துருக்கியை உலுக்கிய குண்டு வெடிப்பு.. 6 பேர் பலி! ஒருவர் கைது - மனித வெடிகுண்டாக இருந்தது பெண்ணா?
இஸ்தான்புல்: துருக்கி தலைநகர் இஸ்தான்புலில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 6 பேர் உயிரிழந்து உள்ளனர். 80க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரம் உலகின் பல நாடுகளை சேர்ந்த மக்கள் வந்து செல்லும் முக்கிய பகுதியாக உள்ளது. பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத இப்பகுதியில் நேற்று அரங்கேறிய தற்கொலைப்படை தாக்குதல் உலகையே உலுக்கியுள்ளது.
ஞாயிறு விடுமுறை நாளான நேற்று இஸ்தான்புலின் இஸ்திக்லால் பகுதியில் உள்ள பரபரப்பான கடை தெருவில் ஏராளமான மக்கள் திரண்டு இருந்தனர்.

குண்டுவெடிப்பு
அப்போது மாலை யாரும் எதிர்பாராத வகையில் அங்கு பயங்கர குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த குண்டுவெடிப்பு தாக்குதலால் அங்கிருந்த மக்கள் நிலைகுலைந்தனர். அதிர்ச்சியில் அங்கும் இங்குமாக தெறித்து ஓடினர். சம்பவ இடத்துக்கு ஆம்புலன்ஸுகள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.

6 பேர் பலி
அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்றன. இந்த குண்டுவெடிப்பில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 80 க்கும் அதிகமான மக்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ்களில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

பலர் படுகாயம்
பலத்த காயமடைந்தவர்கள் உயிருக்கு போராடி வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இஸ்தான்புல் ஆளுநர் அலி எலிகாயா தெரிவிக்கையில், "துருக்கி நேரப்படி ஞாயிற்றுக்கிழமை மாலை 4:20 மணியளவில் இந்த குண்டுவெடிப்பு தாக்குதல் நிகழ்த்தப்பட்டு இருக்கிறது." என்றார்.

போலீஸ் விசாரணை
தாக்குதல் நடைபெற்ற இடமான இஸ்திக்லால் கடைவீதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு காவல்துறை கட்டுப்பாட்டிற்குள் அப்பகுதி கொண்டு வரப்பட்டு உள்ளது. தடயங்களை சேகரித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

அதிபர் எர்டோவன்
தாக்குதல் நடைபெற்ற இஸ்திக்லால் கடை வீதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு மற்றும் 2017 ஆம் ஆண்டுகளிலும் இதேபோன்ற குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து துருக்கி அதிபர் ரிசன் தயீப் எர்டோவன் கூறுகையில், "பயங்கரவாத தாக்குதலுக்கான குறியீடுகள் இதில் தெரிகிறது." என்றார்.

தாக்கியது பெண்ணா?
துருக்கி துணை அதிபர் ஃபுவாத் ஒக்டாய், இஸ்தான்புலில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதல் என்று கூறி இருக்கிறார். தாக்குதலில் ஈடுபட்டவர் பெண்ணை போல் இருப்பதாகவும் அவர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டு உள்ளார். இதுகுறித்து அந்நாட்டு உள்துறை அமைச்சர் கூறுகையில், "தாக்குதல் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்." என்றார்.












Click it and Unblock the Notifications