Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புலிகளுக்கு எதிராக இலங்கை ராணுவத்துக்கு உதவிய காங்கிரஸ் மத்திய அரசு - வைகோ

Subscribe to Oneindia Tamil

இதோ தலைவர் எனக்கு அளித்த சான்றிதழ். புறப்படுவதற்கு முதல் நாள் இரவு அவரிடம், தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு ஒரு கடிதம் எழுதிக் கொடுங்கள் என்று கேட்டேன். என்ன எழுதுவது? என்று கேட்டார். நீங்களே யோசித்து எழுதுங்கள் என்று சொன்னேன். அப்போதெல்லாம் ஒரு மர பெஞ்சில்தான் படுத்து இருப்பார். பங்கரில் இருந்தபோது, அவரது சுயசரிதையை எழுதும்படிக் கேட்டுக் கொண்டேன். வேண்டாம் என்றார்.அப்போது கிட்டு அண்ணா நீங்கள் கேட்டுப் பாருங்கள்.உங்களிடம் சொல்லுவார் என்றார். நான் கேட்டேன். இரண்டு மாதங்கள் அங்கேயே தங்கி இருக்கத் தீர்மானித்து இருந்தேன். ஐந்து நாள்கள் அவர் என்னிடம் தன் சுயசரிதையைச் சொன்னார். அதை ஒலிநாடாவில் பதிவு செய்தேன். இப்போதும் வைத்து இருக்கின்றேன். அன்று இரவு அவர் கடிதம் எழுதினார். பிறகு அதை ஒரு நோட்டில் அவரே எழுதிப் பிரதி எடுத்தார்.

Vaiko speaks on links LTTE, Prabhakaran and MGR

அந்தக் கடிதத்தின் ஒரு பகுதியை இங்கே வாசிக்கின்றேன். 22 பிப்ரவரி 1989 தமிழ் ஈழம். இது விடுதலைப்புலிகளின் லெட்டர் பேடு. அதில் அவர் தன் கைப்பட இந்தக்கடிதத்தை எழுதி இருக்கின்றார்.

பெருமதிப்பிற்குரிய அண்ணா அவர்களுக்கு (கலைஞருக்கு எழுதுகின்றார்).திரு கோபாலசாமி அண்ணா இங்கு வந்து என்னைச் சந்தித்துவிட்டு வருவதால் அவரிடம் இந்தக் கடிதத்தைக்கொடுத்து அனுப்புகிறேன். அவர் இங்கே வரும்போது உங்களிடம் சொல்லிவிட்டுத்தான் வந்திருப்பார் என்றுதான் நினைத்தேன். ஆனால், அவர் இங்கே வந்தபிறகுதான், உங்களிடம் சொல்லிவிட்டு வரவில்லை என்பதை அறிந்தேன். தமிழ் இனத்தின் மீது அவர் கொண்டுள்ள பற்றும், பாசமும்தான் அவரை இவ்வாறு செய்யத் தூண்டி உள்ளது.

அதேநேரம் அண்ணா, எமது மக்கள் இதுவரை நம்பி இருந்த பாராளுமன்றத் தலைமை, அற்பப் பதவிகளுக்காக அவர்களை நட்டாற்றில் விட்டுவிட்டு, எங்கள் இனத்தைக் காட்டிக் கொடுக்க முனைந்துள்ள வேளையில், தமிழகத்தில் இருந்து பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட எம்.பி. திரு வைகோபாலசாமி அண்ணா அவர்கள் தனது உயிரையும் பொருட்படுத்தாது, எவ்வளவோ சிரமங்களுக்கு மத்தியில், அடர்ந்த கானகத்தின் நடுவே என்னையும் என் தோழர்களையும் சந்தித்துப் பேச வந்துள்ள துணிச்சலையும், அவரது தமிழ்ப்பற்றையும் பார்க்கும்போது, நான் எனது மொழிக்காகவும், தமிழ் ஈழ நாட்டுக்காகவும், இன்னும் ஆயிரம் தடவை இறக்கலாம் என்னும் மனத்தென்பே ஏற்படுகின்றது.

என் வாழ்க்கையில் இதைவிட வேறு பட்டயம் வேண்டுமா? பிரபாகரனைப் போன்ற உயர்ந்த தலைவர் இருபதாம் நூற்றாண்டில் உண்டா? இந்த வைகோ என்ற அற்ப மனிதனின் துணிச்சலை நினைத்து ஆயிரம் முறை இறக்கலாம் என்று எழுதி இருக்கின்றார்.

