தாலி கட்ட 5 நிமிஷம் கூட இல்லை! புது காரை ஓட்டி பார்த்த புது மாப்பிள்ளை! அதுக்குள்ள இப்படி ஆயிருச்சே?
லக்னோ : திருமணத்தின் போது தனக்கு வரதட்சணையாக கொடுக்கப்பட்ட காரை மணமகன் ஓட்டிப் பார்த்தபோது விபத்து ஏற்பட்ட நிலையில் கல்யாண வீடு சிறிது நேரத்திலேயே துக்க வீடாக மாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது என்பார்கள். இரு மனங்கள் மட்டுமல்லாது இரு குடும்பம் ஒரு சமூகம் என பலரையும் இணைக்கும் ஒரு அற்புத பெருவிழா தான் திருமணம்.
இது வீட்டார்கள் படைசூழ மணமகள் கழுத்தில் மணமகன் தாலி அணிவிக்க உதிக்கும் புதிய பந்தமானது தலைமுறை தலைமுறையாக தொடரும்.. திருமணம் என்றாலே மகிழ்ச்சிகளுக்கும் கொண்டாட்டங்களுக்கும் அளவே இருக்காது.

திருமண நிகழ்ச்சி
அதே நேரத்தில் சில நேரங்களில் மகிழ்ச்சிக்கும் திடீரென ஒரு தடை வந்து விடுவது உண்டு அப்படி ஒரு நிகழ்வு தான் உத்தரபிரதேச மாநிலத்தில் நிகழ்ந்திருக்கிறது. திருமண விழாவின் போது தனக்கு கொடுத்த காரை ஆசையாக ஓட்டிப் பார்க்க முயன்ற போது அது விபத்துக்குள்ளானதில் திருமண வீடு சோகமயமாக மாறி இருக்கிறது. உத்திரபிரதேச மாநிலம் லக்னோ அருகே உள்ள அக்பர்பூர் கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார் என்பவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

கார் வரதட்சணை
திருமணத்தை ஒட்டி மணமகள் மணமகன் வீட்டார் கோலாகலமாக கூடி நின்று மகிழ்ச்சியில் மூழ்கி இருந்தனர். திருமணத்திற்கு முன்னதாக அவர்கள் சமூக வழக்கப்படி மணமகனுக்கு வெற்றி திலகம் விடும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் மணமகளின் வீட்டார் மணமகனுக்கு வரதட்சணையாக கார் ஒன்றினை பரிசாக வழங்கியிருக்கின்றனர்.

திடீர் விபத்து
ஆனால் மணமகன் அருண்குமாருக்கு காரை ஓட்ட தெரியாது என கூறப்படுகிறது. இருந்த போதும் பெண் வீட்டார் கொடுத்ததால் காரை ஓட்டி பார்க்கலாம் என அமர்ந்த அவர் காரை ஸ்டார்ட் செய்துள்ளார். நண்பர் ஒருவர் உதவிய நிலையில், கியர் போட்ட அவர் பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை மிதித்ததாக கூறப்படுகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென கூட்டத்திற்குள் புகுந்து இருக்கிறது.

சோகமான திருமண வீடு
இந்த விபத்தில் மணமகனான அருண்குமாரின் சொந்த அத்தை ஷர்மிளா தேவி என்பவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் கார் தாறுமாறாக ஓடியதில் சிறுமி உட்பட நான்கு பேர் காயம் அடைந்திருக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து அக்பர்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் மணமகனே விபத்திற்கு காரணம் என போலீசார் கூறினார். திருமண வீடு சோக வீடாக மாறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications