உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தல் 2022: ஓபிசி பிரச்சாரத்தை தொடங்கும் பாஜக - ஆட்சியைத் தக்கவைக்குமா
உத்தரப்பிரதேச மாநில சட்டசபைத் தேர்தலில் வெல்வது என்பது இந்தியாவின் மினி லோக்சபா தேர்தல் வெற்றி என்றே சொல்லலாம், எனவே பாஜக இதை கெளரவ பிரச்னையாகவே பார்க்கிறது. ஓபிசி
லக்னௌ: உத்தரபிரதேச மாநிலத்தில் 2022 ஆம் ஆண்டு நடைபெற சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்க ஓபிசி பிரச்சார வியூகத்தை முன்னெடுத்துள்ளது பாஜக. பிற பிற்படுத்தப்பட்டவர்களின் வாக்குவங்கியை குறிவைத்து களத்தில் இறங்குகிறது பாஜக. மாநிலத்தில் உள்ள 75 மாவட்டங்களில் தொடர்ச்சியான நிகழ்ச்சிகளுடன் ஓபிசி பிரச்சாரத்தை பாஜக தொடங்க உள்ளது.
இம்மாநிலத்தில் அடுத்த ஆண்டு 2022இல் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வெல்ல பாஜக, சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ்கட்சி என்ற மூன்று பெரும் கட்சிகளும் மும்மரமாக உள்ளன. பிரியங்கா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியும் இம்மாநிலத்தில் தீவிரமாக பணியாற்றி வருகிறது
ஒபிசி சமூகத்தின் ஆதரவைப் பெறும் நோக்கத்துடன் புது வியூகம் வகுத்துள்ள ஆளும் பாஜக அரசு, அடுத்த மாதம் ஓபிசி தொடங்க உள்ளது. யாதவர்கள் அல்லாதவர்கள் மற்றும் ஓபிசி சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த வாக்காளர்களின் ஆதரவைப் பெற முக்கிய கவனம் செலுத்துகிறது பாஜக.

உபி சட்டசபைத் தேர்தல் 2022
நாட்டில் மிகப்பெரிய மாநிலமாகவும், 403 உறுப்பினர்களை கொண்ட மிகப்பெரிய சட்டசபையாகவும் உத்தரப்பிரதேசம் இருக்கிறது. 2017ஆம் ஆண்டில் நடந்த உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் பாஜக வெல்லும் என்று கருத்துக்கணிப்புகளில்கூட யாரும் கணிக்கவில்லை. ஏனென்றால் அம்மாநிலத்தில் ஆளும் கட்சியாக சமாஜ்வாதி கட்சியும், எதிர்க்கட்சியாக பகுஜன் சமாஜ் கட்சியும் முழுபலத்துடன் களத்தில் நின்றது.
சமாஜ்வாதி கட்சியில் அகிலேஷ் யாதவ் மற்றும் அவரது தந்தை முலாயம் சிங் யாதவிற்கும் இடையே நடந்த உட்கட்சி பிரச்னையை தனக்கு சாதகமாக்கியது பாஜக. மாயாவதியின் மீதான ஊழல் புகார்களை பிரச்சாரம் செய்து அவரையும் பாஜக கார்னர் செய்தது, காங்கிரஸ் கட்சி, சமாஜ்வாதியுடன் கூட்டணியில் இருந்தது.

பாஜகவின் வெற்றி
2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் மொத்தமுள்ள 403 இடங்களில் பாஜக மொத்தம் 303 இடங்களில் வென்று இமாலய வெற்றியை பெற்றது. சமாஜ்வாதி 47, பகுஜன் சமாஜ் கட்சி 19, காங்கிரஸ் 7, அப்னா தள் 9 இடங்களில் வெற்றிபெற்றது. 2017 உத்தரபிரதேச தேர்தலில் இடங்களின் அடிப்படையில் அல்லாமல் வாக்கு சதவிகித அடிப்படையில் பார்த்தால் பாஜக 39.67% வாக்குகளையும், பகுஜன் சமாஜ் 22.23% வாக்குகளையும் , சமாஜ்வாதி 21.82% வாக்குகளையும், காங்கிரஸ் 6.25% வாக்குகளையும் பெற்றிருந்தது.

பாஜக வெல்ல காரணம்
வாக்கு சதவிகித அடிப்படையில் பாஜகவுக்கு அடுத்தபடியாக பகுஜன் சமாஜ் கட்சியின் வாக்குகள் இருந்தன. அதனால் மாயாவதியின் வாக்குகள் தான் பாஜக வெல்ல காரணமாக இருந்தன என்ற விமர்சனங்களும் எழுந்தன. இதனால் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் சேர்ந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்ற குரலும் எழத் தொடங்கியுள்ளது.

பாஜகவின் தொடர் வெற்றி
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொத்தமாக 80 எம்.பி இடங்கள் உள்ளன. அதுபோல 403 சட்டமன்ற உறுப்பினர் இடங்களும் உள்ளன, அதிக எம்எல்ஏக்களை இம்மாநிலத்தில் வென்றால் அதிக மாநிலங்களவை உறுப்பினர்களை பெறமுடியும். அதனால், இந்த மாநிலத்தில் பெரும் வெற்றிபெறும் கட்சியே மத்தியிலும் ஆட்சியமைக்கும் நிலை உள்ளது. 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் பாஜக, அப்னாதளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து களம் கண்டது. வரலாற்றில் முதன்முறையாக உத்தரப்பிரதேச அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருந்த சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் இணைந்து "மகாகத்பந்தன்' என்ற பெயரில் நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தன, ராஷ்டிரிய லோக் தளமும் இக்கூட்டணியில் இருந்தது.

படுதோல்வி காங்கிரஸ்
காங்கிரஸ் இக்கூட்டணியில் சேர்க்கப்படவில்லை, அதனால் காங்கிரஸ் கட்சி தனித்து தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளுக்கிடையே ஆரம்பம் முதலே இணக்கமின்றியே இருந்ததால் உத்தரப்பிரதேச மக்களின் நம்பிக்கையை பெறமுடியவில்லை. அதனால் தேர்தல் முடிவுகளில் மொத்தமுள்ள 80 இடங்களில் பாஜக கூட்டணி 64 இடங்களிலும், பகுஜன் சமாஜ் 10 இடங்களிலும், சமாஜ்வாதி 5 இடங்களிலும் வென்றது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மட்டும் ரேபரேலியில் வென்றார், அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தி அமேதி தொகுதியில் பாஜகவிடம் தோல்வியடைந்தார்.

பாஜகவின் தொடர் வெற்றி
அசுரபலத்துடன் கடந்த சட்டசபை, லோக்சபா தேர்தலில் வெற்றிபெற்ற பாஜக, 2022ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலிலும் வெற்றியை தக்கவைப்பதற்கான காய்களை நகர்த்தி வருகிறது. தற்போது வெளிவந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகளிலும் பாஜக பெரும் வெற்றி பெற்றிருப்பது அக்கட்சியை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில் வெல்வது என்பது இந்தியாவின் மினி லோக்சபா தேர்தல் வெற்றி என்றே சொல்லலாம், எனவே பாஜக இதை கெளரவ பிரச்னையாகவே பார்க்கிறது. எனவே தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பிற பிற்படுத்தப்பட்டவர்களின் வாக்குவங்கியை குறி வைத்து களத்தில் இறங்குகிறது பாஜக.

75 மாவட்டங்களில் பிரச்சாரம்
ஓபிசி சமூகத்தின் ஆதரவைப் பெறும் நோக்கத்துடன் புது வியூகம் வகுத்துள்ள பாஜக ஒபிசி பிரச்சாரத்தை அடுத்த மாதம் தொடங்க உள்ளது. யாதவர்கள் அல்லாதவர்கள் மற்றும் ஓபிசி சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த வாக்காளர்களின் ஆதரவைப் பெற முக்கிய கவனம் செலுத்துகிறது பாஜக. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய உத்தரபிரதேச பாஜக ஓபிசி மோர்ச்சா தலைவர் நரேந்திர காஷ்யப், கட்சி மாநில அளவில் 32 குழுக்களை உருவாக்கியுள்ளது, இது மாநிலத்தில் 75 மாவட்டங்களில் ஆறு பகுதிகளில் பிரச்சாரங்களை ஏற்பாடு செய்யும் என்று தெரிவித்துள்ளார்.

சாதனைகளை கூறி பிரச்சாரம்
பாஜக அரசின் நலத்திட்டங்கள் மற்றும் அவற்றின் நன்மைகள் குறித்து மக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் பிரச்சாரத்தை நாங்கள் தொடங்குகிறோம் என்று அவர் கூறியுள்ளார். மற்ற அரசியல் கட்சிகள் எவ்வாறு சமூகத்திற்கு துரோகம் செய்து வெறும் வாக்கு வங்கிகளில் ஆட்சி நடத்தினார்கள் என்பதை விளக்குவதையே பாஜக நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

பாஜகவின் பிரச்சார வியூகம்
சமீபத்தில், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஏழு ஓபிசி அமைச்சர்கள் மத்திய அமைச்சரவையில் பதவியேற்றுள்ளனர்.
உத்தரபிரதேசத்தின் மொத்த வாக்காளர்களில் OBC க்கள் 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளனர், யாதவர் அல்லாத OBC க்கள் சுமார் 35 சதவிகிதம் உள்ளனர். மாநிலம் முழுவதும் உள்ள அமைப்புப் பணிகளை மேற்பார்வையிட பாஜக உத்தரப் பிரதேச ஓபிசி மோர்ச்சா மூன்று குழுக்களை அமைத்துள்ளது.

அகிலேஷ் யாதவ்
கடந்த சட்டசபை தேர்தலில் வெற்றிவாய்ப்பை இழந்த சாமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் இந்த முறை எப்படியாவது வெற்றி பெற முனைப்புகாட்டி வருகிறார். உத்தரபிரதேச மாநிலத்தில் விவசாயிகள் பிரச்னை, 3 வேளாண்சட்ட எதிர்ப்பு, ஹத்ராஸ் சம்பவம், கொரோனா பேரிடர்கால நெருக்கடியை ஆளும் அரசு கையாண்ட விதம் என பாஜகவுக்கு எதிரான மனநிலையில் உள்ள வாக்குகளை தனக்கு சாதகமாக்கவேண்டும் என்று நினைத்து அகிலேஷ் யாதவ் கடுமையாக உழைத்து வருகிறார்.

மாயாவதி
உத்தரபிரதேச மாநிலத்தின் மற்றொரு பெரிய கட்சியான பகுஜன் சமாஜ் எந்த மாதிரியான நிலைப்பாட்டை எடுக்கும் என்பது தெரியவில்லை,கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜ் கட்சி இணைந்தது. அதன் பின்னர் இரு கட்சிகளுக்குமிடையே இணக்கமான உறவு இல்லை. இந்த முறை இரு கட்சிகளும் இணைந்தால் சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெற வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர். ஆனால் மாயாவதிக்கு தனித்து நின்று வெற்றி பெற்று முதல்வராகவேண்டும் என்பதே எண்ணம்.

2022சட்டசபைத் தேர்தல்
காங்கிரஸ் கட்சியின் சார்பிலும் உத்தரப்பிரதேசத்தில் கட்சியை வலுப்படுத்த பிரியங்கா காந்தி மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளாக தீவிரமாக பணியாற்றி வருகிறார். அதனால், கடந்த சட்டசபைத் தேர்தலைப் போலவே இம்முறையும் காங்கிரஸ் கட்சி சமாஜ்வாதியுடன் கூட்டணி வைக்குமா அல்லது லோக்சபா தேர்தலைப் போல தனித்து நிற்குமா என்ற கேள்வியும் எழுகிறது. வரும் 2022ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலுக்காக இப்போதே வியூகம் வகுக்கும் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
-
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
பாஜகவில் இருந்து விலகலா.. ஆதரவாளர்களுடன் ஆலோசனை குறித்து சரத்குமார் பரபரப்பு விளக்கம் -
30+ தொகுதியில் போட்டி? தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது.. வெளியான முக்கிய தகவல் -
ஆதரவாளர்களுடன் சரத்குமார் ரகசிய ஆலோசனை.. மீண்டும் உதயமாகிறதா சமக.. அதிர்ச்சியில் பாஜக -
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
அமமுகவுக்கு 12 சீட்? குக்கர் சின்னத்தில் போட்டி.. பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பில் உறுதி?! -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஜான் குமாருக்கு மீண்டும் சீட்!












Click it and Unblock the Notifications