சனாதன “சங்கி”கள் சதி.. அதென்ன “பாணி”? காசி தமிழ் சங்கம தண்ணீர் பாட்டிலால் கொந்தளித்த திருமாவளவன்
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் தொடங்கி நடைபெற்று வரும் காசி தமிழ் சங்கம விழாவில் வழங்கப்பட்டு வரும் தண்ணீர் பாட்டிலில் பாணி என்ற இந்தி வார்த்தை தமிழில் எழுதப்பட்டு வழங்கப்படுவதற்கு திருமாவளவன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
75 வது இந்திய சுதந்திர தினத்தை அமிர்த பெருவிழாவாக கொண்டாடி வரும் மத்திய அரசு, அதன் ஒரு பகுதியாக காசி - தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை தொடங்கி நடத்தி வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் காசி மற்றும் தமிழ்நாடு இடையே உள்ள பண்பாட்டு தொடர்பை விளக்கம் வகையில் வகையில் வாரணாசியில் இந்த காசி - தமிழ் சங்கமம் நிகழ்ச்சி, ஒருங்கிணைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 ஆவது இடத்திற்குள் வந்த சீரியல்கள்.. கடைசியில் இப்படி ஒரு மாற்றமா?

தொடங்கி வைத்த மோடி
உத்தாப்பிரதேசத்தின் பிரபல பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மற்றும் ஐஐடி இணைந்து காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. கடந்த நவம்பர் 17 ஆம் தேதி தொடங்கிய இந்த விழாவில், வாரணாசி மக்களவைத் தொகுதி உறுப்பினரான பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து உரையாற்றினார். இதில் இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு மாணவர்கள்
இந்த காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் நாட்டின் கலாச்சார நகரங்களின் பன்முகத் தன்மை, கல்வி சார்ந்த உரையாடல்கள், கருத்தரங்குகள் மற்றும் விவாதங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் இருந்து ஆசிரியர்கள், மாணவர்கள், ஆன்மீகவாதிகள், விவசாயிகள் என பலர் கலந்துகொண்டு வருகிறார்கள்..

13 ரயில்கள்
இந்த விழாவில் பங்கேற்க 13 சிறப்பு ரயில்கள் தமிழகத்திலிருந்து காசிக்கு இயக்கப்படுகின்றன. 2,592 பேர் தமிழ்நாட்டில் இருந்து இந்த சிறப்பு ரயில்களில் பயணம் மேற்கொள்கின்றனர். இதன் மூலம் காசி தமிழ் சங்கமத்தில் தமிழ்நாடு பாஜகவை சேர்ந்தவர்களும் சென்று வருகிறார்கள். இந்த நிகழ்ச்சி சிறப்பாக இருந்ததாகவும், தமிழர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுவதாகவும் பாராட்டி வருகின்றனர்.

விமர்சனங்கள்
ஆனால், காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி மதபிரச்சார நிகழ்ச்சியை போன்று நடத்தப்பட்டு வருவதாகவும், இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிக்கும் முயற்சி என்றும் பலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி அரசியல் காரணங்களுக்காக நடத்தப்படுவதாக திமுக, திராவிட இயக்கங்கள், இடதுசாரி கட்சிகள் காசி, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

தண்ணீர் பாட்டில் பாணி
இந்த நிலையில், கடந்த காசி தமிழ் சங்கமத்தில் கலந்துகொண்டவர்களுக்கு வழங்கப்பட்ட தண்ணீர் பாட்டிலில் "பாணி" என்று தமிழில் இந்தியில் தண்ணீர் என அர்த்தம் தரும் வார்த்தை குறிப்பிடப்பட்டு இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வந்தார்.

திருமாவளவன் விமர்சனம்
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், "சனாதன சங்கிகளின் சதியைப் புரிந்துகொள்ள இது ஒரு சான்று. குடிநீரைப் 'பாணி' என்று தமிழில் தான் எழுதுகிறார்களாம் ?!?! இது வெறும் மொழி அரசியல் அல்ல; ஒரே நாடு- ஒரே மொழி - ஒரே கலாச்சாரம் என்கிற பன்மைத்துவத்துக்கு எதிரான சங்-பரிவார்களின் சூதுநிறை அரசியலே ஆகும்." என்று குறிப்பிட்டு உள்ளார்.