For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்காவின் புதிய இந்தியத் தூதருக்கு வாஷிங்டனில் கோலாகல வரவேற்பு!

By Shankar
Google Oneindia Tamil News

அமெரிக்காவிற்கான புதிய இந்திய தூதராக, புதியதாகப் பொறுப்பேற்றுள்ள நவ்தேஜ் சர்னாவுக்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் வாஷிங்டன் நகரில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தினர்.

அவரை வரவேற்கும் விழாவாக மட்டுமன்றி, இந்தியத் தூதரகத் துணைத் தலைமை அதிகாரி தரன் ஜித் சிங் சன்டு அவர்களுக்கு வழியனுப்பும் விழாவாகவும் இது அமைந்தது. இந்த விழாவினை வாஷிங்டன் வட்டார அமெரிக்கவாழ் இந்தியர்களில் முக்கியஸ்தர்கள், சுனில் சிங், டாக்டர். சம்பு பானிக், ஹர் ஸ்வரூப் சிங், டாக்டர். யோகேந்திர குப்தா, இந்திய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் கோபிநாத், மற்றும் அதன் நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

Washington Indians welcome New Indian Ambassador for US

பிரம்மாண்ட அரங்கமொன்றில் நடந்த இவ்விழாவினை ஜிடிவி-யின் முதன்மை அதிகாரி நிலிமா மெஹ்ரா தொகுத்து வழங்கினார். விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் டாக்டர் யோகேந்திர குப்தா வரவேற்றுப் பேசினார்.

அடுத்து மேரிலாந்து மாநில வெளியுறவுத் துறை இணைச் செயலராக 2011 முதல் 2015 வரை கவர்னர் ஓமேலியின் அரசில் அங்கம் வகித்து சாதனை புரிந்து, தற்போது அம்மாநிலப் போக்குவரத்து ஆணையராகப் பணி புரியும் டாக்டர் நடராஜன், இந்தியத் தூதர் சர்னாவை வரவேற்றுப் பேசினார். அவருக்காகவும் துணைத் தலைமை அதிகாரி தரன் ஜித் சிங் சன்டுக்காகவும், அவையோரை அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அவர்கள் கரவொலி எழுப்பி அரங்கத்தினை அதிர வைத்தனர்.

அடுத்து அமெரிக்கவாழ் இந்தியர்களில் முக்கியஸ்தர்கள் பேசினர்.

Washington Indians welcome New Indian Ambassador for US

இந்தியத் தூதரகத் துணைத் தலைமை அதிகாரி தரன் ஜித் சிங் சன்டு ஏற்புரை நிகழ்த்தினார். அப்போது, விழா ஏற்பாட்டளர்களுக்கும், அவையோரின் நல்லாதரவிற்கும் உளங்கனிந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார். அடுத்து இலங்கைக்கு இந்தியத் தூதராகப் பொறுப்பேற்கவிருப்பதைக் குறிப்பிட்டுப் பேசினார்.

அவர் இலங்கைத் தமிழரின் பிரச்சினைகளைக் களையும் விதமாக நடவடிக்கைகள் அவர் எடுப்பார் என்று நம்பிக்கை தெரிவித்தனர் அமெரிக்க வாழ் தமிழர்கள்.

அடுத்து ஏற்புரை நிகழ்த்திய அமெரிக்காவின் புதியதாகப் பொறுப்பேற்றுள்ள இந்தியத் தூதர் சர்னா, அரங்கம் நிறைந்த வண்ணம் வருகை தந்திருந்த இந்தியர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

"பெருந்திரளாக வந்திருந்து சிறப்பித்துள்ள உங்களிடையே நான் இன்று வந்திருப்பது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்," என்றார்.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன் வாஷிங்டனில் இந்தியத் தூதரக பத்திரிகை ஒருங்கிணைப்பாளராகப் பணி புரிந்தார் சர்னா. அதற்குப் பின் இப்போது வந்துள்ளார்.

"வாஷிங்டன் தண்ணீரில் ஏதோ சிறப்பு இருக்கிறது. 15 ஆண்டுகளுக்கும் முன் நான் பார்த்த சிலர் உங்களிடையே இப்போது பார்க்கிறேன். அப்போது பார்த்த மாதிரியே இருக்கிறீர்கள்!" என்று அவர் கூறிய போது அரங்கம் சிரிப்பலையில் மூழ்கியது.

Washington Indians welcome New Indian Ambassador for US

"முன்பு நான் இங்கு பணியிலிருந்த போது, இந்திய-அமெரிக்க நாடுகளிடையே
நல்லிணக்கம் குறைந்திருந்தது. அதற்குக் காரணம், இந்தியா தன் பாதுகாப்பு
கருதி, அணுகுண்டு சோதனைகளை நிகழ்த்தியதுதான். ஆனால் அதன் பின் படிப்படியாக இரு நாடுகளுக்கிடையே உறவு பலப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கிடையே பொருளாதாரம், வர்த்தகம், பாதுகாப்பு போன்ற துறைகளில் பரஸ்பர ஒப்பந்தங்கள் பல ஏற்பட்டு உள்ளன" என்ற அவர், "இத்தகைய உறவு மேம்பாட்டுக்கு உங்கள் பங்களிப்பு குறித்து நான் தலை வணங்குகிறேன்," என்று அவையோரைப் பார்த்து கூறினார்.

யூதர்கள் தம் குழந்தைகளை படிக்க இஸ்ரேல் நாட்டுக்கு அனுப்புவது போல்,
இங்கு வாழும் இந்தியர்கள் தம் பிள்ளைகளை மேற்படிப்புக்காக இந்தியா அனுப்ப வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

சர்னா வெறும் அரசு அதிகாரி மட்டுமல்ல, தேர்ந்த எழுத்தாளரும் கூட.

- டாக்டர் ராதாகிருஷ்ணன்

English summary
The Washington based Indian community was gave a warm welcome to the new Indian Ambassador for US Navtej Sarna.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X