ராஜபக்சே பிரதமராக இருந்தபொழுது, நாங்கள் இந்தியாவோடு ஒப்பந்தம் போடப்போகிறோம் என்று சொன்னான். நான் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களிடம் சென்றேன். இப்படிச்சொல்லுகிறானே என்று கேட்டேன். அதை நம்பாதீர்கள் என்றார். அடுத்து இரண்டு மாதங்கள் கழித்துப் பார்க்கின்றேன். ஒப்பந்தம் கையெழுத்து ஆகப்போகிறது என்று இந்து ஆங்கில ஏட்டில் செய்தி வந்திருக்கின்றது.

உடனே தில்லிக்கு ஓடினேன். பிரதமரைப் பார்த்தேன்.இதற்கு என்ன பதில் சொல்லப்போகின்றீர்கள்? இலங்கையோடு இராணுவ ஒப்பந்தம் போடப்போகின்றீர்களா? என்று கேட்டேன்.

உடனே வெளியுறவுத்துறைஅமைச்சர் நட்வர்சிங்கைத் தொலைபேசியில் அழைத்து, வைகோ வந்திருக்கின்றார். உங்களிடம் அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லி அனுப்பி வைத்தார். அவரது அலுவலகத்திற்குச் சென்று அவரைச் சந்தித்தேன். இலங்கையோடு இராணுவ ஒப்பந்தம் போடப் போகின்றீர்களா? எங்களை அழிக்கப் போகின்றீர்களா? என்று கேட்டேன்.

இல்லையே என்றவர், தன்னுடைய செயலாளரை அழைத்து, நாம் ஒன்றும் ஒப்பந்தம்போடப் போவது இல்லையே? என்றார். அந்த அம்மா துணிச்சல்காரர். மிஸ்டர் வைகோ சொல்வது சரிதான். நாம் ஒப்பந்தம் போடப்போகிறோம். அதற்காகக் கூட்டுஅறிக்கை வெளியிட்டு இருக்கின்றோம் என்றார்.

இந்தத்துரோகத்திற்கு ஒருக்காலும் மன்னிப்புக் கிடையாது என்றேன். இல்லையில்லை. நான் போக மாட்டேன் என்றார் நட்வர்சிங்.

அடுத்து ரடார்கள் கொடுத்தார்கள். போய்ச் சொன்னேன். பாகிஸ்தான் கொடுக்கப் போகிறது, சீனா கொடுக்கும் என்று சொன்னார்கள். அவர்கள் கொடுப்பார்கள். அவர்களது உறவுகள் யாரும் அங்கே இல்லை. ஆனால், நாங்கள் தொப்புள் கொடிஉறவுள்ள தமிழர்கள் ஏழுகோடிப் பேர் இங்கே இருக்கின்றோம். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, பெர்ணான்டஸ் இராணுவ அமைச்சராக இருந்தபோது, புலிகளுக்கு வந்த ஒரு கப்பலைக்கூட இந்திய இராணுவம் மறிக்கவில்லை. ஆனால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, இலங்கை அரசுக்கு ரேடார்களை வழங்கியது. ஆயுத உதவிகள் செய்தது. முப்படைத் தளபதிகளை அனுப்பி ஆலோசனைகள் கூறியது. அத்துடன், ஏழு வல்லரசுகளின் ஆயுத உதவிகளும் அவர்களுக்குக் கிடைத்தன. இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் சண்டை. ஆனால், இஸ்ரேலின் ஹைபர் ஜெட் விமானங்கள், ஈரானின் குண்டுகள் இலங்கைக்குக் கிடைத்தன. பாகிஸ்தானுக்கும்,இந்தியாவுக்கும் பகை. ஆனால் இரண்டு நாடுகளும் இலங்கைக்குக் ஆயுதங்கள் கொடுத்தன. சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் கெடுபிடிப் போர் இருக்கின்றது. இருவரும் இலங்கைக்கு உதவினார்கள். அமெரிக்க ஆயுதங்கள், பிரிட்டன் ஆயுத உதவிகள் கிடைத்தன.

இத்தனையும் எதிர்த்து ஒருவன் நின்றான் என்றால், அது என் தலைவன் பிரபாகரனைத் தவிர வேறு எவரும் கிடையாது. காட்டுக்குள் விமானங்களைத் தயாரித்து, ஓடுபாதை அமைத்து, கொழும்பு வரை பறந்து குண்டுகளைப்போட்டுவிட்டு வந்தது. மக்களுக்கு எந்த உயிர் ஆபத்துகளும் இல்லாமல் கட்டடங்களைத் தாக்கி விட்டுத் திரும்பி வந்தன. விமானத்தைக் கண்டுபிடித்த ரைட்சகோதரர்கள் மண்ணுக்குள் இருந்து புலிகளுக்கு சல்யூட் அடித்து இருப்பார்கள்.

நான் சுதந்திரத் தமிழ் ஈழம் மலர வேண்டும் என்பதற்காக வாழ்கிறேன்- வைகோ

2011 ஆம் ஆண்டு,பெல்ஜியம் நாடு மட்டும் எனக்கு விசா கொடுத்தது. பிரஸ்ஸல்ஸ் சென்றேன். ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்றக் கட்டடத்திற்குள் ஒரு அரங்கில் நடைபெற்ற மாநாட்டில் எல்லோருக்கும் பத்துநிமிடங்கள் பேச அனுமதிகொடுத்தார்கள். எனக்கு மட்டும் 15 நிமிடங்கள். ஆனால், நான் பதினேழரை நிமிடங்கள் பேசினேன். அப்போது சொன்னேன். சிங்கள இராணுவத்தினர் தமிழ்ப் பெண்கள் கர்ப்பிணிகளின் வயிறை பயனைட்கத்தியால் குத்தி, உள்ளே இருந்த கருவை எடுத்து மண்ணில் வீசினார்கள். ஆனால், என் தலைவன் பிரபாகரன் ஒரு சிங்களப் பெண்ணுக்குக் கூடக் கொடுமை இழைத்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார். யாரேனும் ஒரு சிங்களப் பெண்ணுக்கு விடுதலைப் புலிகள் பாலியல்கொடுமை செய்தார் என்று சொல்லுங்கள், என் வாழ்க்கையில் இனி தமிழ் ஈழத்தைப் பற்றிப் பேசுவதை விட்டு விடுகிறேன். இதை ஒரு சவாலாகச் சொல்லுகிறேன் என்று சொன்னேன்.

ஐ.நா.பொதுச்செயலாளர் பான் கி மூன் அமைத்த மூன்று உறுப்பினர்கள் குழு தந்த அறிக்கையில், மருத்துவமனைகளில் குண்டுகள் வீசியதைக் குறிப்பிட்டு இருக்கின்றார்கள். புது மத்தளான் மருத்துவமனையில் குண்டு வீச்சு. எந்த வசதிகளும் கிடையாது. மரங்களுக்குக் கீழே, கசாப்புக் கத்திகளை வைத்து அறுத்து ஆபரேசன் செய்தார்கள். கடைசிக்கட்டப் போரில் மட்டும், 1,37,000 தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். எங்கள் இசைப்பிரியாவை அவர்கள் எப்படிக் கற்பழித்துக் கொன்றார்கள் என்பதை எங்களால் வருணிக்க முடியாது என்று சேனல் 4 தொலைக்காட்சி சொன்னது. எட்டுத்தமிழ் வீர வாலிபர்களை அம்மணமாகக் கட்டி இழுத்துக்கொண்டு வந்து, காலால் மிதித்து மண்டியிடச் செய்து, பிடரியில் சுட்டுக் கொன்றார்கள். கபாலங்கள் பிளந்து ரத்த வெள்ளத்தில் மிதந்தார்கள். சேனல் 4 காட்டியது. அதைப் பார்த்துவிட்டுஅமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களே கண்ணீர் வடித்தார்கள். லண்டன் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அழுதார்கள். இது போர்க்குற்றம் அல்ல. இதுதான் இனப்படுகொலை.

இதை இன்று இந்த மனித உரிமைகள் கவுன்சிலில் சொன்னேன். இங்கே நீதி உண்டா? இல்லை, இல்லை, இல்லவே இல்லை.

2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இலட்சம் பேரைக்கொன்ற இலங்கை அரசைக் கண்டிப்பதற்காக, ஜெர்மனி உள்ளிட்ட 17 நாடுகள் ஒரு தீர்மானம் கொண்டு வந்தன. சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. ஆனால் என்ன நடந்தது தெரியுமா? தெரிந்து கொள்ளுங்கள். அந்தக் கூட்டத்தில் இலங்கை அரசாங்கத்தைப் பாராட்டித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்காக, இந்தியா, கியூபா, பொலிவியா ஆகிய நாடுகள் முழு வீச்சில் வேலை செய்தன. அங்கே இலங்கை உறுப்பினர் கிடையாது. ஆனால், அவன் எழுதிக்கொடுத்ததையே பாராட்டுத்தீர்மானமாக, இந்த ஐ.நா.மனித உரிமைகள் கவுன்சில் நிறைவேற்றியது. கொலைகாரனுக்குப் பாராட்டுத் தீர்மானம் போட்டது, இதோ எதிரே இருக்கின்ற மனித உரிமைகள் கவுன்சில். எங்கே இருக்கின்றது நீதி?

தமிழகத்தில் மாணவர்கள் கொந்தளித்தார்கள். இதோ ஜெனீவாவில் முருகதாசன் திடலில் நின்று பேசுகிறேன். தன் மேனியைச் சாம்பலாக்கிய தியாகி முருகதாசன் திடலில் நின்று பேசுகிறேன். செந்தில்குமாரன் திடலில் நின்று பேசுகிறேன்.

இங்கே ஈருருளைப் பயணமாகத் தோழர்கள் வந்திருக்கின்றார்கள். இவர்கள் பிரஸ்ஸல்சில் தங்கள் பயணத்தைத் தொடங்கியபோது நான் வாழ்த்து அறிக்கை கொடுத்தேன். அப்போது நான் நினைக்கவில்லை, எனக்கு விசா கிடைத்து இன்றைக்கு இங்கே வருவேன் என்று. ஐரோப்பாக் கண்டத்தின் பல்வேறு நாடுகளில் சிதறிக் கிடக்கின்ற தமிழ் ஈழ உறவுகளே, 18 ஆம் தேதி ஜெனீவாவுக்கு வாருங்கள். பல்லாயிரக்கணக்கில் வாருங்கள். ஒன்று திரளுவோம். நீதி கேட்போம். நீதி கிடைக்கும். நம் பக்கம் நியாயம் இருக்கின்றது என்று அறிக்கை கொடுத்தேன்.

ஒன்றை இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். தமிழன் என்றைக்கும் ஒற்றுமையாக இருந்தது கிடையாது. சங்க காலத்திலும் அப்படித்தான். அது ரத்தத்தோடு கலந்தது. மானம், வீரம், தன்முனைப்பு, ஈகோ. எனக்குத் தன்முனைப்பு கிடையாது.

நான் சுதந்திரத் தமிழ் ஈழம் மலர வேண்டும் என்பதற்காக வாழ்கிறேன். 53 ஆண்டுகளாக அரசியலில் இருக்கின்றேன். புலிகளின் தாகத்தை நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கையோடு இருக்கின்றேன். நம் பக்கம் நியாயம் இருக்கின்றது.

வட்டுக்கோட்டைப் பிரகடனத்திற்குப் பிறகு, தமிழ் ஈழ வரலாற்றில் இடம் பெறுவது பிரஸ்ஸல்ஸ் பிரகடனம்தான். 2011 ஜூன் மாதம் முதல் நாள் அங்கே பேசும்போதுதான் நான் முதன்முறையாக, தமிழ் ஈழம் அமையப் பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்ற கருத்தை முன்வைத்தேன். அதற்கு முன்பு தமிழ் ஈழத் தலைவர்கள் எவரும் பொது வாக்கெடுப்பு கேட்டது இல்லை. எந்தத் தமிழ்நாட்டுத் தலைவரு கேட்டது கிடையாது. எனக்கு மட்டும் அப்படித்தோன்றியதற்கு என்ன காரணம்? நான் என்ன மேதாவியா? இல்லை. மடிந்து போன மாவீரர்கள் சிந்திய செங்குருதியை நினைத்தேன். தன் உடலில் வெடிகுண்டுகளைக் கட்டிக்கொண்டு, கடலில் நீந்தி, 6000 டன் எடையுள்ள சிங்களப் போர்க்கப்பல் மீது மோதித் தகர்த்தாளே அந்த அங்கயற்கண்ணியை நினைத்தேன்.

அவள் தான் சாவதற்கு எந்த நாளைத் தேர்ந்து எடுத்தாள் தெரியுமா? நல்லூர் கந்தசாமி கோவில் திருவிழா நடைபெறுகின்ற நாளைத் தேர்ந்து எடுத்தாள். காரணம் என்ன தெரியுமா? அப்போதுதான் என் அம்மா கச்சான் விற்ற காசு கொஞ்சம் கையில் வைத்து இருப்பாள். நான் இறந்தால், நான்கு பேருக்குச் சாப்பாடு போடுவதற்கு அந்தப் பணம் அவளுக்கு உதவியாக இருக்கும் என்று தன் தோழிகளிடம் சொல்லிவிட்டு உயிர்த் தியாகம் செய்தாள். அந்த அங்கயற்கண்ணியை நினைத்தேன்.

பொது வாக்கெடுப்பு ஒன்றுதான் தீர்வு என்றுசொன்னேன். அதற்கு முன்பு தமிழ் ஈழத்தில் சிங்களக் குடியேற்றங்கள் அகற்றப்பட வேண்டும். சிங்கள இராணுவம் வெளியேற்றப்படவேண்டும்.சிறைகளில் அடைக்கப்பட்டுக் கிடக்கின்ற தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்.

அது மட்டும் அல்ல. இன்றைக்கு உங்களைப் போல உலகில் பல்வேறு நாடுகளில் பரவிக் கிடக்கின்ற ஈழத்தமிழர்கள் அனைவரும் அந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளத்தக்க வகையில் ஆங்காங்கு வாக்குப்பதிவு நடக்க வேண்டும். இனி ஆயுதப் போராட்டம் இல்லை. அது புதிய வடிவம் எடுக்கும். அதற்குப் பொதுவாக்கெடுப்புதான் தீர்வு என்றேன். இங்கே இந்த மேடையில் அதை நீங்கள் எழுதி வைத்து இருக்கின்றீர்கள். நான் ஒரு சாதாரணமானவன். ஆனால், பொது வாக்கெடுப்பை முதன்முதலாகச் சொன்னேன். இன்றைக்கு அதை நோக்கிப் பயணிக்கின்றோம்.

ஏன் முடியாது? நோர்வே பொது வாக்கெடுப்பில் தனிநாடு. ஸ்வீடன் தனிநாடு. ஐஸ்லாந்து பொது வாக்கெடுப்பில் தனிநாடு. 11,500 பேர்களே கொண்டு பரா தீவு, பொது வாக்கெடுப்பில் தனி நாடாக ஆனது. ரஷ்யா 15 நாடுகளாகப் பிரிந்து போனது. ஜார்ஜியா பொது வாக்கெடுப்பில் தனி நாடு. மால்டோவா தனி நாடு. குரேசியா, ஸ்லோவேனியா, மாசிடோனியா எல்லாமே பொது வாக்கெடுப்பில் மலர்ந்த நாடுகள்தான். எரித்ரியா, தெற்கு சூடான், கிழக்குத் தைமூரும் பொது வாக்கெடுப்பில் உருவான நாடுகள்தான். ஸ்காட்லாந்தில் இரண்டாவது முறையாகப்பொது வாக்கெடுப்பு நடத்தப் போகின்றார்கள். அங்கே பெண்களை இங்கிலாந்து இராணுவம் கற்பழிக்கின்றதா? பிள்ளைகளைக் கொல்கின்றார்களா? சர்ச்சுகள் மீது குண்டுகளை வீசுகின்றார்களா? ஒன்றும் கிடையாது. ஆனால் நான் ஸ்காட் தனி இனம் என்கிறான். வில்லியம் வாலேஸ் வாள் ஏந்திய இனம், இராபர்ட் புரூஸ் படை நடத்திய இனம். நாங்கள் உன்னோடு இருக்க மாட்டோம் என்கிறான். கடந்த முறை இரண்டு விழுக்காடுதான் ஆதரவு குறைவு. எனவே, அடுத்த பொது வாக்கெடுப்பில் ஸ்காட்லாந்து தனிநாடு ஆகப் போகின்றது.

இவர்களை விட ஆயிரம் மடங்கு நியாயமான காரணங்கள் நமக்கு உண்டு. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நாம் தனி இனம், தனி நாடு அமைத்து வாழ்ந்தவர்கள்.

இவ்வளவு தமிழர்கள் உயிர் நீத்தார்களே, அவர்களது தியாகம் பேசும். எங்கள் மாவீரர்களின் துயிலகங்களை உடைத்து நொறுக்கினீர்களே, அதற்குள்தான் அவர்களது எலும்புகள் இருக்கின்றன. அவர்களது மூச்சுக்காற்று அங்கேதான் உலவிக்கொண்டு இருக்கின்றது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+