும் பயிற்சிகளையும் கொடுத்து வருகிறது. சூடானில் இருந்து ரஷ்யக் கட்டுப்பாட்டில் இருக்கும் சிரியா வழியாகவே ரஷ்யாவுக்குத் தங்கம் கடத்தப்படுகிறது. விமான டேட்டாக்களும் இதையே உறுதி செய்கிறது.

எல்லாமே கடத்தல்
கடந்த சில ஆண்டுகளாகவே சூடானில் இருந்து பெரும்பகுதி தங்கம் ரஷ்யாவுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. ஆனால், இவை அனைத்தும் அதிகாரப்பூர்வமாகச் செய்யப்படுவதில்லை. அனைத்து தங்கமும் கடத்தப்படவே செய்கிறது. சூடானில் ஒதுக்குப்புறமாக இருக்கும் கிராமங்களில் இருந்து வெட்டி எடுக்கப்படும் தங்கத்தை சுத்தம் செய்யவே நேரடியாக ரஷ்ய தொழிற்சாலைக்குத்தான் செல்கிறது. இதுவே அவர்கள் கட்டமைப்பை விளக்குவதாக உள்ளது.

15000 கோடி
அதிகாரப்பூர்வமாக சூடானில் இருந்து ரஷ்யாவுக்குச் சென்ற தங்கம் ஜூரோ தான் என்றாலும் கூட, இப்படிக் கடத்தல் மூலம் பல மில்லியன் டன் தங்கம் ரஷ்யாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு உள்ளது. இப்படிக் கடந்த 2021ஆம் ஆண்டு மட்டும் 32.7 டன் தங்கம் மாயமாகி உள்ளதாக சூடான் அதிகாரி தெரிவித்தார். இன்றை மதிப்பில் சுமார் ஆயிரத்திற்கு 15,000 கோடியாகும். ஏழ்மையான சூடானில் இருந்து ரஷ்யா ஒரு ஆண்டில் மட்டும் கடத்தி இருக்கும் தங்கத்தின் மதிப்பு இது. இந்த ஆண்டை சேர்த்தால் இன்னும் பல மடங்கு அதிகரிக்கும்.
Recommended Video

ஏழ்மையில் சூடான்
ஏற்கனவே கடுமையான ஏழ்மை நிலையில் இருக்கும் சூடானை ரஷ்யா மேலும் மேலும் சுரண்டி வருகிறது. அங்கிருக்கும் ராணுவ ஆட்சிக்கு ரஷ்யா முதுகெலும்பாக இருப்பதால் அவர்களும் இதைக் கண்டுகொள்வதில்லை. இதனால், சூடான் மக்களுக்குச் செல்ல வேண்டிய செல்வம் யாரோ சிலரது பாக்கெட்களுக்கு செல்கிறது. இதனால் பல ஆயிரம் கோடி சொத்து தங்கள் மண்ணில் இருந்தும் ஏழ்மை நிலையில் நாட்களைக் கழிக்கின்றனர் சூடான் மக்கள்.