துப்பாக்கி முனையில் கடத்துனாங்க.. 2 முறை சாவை நேரில் பார்த்தேன்! அதானிக்கு இப்படி ஒரு பிளாஷ் பேக்கா!
லண்டன்: இந்தியாவில் நம்பர் 1 பணக்காரரும், உலகில் 3-வது பணக்காரருமான கவுதம் அதானி தனது வாழ்நாளில் இரண்டு முறை மரணத்தை நேரில் பார்த்ததாக கூறியுள்ளார்.
ஒரு முறை துப்பாக்கி முனையில் தான் கடத்தப்பட்டுச் சென்ற அதிர்ச்சிகரமான அனுபவத்தையும் கவுதம் அதானி பகிர்ந்து கொண்டார்.
அவை மோசமான அனுபவங்களாக இருந்தாலும் அதில் இருந்து தான் நிறைய கற்றுக்கொண்டதாகவும், வாழ்க்கை குறித்த புரிதலை தனக்கு தந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

மோசமான அனுவபங்கள்
இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான கவுதம் அதானி, தொழிலதிபர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக லண்டன் சென்றுள்ளார். இந்நிலையில், லண்டனில் இருந்து வெளியாகும் ஒரு நாளிதழுக்கு அதானி இன்று பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது: வாழ்க்கையில் நல்லதும், கெட்டதும் மாறி மாறி நடந்து கொண்டேதான் இருக்கும். அதில் மோசமான அனுபவங்களை மறந்துவிட வேண்டும் என சிலர் கூறுவார்கள். உண்மைதான். ஆனால், அந்த மோசமான அனுபவங்கள் நமது வாழ்க்கையையே மாற்றும் சில வழிகளை காட்டியிருக்கும். எனக்கும் அப்படி சில மோசமான அனுபவங்கள் இருக்கின்றன.

"துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டேன்"
இதுவரை அந்த அனுபவங்களை நான் ஊடகங்களிடமோ, வெளி நபர்களிடமோ பகிர்ந்து கொண்டதில்லை. ஏனெனில், அந்த நாட்களை மீண்டும் என் நினைவுக்குள் கொண்டு வர விரும்பவில்லை. இருந்தபோதிலும், இங்கு அதை பகிர விரும்புகிறேன். 1988-ம் ஆண்டு சில தொழில்களில் நான் வெற்றிக் கொடி நாட்டிக்கொண்டிருந்தேன். அப்போது என்னை பற்றிய செய்திகள் உள்ளூர் செய்தித்தாள்களில் வரும். இதை பார்த்த கடத்தல் கும்பல், ஒரு நாள் காருடன் துப்பாக்கி முனையில் என்னை கடத்திச் சென்றது. என் கதை அன்றுடன் முடிந்தது என்றே நான் நினைத்தேன். ஆனால் மறுநாள் காலையில் அவர்கள் என்னை விடுவித்தார்கள். இந்தக் கடத்தல் அனுபவம் எனக்கு ஒரு விஷயத்தை கற்றுக்கொடுத்தது. அதாவது, நம் வாழ்வில் நடப்பது நம்முடைய கட்டுப்பாட்டில் அல்ல. அதன் கட்டுப்பாட்டில்தான் நாம் இருக்கிறோம் என்பதை அன்று உணர்ந்தேன்.

"தீவிரவாதிகள் பிடியில் சிக்கினேன்"
பின்னர் நடந்ததுதான் மிக பயங்கரமான அனுபவம். நான் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கிய தருணம். 2008-ம் நவம்பர் 26-ம் தேதி மும்பை தாஜ் ஓட்டலில் துபாயில் இருந்த தொழிலதிபர்களுடன் ஒரு ஆலோசனையில் ஈடுபட்டிருந்தேன். அந்தக் கூட்டம் முடிந்ததும் அங்கிருந்து செல்ல தயாரானேன். அப்போது எனது நண்பர், தொழிலதிபர்களுடன் இரண்டாவது சுற்று ஆலோசனை நடத்தலாம் எனக் கூறினார். நானும் சரி எனக் கூறிவிட்டு உள்ளே சென்றேன். சரியாக 3 நமிடத்தில் ஓட்டலே பரபரப்பானது. தீவிரவாதிகள் ஓட்டலுக்குள் நுழைந்து பல பேரை சுட்டுவிட்டார்கள் என்ற தகவல் வந்தது. எனது நண்பர் மட்டும் தடுத்திருக்காவிட்டால் நிச்சயம் தீவிரவாதிகள் என்னை கொன்றிருப்பார்கள்.

வாழ்க்கை பற்றிய புரிதல்
இதையடுத்து, தீவிரவாதிகளிடம் இருந்து பாதுகாக்க அங்கிருந்த ஊழியர்கள் எங்களை சமையலறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்த சோபாவில் நானும், மற்றவர்களும் மரண பயத்தில் அமர்ந்திருந்தோம். சிலர் சோபாக்களுக்கு அடியிலும், கதவுகளுக்கு பின்னாலும் ஒளிந்து கொண்டிருந்தார்கள். அந்த சமயத்திலும், இன்றுதான் எனது மரண தேதி என நினைத்துக் கொண்டேன். எனது குழந்தைகளையும், குடும்பத்தினரையும் நினைத்து பார்த்தேன். அவர்களிடம் தொலைப்பேசியில் பேசினேன். ஆனால், தீவிரவாதிகள் கொல்லப்பட்ட பிறகு நாங்கள் மீட்கப்பட்டோம். அந்த அனுபவம்தான், வாழ்க்கை பற்றிய புரிதலையும், குடும்பத்தினரின் முக்கியத்துவத்தையும் எனக்கு உணர்த்தியது. இவ்வாறு அந்தப் பேட்டியில் கவுதம் அதானி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications