அரசு பஸ்சில் இயங்காத வைப்பர்.. விஞ்ஞானியாக மாறிய டிரைவர்.. பரவும் வீடியோ.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!
லக்னோ: உத்தர பிரதேசத்தில் அரசு போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் பஸ் ஒன்றில் வைப்பர் வேலை செய்யாததால், அதை செயல்பட வைக்க டிரைவர் முயற்சிக்கும் வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.
தென் இந்திய மாநிலங்களோடு ஒப்பிடும் போது வட மாநிலங்களின் சாலைகளின் தரம் மோசமாக இருப்பதாகவும் போக்குவரத்திலும் பல அசவுகரியங்கள் இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் பலரும் ஆதங்கப்பட்டு வெளியிடும் பதிவுகளை பார்த்திருக்கக் கூடும்.
அதுபோக அரசு பேருந்துகள் மிக மோசமாக பராமரிக்கப்படுவதும் ஓட்டை உடைசல் மிக்க பேருந்துகள் இயக்கப்படுவது குறித்த காணொலிகளும் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி வெளியாகி நெட்டிசன்களால் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படும்.

பரவும் வீடியோ
இந்த நிலையில், அதேபோல ஒரு சம்பவம் தான் உத்தர பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. உத்தர பிரதேச மாநில அரசுக்கு போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் பேருந்து ஒன்றில் வைப்பர் இயங்காததால், அதற்காக வாட்டர் பாட்டிலை கட்டி வைத்து வைபரை பேருந்து ஓட்டுநர் இயக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 35 நொடிகள் ஓடக்கூடிய இந்த வீடியோ ஓடுகிறது.

வைப்பரில் தண்ணீர் பாட்டில்
இதில், பேருந்தின் வைபருடன் சிறிய கயிறு ஒன்று கட்டப்பட்டுள்ளது. அதன் கட்டுப்பாட்டு ஓட்டுநர் வசம் உள்ளது. மறுபக்கம் வைபருடன் சேர்த்து தண்ணீர் நிரம்பிய வாட்டர் பாட்டில் ஒன்று கட்டி தொங்க விடப்பட்டுள்ளது. பஸ் டெப்போவில் நிற்கும் அந்த பஸ்சில் இருந்தபடி ஓட்டுனர் கயிற்றை இழுத்து வைபரை இயக்குவது போல் இருக்கிறது. இந்த வைபரை பேருந்து ஓட்டுநர் தனது கையில் உள்ள கயிறு வைத்து இழுப்பது போல தெரிகிறது.

நெட்டிசன்கள் கருத்து
மறுமுனையில் வாட்டர் பாட்டிலின் வெயிட் காரணமாக வைபர் கீழ் நோக்கி இழுக்கப்படுகிறது. இந்தக் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவுக்கு தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இது குறித்து ஒருவர் வெளியிட்டுள்ள பதிவில், ஓட்டுனர் ஒரு சிறந்த புத்திசாலி என்று பதிவிட்டுள்ளார். மேலும் ஒருவர் பஸ் டிரைவர் ஒரு விஞ்ஞானி தான் என்று பதிவிட்டுள்ளார். இன்னொருவர் 'இந்த பஸ்சை பின்னால் இருந்து தள்ளிக்கொண்டு சென்றால் தான் செல்லும் போல' என பதிவிட்டுள்ளார்.

போக்குவரத்து கழகம் விளக்கம்
உத்தர பிரதேசத்தின் பேருந்தின் நிலை இதுதான் என நெட்டிசன்கள் பலரும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். யோகி ஆதித்யநாத்தின் ஆட்சி நிர்வாகம் இதுதான் என்று மற்றொரு நெட்டிசன் பதிவிட்டுள்ளார். அதேவேளையில், கடந்த 8 ஆம் தேதி இந்த நிகழ்வு நடைபெற்று இருப்பதாகவும் பேருந்தின் வைபர் உடனடியாக சரி செய்யப்பட்டு விட்டதாகவும் உத்தர பிரதேச மாநில போக்குவரத்து கழகம் விளக்கம் அளித்துள்ளது.

பராமரிக்க வேண்டும்
ஏற்கனவே நாட்டில் பெருகி வரும் வாகனங்கள் காரணமாகவும், மோசமான சாலை பரமாரிப்பு காரணமாகவும் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. இந்த சூழலில், பேருந்துகளை இப்படி மோசமாக பரமாரிப்பது விபத்துக்கள் இன்னமும் அதிகரிக்கவே காரணமாக அமையும் என்று தெரிவித்துள்ள நெட்டிசன்கள், பொதுப்போக்குவரத்தை ஊக்குவிக்க நினைக்கும் அரசாங்கங்கள் அதை முறையாக பரமாரிக்க வேண்டும் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications