Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜி20 மாநாட்டில் தேடி வந்து விசாரித்த மத்திய அமைச்சர்கள் .. கேட்டு நெகிழ்ந்து போன ஸ்டாலின்.. இதுவா?

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: ஜி20 மாநாட்டில் பங்கேற்ற போது மகளிர் உரிமை தொகை உள்ளிட்ட தமிழக அரசின் சிறப்பு திட்டங்கள் குறித்து சில மத்திய அமைச்சர்கள் விசாரித்ததாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

மகளிர் உரிமை தொகை திட்டத்தை காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்து தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "சொன்னதைச் செய்வான் கலைஞரின் மகன் என்பதற்கு சாட்சியாக இந்த விழா காஞ்சிபுரத்தில் மட்டுமல்ல - தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

central ministers inquired about special schemes of Tamil Nadu government in G20 : MK stalin

தமிழ்நாட்டு மக்கள், எங்கள் கூட்டணி சின்னத்தை அமுக்கியதால் தான் நான் இந்த நாற்காலியில் அமர்ந்திருக்கிறேன். அந்த உரிமையைக் கொடுத்தவர்கள் நீங்கள் தான். மக்கள் கொடுத்த வாய்ப்பை மக்களுக்கே நான் பயன்படுத்துகிறேன். மக்களுக்காகத் தான் பயன்படுத்துவேன்.

இரண்டு நோக்கம் கொண்டது இந்த திட்டம்..

1. பலனை எதிர் பாராமல் வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்குக் கொடுக்கும் அங்கீகாரம் முதன்மையானது.

2. ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை கிடைக்கப் போகிறது. இது பெண்களின் வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருந்து, வறுமையை ஒழித்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சுயமரியாதையோடு சமூகத்தில் அவர்கள் வாழ்வதற்கு உறுதுணையாக இருக்கும்.

இந்த இரண்டும் திராவிட மாடல் ஆட்சியின் நோக்கமாகும். தந்தை பெரியாரிடம், பேரறிஞர் அண்ணாவிடம், தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களிடம் நாங்கள் கற்ற பாடங்களின் அடிப்படையில் இந்த திட்டத்தை தீட்டி இருக்கிறோம்.

வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப்பார்த்தால், தாய்வழிச் சமூக முறைதான்மனிதகுலத்தை முதலில் வழிநடத்திவந்திருக்கிறது . உழவுக் கருவிகளைக் கண்டுபிடித்து, வேளாண் சமூகமாக மாறியபோது கூடபெண்களின் உழைப்பு ஆண்களுக்குநிகராகவே அமைந்திருந்தது.

ஆனால் காலப்போக்கில், மதத்தின் பெயராலும், பழமையான மரபுகளின் பெயராலும், பல்வேறு ஆதிக்க வர்க்கத்தாலும் பெண்கள் வீட்டுக்குள் முடக்கப்பட்டார்கள். அவர்களுக்குக் கல்வியறிவு மறுக்கப்பட்டது. பெண்குலத்தில் உழைப்பு நிராகரிக்கப்பட்டது.

பெண்ணை அடிமையாக நினைக்கும் நடத்தும் காலம் ஒன்று இருந்தது.கீழ் வகுப்பைச் சேர்ந்தவர்களும் - பெண்களும் இழிவானவர்கள் என்றெல்லாம் கூட எழுதி வைத்திருந்தார்கள்.பெண் உடல் ரீதியாக எதிர்கொள்ளும் இயற்கை சுழற்சியைக் கூட தீட்டு என்று சொல்லி வீட்டுக்குள் முடக்கினார்கள். படிக்கக் கூடாது -வேலைக்கு போகக் கூடாது -வீட்டுப்படியைத் தாண்டக் கூடாது -அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பெதற்கு - என்ற பழமை வாத சிந்தனைகளை வைத்து பெரும்பான்மை பெண்ணினத்தை முடக்கி வைத்தார்கள்.

இது அடித்தட்டு வகுப்பைச் சேர்ந்த பெண்கள் மட்டுமல்ல-உயர் வகுப்பைச் சேர்ந்த பெண்களும் அனுபவித்த துன்பம் ஆகும்.8 வயதில் - 10 வயதில் சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைத்தார்கள். இவை அனைத்தும் இன்று மாறி இருக்கிறது. சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்க முடியாது. அப்படி வைத்தால் அது சட்டபடி குற்றம்.

கணவனை இழந்த பெண், விரும்பினால் மறுமணம் செய்து கொள்ளலாம். மறுமணம் செய்து கொள்ளக் கூடாது என்று சொல்ல முடியாது. பெண் பிள்ளைகள் அனைவரும் பள்ளி - கல்லூரிக்குள் வந்துவிட்டார்கள்.உனக்கு படிப்பதெற்கு என்று சொல்ல முடியாது?நீ வேலைக்கு போகக் கூடாது என்று இன்று யாரும் தடுக்க முடியாது. இத்தகைய சமூக சீர்திருத்த காலத்தை உருவாக்கியது தான் திராவிட இயக்கம். படிக்கிறார்கள். நன்றாகப் படிக்கிறார்கள். அனைத்து வேலைகளுக்கும் வந்துவிட்டார்கள்.

இத்தகைய பெண்ணினத்தை ஆணுக்குச் சமமாக உயர்த்து தான் திராவிட மாடல் அரசு ஆகும். இன்னும் சொன்னால் தந்தை பெரியார் அவர்கள் சொன்னதைப் போல ஆணை விடவும் உயர்ந்தவர்களாக பெண்களை உயர்த்து தான் திராவிட மாடல் ஆகும். ஏழைத் தாய்மார்களின் குழந்தைகள் இன்று மருத்துவர்களாக, பொறியாளர்களாக, ஆசிரியர்களாக வளம் வருவதைப் பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது. இந்தச் சமூகத்தில் வெற்றி பெற்ற ஒவ்வொரு சாதனையாளரின் பின்னாலும் பெண்களின் உழைப்பு உள்ளது என்பதை மறுக்க முடியாது.

எங்க அம்மா இல்லைன்னா நான் இல்லை என்று எத்தனையோ சாதனை மாணவிகள் பேட்டி தருவதை பார்த்திருக்கிறோம். பூட்டிய இரும்புக் கூட்டின் கதவினைத்திறந்து, பெண் அடிமைத்தனத்தைத்தகர்த்து, அவர்களுக்கான சமூக, பொருளாதார சுதந்திரத்தை மீட்க எத்தனையோ சமூக சீர்திருத்தவாதிகள் முன்வந்தாலும் - இருபதாம்நூற்றாண்டில், தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கமே வீறுகொண்ட போராட்டங்களின் மூலமாக பெண் விடுதலைக்கு பாதை அமைத்தது.

அதனால் தான் தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டில் 1938 ஆம் ஆண்டு பெரியார் என்ற பட்டத்தை பெண்கள் அனைவரும் சேர்ந்து கொடுத்தார்கள். இன்றளவும் ஏழை மக்களின்குடும்பங்களிலும், கிராமப்பொருளாதாரத்தைச் சுமக்கும்முதுகெலும்பாகவே பெண்கள்இருக்கிறார்கள் என்பது

மறுக்க முடியாத உண்மை. ஒவ்வொரு நாளும் தன் திறனுக்கேற்ற பணிபுரிந்து பொருள் ஈட்டும் ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும் தன் தாய், சகோதரி, மனைவி என அந்த ஆணின் வீட்டுப்பெண்களுடைய பல மணிநேர உழைப்புமறைந்து இருக்கிறது. ஒரு ஆணின் வெற்றிக்காகவும், தங்கள் குழந்தைகளின் கல்வி, உடல் நலம் காக்கவும் ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரங்கள் அவர்கள் உழைத்து இருப்பார்கள்? அதற்கெல்லாம் ஊதியம் கணக்கிட்டு கொடுத்தால் எவ்வளவு கொடுப்பது?

ஆனால் ஹவுஸ் ஒய்ப் என்று சாதாரணமாகச் சொல்லி விடுவார்கள். 'உங்க மனைவி வேலைக்கு போறாங்களா?' என்று சிலரிம் கேட்டால் - இல்லை என்பதோடு நிறுத்தாமல் 'வீட்டுல சும்மா தான் இருக்காங்க' என்று சொல்வார்கள். வீட்டில் பெண்களால் சும்மா இருக்க முடியுமா? வீட்டில் பார்க்கும் வேலைகள் கணக்கில் கொள்ளப்படுவது இல்லை.

தாயின் கருணை மனைவியின் உறுதுணை, மகளின் பேரன்பு ஆகியவை ஒருவருக்கு கிடைத்தால் அதை விட வேறு செல்வம் தேவையில்லை. உலகை உண்மையில் வழி நடத்துவது தாய்மையும், பெண்மையும்தான். என்னுடைய தாய் தயாளு அம்மையார் கருணையே வடிவானவர்கள்.

சின்ன வயதில் நான் நிகழ்ச்சிகள் நடத்தினால் அன்றைய தினம் மழை வரக் கூடாது என்று வேண்டிக் கொள்வார். என்னுடைய அரசியல்வாழ்க்கையில் சிறுசிறு சம்பவங்களையும் தொடக்க காலத்தில் தயாளு அம்மாவிடம் சொல்லித்தான் - தலைவர் கலைஞரிடம் அவரை சொல்லச் சொல்வேன்.

வயது முதிர்ந்த நிலையில் இன்று கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார்கள். நாம் போய் பார்க்கும் போது அவர் முகத்தில் ஏற்படும் மகிழ்ச்சிக்கு இணையானது வேறு எதுவும் இல்லை. தேபோல் என் மனைவி துர்கா, என்னில் பாதி என்று சொல்லும் அளவுக்கு என்னோடு உடனிருக்கிறார்.

திருமணமான ஐந்தாவது மாததில் மிசாவில் நான் கைது செய்யப்பட்டு ஓராண்டு காலம் சிறையில் வைக்கப்பட்டேன். அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவரல்ல அவர். அவருக்கு இதுவே முதல் அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் பொதுவாழ்க்கையில் இதெல்லாம் இயல்பானது என்று நினைத்து பக்குவப்படுத்திக் கொண்டார்.

எத்தனையோ மேடு பள்ளங்கள் அரசியல் வாழ்க்கையில் எனக்கு ஏற்பட்ட போதும்- அதில் உற்றதுணையாக இருந்து மிகப்பெரிய சக்தியாக எனக்கு இருப்பவர் துர்கா.

என் மகள் செந்தாமரை - அன்பின் வடிவம் என்று சொல்வேன். எத்தகைய பதவியில் நான் இருந்தாலும் தானுண்டு தனது வேலைகள் உண்டு என்று இருப்பார். அரசியல் பிரபலம் என்ற சாயல் தன் மீது விழுந்துவிடக் கூடாது என்று நினைப்பார்.

சுயமாக வளர வேண்டும் என்று நினைப்பார். அந்த வகையில் நாம் மிக கொடுத்து வைத்தவன். கருணை மிகு தாய் - தூணாக விளங்கும் மனைவி -தன்னம்பிக்கை கொண்ட மகள் - இம்மூன்றும் வாய்த்தவன் நான். இத்தகைய பேருள்ளம் கொண்டவர்கள் தான் மகளிர் அனைவரும்.

மகளிர் நலம் காத்த மாண்பாளர் என்றால் தலைவர் கலைஞர் அவர்கள் தான்.

• பெண்களுக்கு சொத்தில் சம உரிமைச் சட்டம் கொண்டு வந்தது தி.மு.க. அரசு.

• பணியிடங்களில் பெண்களுக்கு 30 விழுக்காடு இடஒதுக்கீடு தந்தவர் கலைஞர். அதை இப்போது 40 விழுக்காடு ஆக்கியிருக்கிறோம்.

• உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு தந்தவர் கலைஞர். இன்றைக்கு அது 50 விழுக்காடாக உயர்த்தப்பட்டு, அதற்கும் மேலாக பெண்கள் இன்றைக்கு மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சித் தேர்தல்களில் வெற்றி பெற்று, மக்கள் பணி ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

• ஏழைப் பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய எரிவாயு அடுப்புகள் வழங்கியது.

• ஒடுக்கப்பட்ட சமூகப் பெண்களுக்கு முதலில் பள்ளிக்கல்வி வரை இலவசக் கல்வியும், அதன் பிறகு கல்லூரிவரை இலவசக் கல்வியும் வழங்கியது.

• ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளி ஆசிரியர்களாக, மகளிரை நியமித்தது.

• டாக்டர் முத்துலட்சுமி நினைவு மகப்பேறு உதவித்திட்டம்,

• மூவலூர் இராமாமிர்தம் நினைவு திருமண உதவித்திட்டம்,

• டாக்டர் தருமாம்பாள் கைம்பெண் மறுமணத் திட்டம்,

• அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்புத் திருமண உதவித்திட்டம்,

• ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழைக் கைம்பெண்களின் மகள்களுக்கான திருமண உதவித்திட்டம்

central ministers inquired about special schemes of Tamil Nadu government in G20 : MK stalin

இப்படி எண்ணற்ற திட்டங்களைக் கொண்டு வந்து மகளிர் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்தவர் தலைவர் கலைஞர் அவர்கள். அவர் பெயரால் மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுவது மிகமிகப் பொருத்தமானதே. அவரது நூற்றாண்டு விழா ஆண்டில் தொடங்கப்படுகிறது.

தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா- தமிழினத் தலைவர் கலைஞர் ஆகிய மூவரும் போட்டுத் தந்த பாதையில் செயல்படும் இந்த திராவிட மாடல் அரசானது மகளிருக்கு ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. நாம் கொண்டு வரும் திட்டங்களை இன்று இந்தியாவே உன்னிப்பாக கவனிக்கிறது. மற்ற மாநிலங்கள் பின்பற்றுகின்றன.

இந்தியா கூட்டணிக் கூட்டங்களுக்கு நான் மற்ற மாநிலங்களுக்குச் செல்லும் போது அங்கு வருகை தரும் அரசியல் தலைவர்களும் - மாநில முதலமைச்சர்கள் நமது அரசு கொண்டு வரும் திட்டங்களைப் பற்றிக் கேட்கிறார்கள். விசாரிக்கிறார்கள். தங்கள் மாநிலத்தில் செயல்படுத்த நினைக்கிறார்கள்.

கடந்த வாரம் ஜி20 நாடுகளின் மாநாடு டெல்லியில் நடைபெற்றது. அதனை முன்னிட்டு இந்திய நாட்டின் குடியரசுத் தலைவர் அவர்கள் சிறப்பு விருந்து வைத்தார்கள். அதில் கலந்து கொண்டேன். அப்போது சில ஒன்றிய அமைச்சர்கள் கூட நமது சிறப்புத் திட்டங்கள் பற்றி விசாரித்தார்கள். இவை எல்லாம் தனிப்பட்ட எனக்குக் கிடைத்த பாராட்டுகள் அல்ல. தமிழ்நாடு அரசுக்கும் - நாட்டு மக்களுக்கும் கிடைத்த பாராட்டுகள் ஆகும்.

பசிப்பிணி போக்கி வருகிறோம். அறிவுப்பசியை தணித்து வருகிறோம். இன்னார் படிக்க வேண்டும் இன்னார் படிக்கக் கூடாது என்ற நிலையை மாற்றி - இன்னார் உயர வேண்டும் - இன்னார் உயரக் கூடாது என்ற நிலையை மாற்றி - அனைவர்க்கும் அனைத்தும் கிடைக்க வழிவகை செய்யும் திராவிட மாடல் ஆட்சி கோடிக்கும் மேற்பட்ட பெண்களூக்கு உரிமைத் தொகை வழங்குவதன் மூலமாக - பெண்களுக்கு சமூக - பொருளாதார - அரசியல் வலிமையை வழங்குகிறது.

என் அருமைச் சகோதரிகளே! உங்கள் கனவுகளை நிறைவேற்றும் ஆட்சி இது. உங்கள் கவலைகளைப் போக்கும் ஆட்சி இது. தொல்லை, இனி இல்லை. வானமே உங்களது எல்லை!" இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+