• search
லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

வெற்றிக் கொடி கட்டு... அகிலேஷ் பக்கம் அப்படியே மொத்தமாக திரும்பிய ஜாதிய வாக்குகள்-அதிர்ச்சியில் பாஜக

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தல் களம் திடுதிப்பென நிகழ்ந்து வரும் திருப்பங்களால் திக்குமுக்காடிப் போயிருக்கிறது. பாஜகவில் இருந்து கொத்து கொத்தாக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் அகிலேஷ் யாதவ் பக்கம் பேரலை போல தாவிக் கொண்டிருக்கின்றனர்.

உ.பி. சட்டசபை தேர்தல் களத்தில் நுழையும் போது அகிலேஷ் யாதவ் படுபுத்திசாலித்தனமாக வாக்கு கணக்குகளைப் போட்டு வைத்திருந்தார். பாரதிய ஜனதா கட்சிக்கு (பா.ஜ.க.) ஆதரவான இரு முக்கியமான ஜாதிகளின் தலைவர்களை வளைத்துப் போட்டதுதான் அது. உ.பி.யில் பிற்படுத்தப்பட்ட ஜாதிகளில் ஜாட் மற்றும் ராஜ்பார் ஆகியவை வலிமையானது. பாஜகவின் வாக்கு வங்கிகளாக இருந்தவை. மேற்கு உத்தரப்பிரதேசத்தில் பாஜகவுக்கு பெரும் வெற்றியை பெற்றுக் கொடுத்தவர்கள் ஜாட் சமூகத்தினர். மொத்த மக்கள் தொகையில் 2% உள்ளனர். முன்னாள் பிரதமர் சரண்சிங் , ஜாட் சமூகத்தின் மிக முக்கியமான ஆளுமை. அவரது குடும்பத்தினர் இன்றளவும் ஜாட் சமூகத்தின் மீது செல்வாக்கை செலுத்தி வருகின்றனர். மேற்கு உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் கணிசமாக விரிந்து கிடக்கின்றனர்.

உ.பி: அகிலேஷுடன் பீம் ஆர்மி சந்திரசேகர் ஆசாத் சந்திப்பு- பாஜக கூட்டணி எம்.எல்.ஏக்கள் 2 பேர் ராஜினாமா உ.பி: அகிலேஷுடன் பீம் ஆர்மி சந்திரசேகர் ஆசாத் சந்திப்பு- பாஜக கூட்டணி எம்.எல்.ஏக்கள் 2 பேர் ராஜினாமா

ஜாட் வாக்குகள்

ஜாட் வாக்குகள்

மத்திய பாஜக அரசையும் பிரதமர் மோடியையும் பின்வாங்க வைத்த ஓராண்டு கால விவசாயிகளின் போராட்டத்தில் முன்னணி வகித்தவர்கள் ஜாட் ஜாதியினர். விவசாயிகளின் அதிருப்தியை சமாளிக்க சரண்சிங்கின் பேரன் ஜெயந்த் சவுத்ரியின் (அஜித்சிங் மகன்) ராஷ்டிரிய லோக் தள் கட்சியுடன் கூட்டணி அமைக்க பாஜக படாதபாடு பட்டது. ஆனால் விவசாயிகள் போராட்டம் இயல்பாகவே ஜெயந்த் சவுத்ரியை பாஜகவுக்கு எதிராக நிறுத்தியது. இதனை மிக அழகாக பயன்படுத்திக் கொண்டார் அகிலேஷ் யாதவ். தேர்தல் பிரசாரத்துக்கு வருவதற்கு முன்னரே ஜெயந்த் சவுத்ரியின் ராஷ்டிரிய லோக் தள் கட்சியுடன் கூட்டணியை பலப்படுத்திக் கொண்டார் அகிலேஷ் யாதவ்.

ராஜ்பார் சமூகம்

ராஜ்பார் சமூகம்

இதேபோல்தான் கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் 15%-20%யிலான எண்ணிக்கை கொண்ட ராஜ்பார் ஜாதியையும் அகிலேஷ் வளைத்தார். ராஜ்பார் சமூகம், உத்தரப்பிரதேச அரசியலில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கக் கூடிய அரசியல் சக்தியாக திகழ்கிறது. அதனால் எந்த அரசியல் கட்சியும் இந்த சமூகத்தை புறந்தள்ளிவிட முடியாது. ஓம் பிரகாஷ் ராஜ்பார், இந்த சமூகத்தின் மிக முக்கியமான வலிமையான தலைவர். அதனால்தான் 2017 சட்டசபை தேர்தலில் ராஜ்பாரின் சுஹெல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்து வாக்குகளை அறுவடை செய்தது. அத்துடன் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் அவருக்கு இடமும் கொடுத்தது பாஜக. ஆனால் அமைச்சர் பதவியையும் தூக்கி வீசிவிட்டு பாஜகவுடனான கூட்டணியையும் முறித்துக் கொண்டு 3 மாதங்களுக்கு முன்னரே அகிலேஷ் யாதவுடன் கை கோர்த்துவிட்டது ராஜ்பார் கட்சி. இதனால் ஏற்படும் மிகப் பெரிய வாக்கு சேதாரத்தை சமாளிப்பதற்காக வேறுவழியே இல்லாமல் 7 சிறிய ஜாதி கட்சிகளை பாஜக கூட்டணியில் சேர்த்துக் கொண்டது.

அகிலேஷ் ஆட்டம்

அகிலேஷ் ஆட்டம்

இப்போது அகிலேஷ் தேர்தல் களத்தில் நின்று கொண்டு அடுத்த ஆட்டத்தை நடத்தி வருகிறார். எஞ்சியிருக்கும் இதர பிற்படுத்தப்பட்ட ஜாதிகளின் மிக முக்கிய தலைவர்களை பாஜகவில் இருந்து அலேக்காக தூக்கி அசால்ட் காட்டி வருகிறார் அகிலேஷ் யாதவ். அவரது இந்த ஆட்டத்தில் விழுந்த 2 மிக முக்கிய விக்கெட்டுகள் மவுரியாக்கள், நோனியாக்கள். உ.பி. அரசியலில் வலம் வரும் எத்தனையோ ஜாதி தலைவர்களில் பத்தோடு பதினொன்றாக இருப்பவர் ஸ்வாமி பிரசாத் மவுரியா அல்ல. ஒருகாலத்தில் பகுஜன் சமாஜ் கட்சியில் மாயாவதியின் வலதுகரமாக திகழ்ந்தவர். 2012, 2014 தேர்தல்களில் மாயாவதி தோல்வியைத் தழுவிய நிலையில் 2017 தேர்தல் நேரத்தில் பாஜகவுக்கு தாவியவர் ஸ்வாமி பிரசாத் மவுரியா. 2017 சட்டசபை தேர்தலில் ஸ்வாமி பிரசாத் மவுரியாவால் பெருமளவிலான வாக்குகளைப் பெற்ற பாஜக அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் மவுரியா சமூகம் என்பது இதர பிற்படுத்தப்பட்டவர்களில் 3-வது மிகப் பெரிய சமூகம். மொத்த மக்கள் தொகையில் 8% மவுரியாக்கள். யாதவ், குர்மிகள், அதிக எண்ணிக்கையில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்கள்.

மவுரியாக்கள் வாக்குகள்

மவுரியாக்கள் வாக்குகள்

கிழக்கு உ.பி.யின் குஷிநகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ஸ்வாமி பிரசாத் மவுரியா. ரேபரேலி, உன்சாஹர், ஷாஜஹான்பூர், பதாயூன் மாவட்டங்களில் பெரும் செல்வாக்கு கொண்ட தலைவர் ஸ்வாமி பிரசாத் மவுரியா. உ.பி.யில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் மவுரியாக்கள் தீர்மானிக்கும் சக்திகளாக இருக்கின்றனர். இதனால் இயல்பாகவே உ.பி. அரசியலில் பேரம் பேசுகிற பெரும் சக்தியாக திகழ்கின்றனர். மவுரியாக்களின் அரசியல் கட்சி மகான் தள். தேர்தல் பிரசாரத்துக்கு முன்னரே மவுரியாக்களின் மகான் தள் கட்சியுடன் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி கூட்டணி அமைத்துவிட்டது. இப்போது ஸ்வாமி பிரசாத் மவுரியாவும் அகிலேஷ் பக்கம் வந்துவிட்டார். ஒட்டுமொத்த மவுரியாக்களின் வாக்குகளையும் சிந்தாமல் சிதறாமல் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிக்கு ஸ்வாமி பிரசாத் மவுரியா கொண்டு சேர்ப்பார் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது.

நோனியா ஜாதி ஓட்டுகள்

நோனியா ஜாதி ஓட்டுகள்

கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் இன்னொரு மிக முக்கியமான இதர பிற்படுத்தப்பட்ட சமூகம் நோனியா. கிழக்கு உ.பி.யில் 3% நோனியா சமூகத்தினர் உள்ளனர். பிரதமர் மோடியின் வாரணாசி, சந்தவுலி, மிர்சாபூர் பகுதிகளில் நோனியாக்கள் கணிசமாக உள்ளனர். நோனியா சமூகத்தைச் சேர்ந்த பிரித்விராஜ் ஜன் சக்தி கட்சியுடன் பாஜக கூட்டணி வைத்திருக்கிறது. ஆனால் பிரித்விராஜ் ஜன்சக்தியை விட வலிமையான ஆதரவு பலம் கொண்டவர் தாராசிங் செளகான். உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தார். இப்போது அமைச்சர் பதவியையும் பாஜகவையும் தூக்கி எறிந்துவிட்டு அகிலேஷ் யாதவுடன் கை கோர்த்துள்ளார் தாராசிங் சவுகான்.

யோகி ஆதித்யநாத்

யோகி ஆதித்யநாத்

2017 சட்டசபை தேர்தல் முடிந்த போது இதர பிற்படுத்தப்பட்ட மவுரியா ஜாதியை சேர்ந்த கேசவ் பிரசாத் மவுரியாதான் முதல்வராக்கப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு அந்த ஜாதியில் நிலவியது. ஆனால் தாக்கூர் சமூகத்தைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத் முதல்வராக்கப்பட்டார். கேசவ பிரசாத் மவுரியாவுக்கு துணை முதல்வர் பதவி தரப்பட்டது. ஆனால் தமது ஆட்சிக் காலத்தில் தாக்கூர் ஜாதியினருக்கு அனுகூலமானவராக யோகி ஆதித்யநாத் நடந்து கொண்டதை பிற்படுத்தப்பட்ட ஜாதிகள் மட்டுமல்ல பிராமணர்கள் உள்ளிட்ட உயர் ஜாதியினரும் ரசிக்கவில்லை. யோகி ஆதித்யநாத்தின் இந்த போக்கால் பிற்படுத்தப்பட்ட ஜாதிகளின் வாக்குகள் பறிபோகும் என்பதை மோடி- அமித்ஷா உணராமல் இல்லை. ஆனால் யோகி ஆதித்யநாத்துக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முழுமையான ஆதரவு இருந்தது. அதனால் யோகி ஆதித்யநாத்தை முதல்வர் பதவியில் இருந்து தூக்கி அடிக்காமல் விட்டுவிட்டது பாஜக மேலிடம். இப்போது அதன் மிக மோசமான விளைவுகளை அனுபவித்து வருகிறது பாஜக.

பாஜக மீது அதிருப்தி

பாஜக மீது அதிருப்தி

தேர்தல் காலங்களில் பாஜகவால் காலந்தோறும் தாங்கள் கறிவேப்பிலைகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறோம்.. இனியும் அப்படி இருக்க முடியாது என்பதுதான் இதர பிற்படுத்தப்பட்ட ஜாதிகள் அகிலேஷ் பக்கம் நிற்பதற்கு காரணம். பாஜகவின் இந்த அணுகுமுறையால்தான் தேர்தல் நேரத்தில் கொத்து கொத்தாக இதர பிற்படுத்தபட்ட ஜாதி அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் அந்த கட்சியையே கை கழுவிவிட்டனர். பாஜகவின் இந்த அப்பட்டமான பலவீனங்கள் முழுவதுமே அகிலேஷ் யாதவுக்கு ஆகப் பெரும் சாதகமாகிவிட்டது. இதுவரை வெளியான கருத்து கணிப்புகள் அகிலேஷ் யாதவ், கடும் போட்டியைத்தான் தருவார் என கூறின. இப்போதைய தலைகீழ் மாற்றங்கள் கருத்து கணிப்புகளிலும் மாற்றங்களைத் தரும் என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து. (மூத்த பத்திரிகையாளர் Ashutosh-ன் தரவுகளின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை)

English summary
OBC deciding factor castes joined hands with Akilesh Yadav for the UP Assembly Elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X