கிறுகிறுக்க வைக்கும் கிருஷ்ணகிரி சம்பவம்..சிவராமனுக்கு உதவிய ‘ஜிம் மாஸ்டர்’..தட்டித் தூக்கிய போலீஸ்!
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாம் நடத்தி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கின் முக்கிய குற்றவாளியான சிவராமனுக்கு உடந்தையாக இருந்ததாக ஜிம் மாஸ்டர் டேனியல் அருள்ராஜ் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் உள்ள கிங்ஸ்லி பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகியான சிவராமன் போலி என்சிசி பயிற்சி முகாம் நடத்தி இருக்கிறார்.

அதில் 19 மாணவிகள் கலந்து கொண்ட நிலையில் அதில் ஒரு மாணவியை சிவராமன் பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தெரியவந்தது.
இதை அடுத்து சிவராமன் கைது செய்யப்பட்ட நிலையில், அதே பள்ளியில் மேலும் பல மாணவிகளை சிவராமன் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கியது தெரியவந்தது. இதை அடுத்து போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் சிவராமன் மற்றும் அவரது குற்றத்திற்கு உடந்தையாக இருந்த பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள் உள்ளிட்ட 11 பேரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதை அடுத்து அந்த குழுவினர் பள்ளி மற்றும் பாதிக்கப்பட்ட மாணவிகள், பெற்றோர்கள் உள்ளிட்டோரிடம் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் ஏற்கனவே சிவராமன் குடும்ப பிரச்சினை காரணமாக எலியை கொல்ல வைக்கப்படும் பசையை தின்று தற்கொலைக்கும் முயன்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் போலீசார் கைது செய்யப்படுவதற்கு இரண்டு நாட்கள் முன்பாக மீண்டும் அவர் தற்கொலைக்கு முயன்றார் என கூறுகின்றனர் காவல்துறையினர்,
இந்த நிலையில் கைது நடவடிக்கையின் போது சிவராமன், போலீசாரை கண்டு தப்பியோட முயன்றதாகவும் இதை அடுத்து அவர் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறி மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மருத்துவர்கள் பரிந்துரைப்படி சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிவராமன் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிவராமன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக போலீசார் கூறியுள்ளனர்.
இதற்கு இடையே சிவராமனின் தந்தை என அசோக்குமார் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது காவேரிப்பட்டினம் அருகே விபத்துக்குள்ளானர். மது போதையில் இருந்த அவர் தடுமாறி கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டதாகவும், தொடர்ந்து அவரும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவ்வழக்கில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கடந்த 3 நாட்களுக்கு முன்னதாக சிவராமனால் நடத்தப்பட்ட போலி முகாம்கள் குறித்த தகவல்களை மறைத்ததாக, காவேரிப்பட்டணம் சந்தைபாளையம் பகுதியைச் சேர்ந்த என்சிசி பயிற்சியாளர் கோபு என்பவரை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்நிலையில் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஜிம் மாஸ்டர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவேரிப்பட்டினத்தைச் சேர்ந்த ஜிம் மாஸ்டர் டேனியல் அருள்ராஜ், போலி என்சிசி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த முக்கிய குற்றவாளியான சிவராமனுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications