
கடுமையான கட்டுப்பாடுகளுக்கு எதிராக கொதித்தெழுந்த மக்கள்..அதிகாரிகளுடன் மோதல்..சீனாவில் நடப்பது என்ன?
பீஜிங்: சீனாவில் மீண்டும் ஒருசில இடங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து இருப்பதால் அங்கு அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகளுக்கு எதிராக கொதித்தெழுந்த மக்கள் அதிகாரிகளுடன் சண்டையிட்டு வருகின்றனர்.
உலக நாடுகளை உலுக்கி கடும் உயிரிழப்புகளும் பொருளாதார பாதிப்பையும் ஒரு சேர ஏற்படுத்திய கொரோனா வைரஸ் முதன் முதலாக சீனாவில் தான் கண்டறியப்பட்டது.
கடந்த 2019- ஆம் ஆண்டு சீனாவில் பரவி உலகம் முழுவதிலும் சில வாரங்களில் ஊடுருவிட்டது. பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டு சென்ற கொரோனா தற்போது தடுப்பூசி தீவிரமாக போடப்பட்ட பிறகே அடங்கியிருக்கிறது.
டேஞ்சர்! அழிவை நோக்கி ஹைவே-இல் போகிறோம்.. எச்சரித்த குட்டரெஸ்! அப்படியே சீனா பக்கம் திரும்பி! பரபர

கடுமையான கட்டுப்பாடுகள்
முதன் முதலாக சீனாவில் கொரோனா பரவல் ஏற்பட்டாலும் அந்த நாடு கொரோனாவை மிக சிறப்பாக கையாண்டது. கடுமையான லாக்டவுன் அமல்படுத்திய சீனா, பல லட்சம் பேர் வசிக்கும் நகரத்தில் ஒருவருக்கு கொரோனா என்றால் கூட ஒட்டுமொத்த நகரத்திலும் லாக் டவுன் அமல்படுத்தி ஒருவர் கூட வீட்டை விட்டு வெளியேற முடியாத அளவுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. அதேபோல், மாஸ் டெஸ்டிங் என்று சொல்லப்படும் ஒரே நாளில் பல லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனைகளை நடத்தி தொற்று பரவலை கட்டுப்படுத்தியது.

பொருளாதார பாதிப்புகளை..
கொரோனா தொற்று கணிசமாக குறைந்து தற்போது உலக நாடுகள் பெரும்பாலும் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டாலும் சீனாவில் இன்னும் ஆங்காங்கே கட்டுப்பாடுகள் நீடிப்பதாக சொல்லப்படுகிறது. மக்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் அதற்கெல்லாம் கிஞ்சித்தும் கவலைப்படாத சீனா கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. பொருளாதார பாதிப்புகளை பற்றியும் அக்கறையின்றி சீனா கடுமை காட்டுவதாக அங்குள்ளவர்கள் எதிர்ப்பு காட்டாமலும் இல்லை.

ஜீரோ கோவிட் பாலிசி
இப்படி கடுமையான கட்டுப்பாடுகள் போட்டு கொரோனாவை கட்டுப்படுத்த முயற்சித்தாலும் கிடைக்கும் கேப்பில் எல்லாம் கொரோனா வைரஸ் ஊடுருவி அதிகரிக்கத் தொடங்கி விடுகிறது. இதனால், சீனாவுக்கு தலைவலி தீர்ந்தபாடில்லை. ஜீரோ கோவிட் பாலிசி என்பதை அமல்படுத்த கடும் கட்டுப்பாடுகளை சீனா விதித்து வரும் நிலையில் தற்போது கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு அங்கு கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது.

சீனாவில் அதிகரிக்கும் கொரோனா
இன்று ஒரே நாளில் மட்டும் சீனாவின் தொழில்நுட்ப நகரமான குவாங்சூ நகரில் மட்டும் 2,230 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், சீனாவின் பல நகரங்களில் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சீனாவின் வடகிழக்கு நகரங்களில் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளை ஏற்க மறுத்த சீன மக்கள் அதிகாரிகளுடன் மோதலில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

7 பேர் கைது
அதிகாரிகளுடன் மோதலில் ஈடுபட்ட பொதுமக்களில் சுமார் 7 பேரை கைது செய்துள்ளதாகவும் சீனாவில் சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின. எனினும், சிறிது நேரத்தில் இந்த செய்திகளை சென்சார் செய்து சீன அரசு அழித்துவிட்டது. இதன் காரணமாக இந்த கைது தொடர்பாக விரிவான தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

கடுமையான பின்விளைவுகள்
இதற்கிடையே, சீனாவின் ஷாண்டாங்க் சிட்டி போலீசார் பொதுமக்களுக்கு கடுமையாக எச்சரிக்கை விடுத்து அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில், கொரோனா கட்டுப்பாடுகளை மீறினால் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளனர்.