உத்தரப் பிரதேசத்தில்அதிர்ச்சி .. 2 பேருக்கு உருமாறிய கப்பா கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி!
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் இரண்டு பேருக்கு கப்பா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. கப்பா வைரஸ் குறித்து கவலைப்பட ஒன்றுமில்லை என்று மாநில சுகாதாரத்துறை கூறியுள்ளது.
இந்தியா முழுவதும் ஒரு வருடத்திற்கு மேலாக கொரோனா வைரஸ் ஆட்டம் போட்டு வருகிறது. இந்த கொரோனா வைரஸ் ஒவ்வொரு உருவமாக மாறுபாடு அடைந்து வருகிறது.
மாறுபாடு அடைந்த வைரசுக்கு ஆல்ஃபா, டெல்டா மற்றும் கப்பா என்று உலக சுகாதார மையம் பெயரிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலைக்கு டெல்டா வைரசே காரணம் என்று கூறப்பட்டது.

கப்பா வைரஸ்
இந்த நிலையில் உத்தரப் பிரதேசத்தில் இரண்டு பேருக்கு கப்பா வைரஸ் தொற்று இருப்பதும் உறுதியாகியுள்ளது. லக்னோவின் கிங் ஜார்ஜ் மருத்துவக் கல்லூரியில் கரோனா சிகிச்சை பெற்றவர்கள் இருவரின் ரத்த மாதிரிகளை மரபணு வரிசைப்படுத்தும் போது கப்பா வைரஸ் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் 107 பேருக்கு டெல்டா பிளஸ் வைரசும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புதியவை அல்ல
இரண்டு வகைகளும்(டெல்டா பிளஸ், கப்பா) மாநிலத்திற்கு புதியவை அல்ல. மாநிலத்தில் மரபணு வரிசைப்படுத்துவதற்கான வசதி அதிகரித்து வருகிறது" என்று முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கோவிட் மறுஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பா மாறுபாடு குறித்து உத்தர பிரதேசத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் (சுகாதாரம்) அமித் மோகன் பிரசாத் கூறியதாவது:-

கவலைப்பட தேவையில்லை
கப்பா வைரஸ் குறித்து கவலைப்பட ஒன்றுமில்லை. இது கொரோனா வைரஸின் மாறுபாடுதான். இதனையும் தடுப்பூசி, சிகிச்சை மூலம் கட்டுப்படுத்தலாம். டெல்டா, கப்பா, ஆல்ஃபா ஆகிய மூன்று திரிபுகளுமே உத்தரப் பிரதேசத்தில் இருக்கின்றன. இதனால் எந்த அச்சமும் தேவையில்லை. தற்போது மாநிலத்தில் தொற்று பரவல் விகிதம் 0.04% என்ற அளவில் இருக்கிறது என்று அமித் மோகன் பிரசாத் கூறினார்.

இடம் வெளியிடவில்லை
கப்பா வைரஸ் மாறுபாடு பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் பெயர்களையோ அல்லது அதன் தோற்ற இடங்களையோ அதிகாரிகள் வெளியிடவில்லை. கப்பா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட விவரம் முதலிலேயே முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும் தெரிவிக்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications