டாய்லெட்டை திருடி கோடீஸ்வரர்களான கொள்ளையர்கள்.. இப்போ என்ன நடந்துச்சு பாருங்க.. ஐயோ பாவம்!
லண்டன்: இதை கூட திருடுவார்களா என நீங்கள் யோசிக்கும் அளவுக்கு ஒரு கும்பல் கழிப்பறையைத் திருடியுள்ளது.. அதற்கு இப்போது 4 பேர் கைது செய்யப்பட்டு, விசாரணையும் அவர்கள் மீது நடந்து வருகிறது. எது கழிப்பறை திருட்டுக்கு இவ்வளவு செய்யணுமா என நீங்கள் கேட்கலாம்.. அதற்கான பதிலை நாம் இப்போது பார்க்கலாம்.
இந்த உலகில் பல வினோதமான திருட்டு சம்பவங்களை நாம் பார்த்திருப்போம். ஆனால், டாய்லெட்டை திருடி நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா.. அட கழிப்பறையைத் திருடினால் என்ன என நீங்கள் கேட்கலாம்.

ஆனால், இந்த கழிப்பறையைத் திருடியே அவர்கள் பல கோடி சம்பாதித்து இருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா.. அந்த டாய்லெட்டில் அப்படி என்ன ஸ்பெஷல்.. கடந்த 2019ல் நடந்த இந்தச் சம்பவம் மீண்டும் திடீரென பேசுபொருள் ஆக என்ன காரணம் என்பதை நாம் பார்க்கலாம்.
தங்க கழிப்பறை
பிரிட்டன் நாட்டில் உள்ள பிளென்ஹெய்ம் அரண்மனையில் (Blenheim Palace) பல அரிய பொருட்களை வைத்திருப்பார்கள். அப்படி தான் அங்கே முழுக்க முழுக்க தங்கத்தால் ஆன கழிப்பறையை வைத்திருந்தனர். இத்தாலியைச் சேர்ந்த மவுரிசியோ கட்டெலா என்பவரை இதை வடிவமைத்து இருந்தார். மேலும், அமெரிக்கர்களை வெறுப்பேற்றவே இந்த தங்கக் கழிப்பறைக்கு அமெரிக்கா எனப் பெயரிட்டு இருந்தனர்.
இதனை பிளென்ஹெய்ம் அரண்மனையில் வைத்திருந்தனர். தங்கக் கழிப்பறை என்றாலும் இது வெறும் காட்சிக்காக மட்டுமின்றி பயன்பாட்டிலும் இருந்துள்ளது. பிளென்ஹெய்ம் அரண்மனைக்கு வருவோர் 3 நிமிடங்கள் இதைப் பயன்படுத்த புக் செய்யலாம். இதைத் தான் கடந்த 2019ம் ஆண்டில் அடையாளம் தெரியாத சிலர் திருடிச் சென்றனர்.
ரூ.65 கோடி
முழுக்க முழுக்க 18 கேரட் தங்கத்தால் ஆன இதன் அப்போதைய மதிப்பு 2.8 மில்லியன் பவுண்டாகும். அதாவது இப்போது நாம் அதை ரூபாயில் மதிப்பிட்டால் ரூ.65 கோடி வரும். தங்கம் விலை அதன் பிறகு தாறுமாறாக எகிறிவிட்ட நிலையில், இப்போது அதன் விலை எங்கோ சென்றிருக்கும். இந்த விவகாரத்தில் தீவிர விசாரணைக்குப் பிறகு கடந்த 2023ம் ஆண்டு சிலரைக் கைது செய்தனர். இதற்கிடையே இந்த வழக்கு இப்போது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ள நிலையில், கழிப்பறை திருட்டு தொடர்பாக சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.
எப்படி திருடினர்
39 வயதான மைக்கேல் ஜோன்ஸ் என்பவர் தான் கழிப்பறை திருட்டைத் திட்டமிட்டு நடத்தியிருக்கிறார். அவர் இதற்காகவே அந்த அரண்மனைக்குத் திருட்டை அரங்கேற்றும் முன்பு இரண்டு முறை வந்துள்ளார். இரு முறையும் தங்கக் கழிப்பறையைப் பயன்படுத்தியும் இருக்கிறார். அப்போது அவர் அங்கிருந்த ஜன்னல் உட்பட சில போட்டோக்களையும் எடுத்துள்ளார். திருட்டின் போது அவர்கள் அந்த ஜன்னல் வழியாகவே உள்ளே நுழைந்தது குறிப்பிடத்தக்கது.
நான்கு பேர் கொண்ட கும்பல் சேர்ந்து இந்த கொள்ளையை அரங்கேற்றியுள்ளனர். இரண்டு கார்கள் மூலம் அரண்மனைக்கு வந்த அவர்கள், ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். பிறகு வாட்டர் கனெக்ஷனை முழுமையாகக் கட் செய்துவிட்டு கழிப்பறையை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டனர். இதை மொத்த திருட்டையும் அவர்கள் வெறும் ஐந்து நிமிடத்தில் முடித்துவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடக்கும் நிலையில், அதில் திருட்டு குறித்துப் பல தகவல்கள் தெரிய வரும்.
கடுமையான தண்டனை
இந்த தங்கக் கழிப்பறையைத் திருடியவர்களை போலீசார் கைது செய்த போதிலும், அந்த கழிப்பறையை அவர்களால் கடைசி வரை மீட்கவே முடியவில்லையாம். கழிப்பறையை உருக்கி அதை விற்றிருப்பார்கள் என்றே போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கழிப்பறையைத் திருடி கோடீஸ்வரர்களான இவர்களுக்கு நீதிமன்றம் என்ன தண்டனையைத் தரப்போகிறது என்பதை நாம் பார்க்கலாம். இப்போது சிறையில் உள்ள அவர்களுக்கு, கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications