எலிசபெத் ராணி இறுதிச் சடங்கில் பங்கேற்க.. பிரிட்டன் செல்கிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு
லண்டன்: பிரிட்டன் மகாராணி இரண்டாவது எலிசபெத் உடல் செப்டம்பர் 19 ஆம் தேதி அடக்கம் செய்யப்பட உள்ள நிலையில் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அதில் கலந்துகொள்ள பிரிட்டன் செல்கிறார்.
பிரிட்டன் ராணி 2 வது எலிசபெத்துக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனை அடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட எலிசபெத் ராணி கடந்த 8 ஆம் தேதி லண்டனில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
எலிசபெத் மரணத்தை தொடர்ந்து அவரது மகன் சார்லஸ் பிரிட்டன் மன்னராக முடிசூட்டிக் கொண்டார். எலிசபெத் மரணத்தை தொடர்ந்து அது தொடர்பான செய்திகளே சமூக வலைதளங்களை ஆக்கிரமித்தன.

ஸ்காட்லாந்தில் மறைவு
ஸ்காட்லாந்தில் உள்ள அரண்மனையில் உயிரிழந்த எலிசபெத்தின் உடல் நேற்று லண்டனுக்கு எடுத்து செல்லப்பட்டது. அடுத்த சில நாட்கள் ராணி எலிசபெத் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்படும். ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு வரும் செப்டம்பர் 19 அன்று வெஸ்ட்மின்ஸ்டரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

தலைவர்கள் இரங்கல்
ராணி இரண்டாம் எலிசபெத் மறைவை தொடர்ந்து இந்தியாவிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தனர். இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்ட இரங்கல் செய்தியில், "உலகம் ஒரு ஆளுமையை இழந்துவிட்டது." என்று தெரிவித்தார்.

லண்டன் செல்லும் திரௌபதி முர்மு
இந்த நிலையில் செப்டம்பர் 19 ஆம் தேதி இங்கிலாந்து தலைநகர் லண்டனின் வெஸ்ட் மினிஸ்டர் பகுதியில் நடைபெற இருக்கும் பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் நிகழ்வில் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் கலந்துகொள்ள இருக்கிறார்.

உலக தலைவர்கள்
இவருடன் இந்த இறுதிச் சடங்கில் காமென்வெல்த் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள், ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் மற்றும் பிரிட்டனின் நட்பு நாடுகளின் தலைவர்கள் பலரும் பங்கேற்க உள்ளார்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிகழ்வுக்காக பிரிட்டன் வரும் உலக தலைவர்கள், தனி விமானங்கள், தனி ஹெலிகாப்டர்கள், தனி கார்களில் வருவதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications