காலையில் சீக்கிரம் டீ போட்டு தராததால் ஆத்திரம்.. மனைவியை வாளால் ஆட்டை அறுப்பது போல் அறுத்த கணவன்!
லக்னோ: காலையில் சீக்கிரமாக டீ போட்டு தராததால் ஆத்திரம் அடைந்த கணவன், மனைவியின் தலையை வாளால் துண்டித்து கொடூரமாக கொலை செய்திருக்கிறான்.. நடுங்க வைக்கும் சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.
கணவன்-மனைவி இடையே சண்டை சச்சரவு இயல்பான ஒன்று. சின்னச் சின்ன காரணங்களுக்காக ஏற்படும் சண்டைகள் அடுத்த கொஞ்ச நேரத்திலேயே மறைந்துவிடும். ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து வைத்திருந்தால், என்ன சண்டை. என்ன கோபம் என்றாலும் சிலநிமிடங்களில் காணாமல் போய்விடும். ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து போவார்கள். அவர்களுக்காக இவர்களும், இவர்களுக்காக அவர்களும் மாறி மாறி புரிதலுடன் வாழ்வது தான் சுகமான தாம்பத்தியமான வாழ்க்கையாக இருக்கும். ஆனா ஒருவர் மட்டுமே வாழ்நாள் எல்லாம் விட்டுக்கொடுத்து செல்லும் வகையிலோ, அல்லது ஆதிக்க மனப்பான்மையுடன் கணவன் அல்லது மனைவி செயல்பட்டால், அந்த வாழ்க்கையில் சலிப்பும் வேதனையுமே மிஞ்சும்.

இது ஒருபுறம் எனில், தம்பதியிடையே யாராவது ஒருவர் ஆத்திரம் கொள்பவராக இருந்தால், ஆத்திரத்தில் தன்னை மறந்து எதுவும் செய்வார்கள் என்றால், சிறிய பிரச்சினைகள்கூட மிகப்பெரிய விபரீதத்தில் முடிந்துவிடும். அப்படித்தான் உத்தரப்பிரதேசத்தில் சின்ன விஷயத்திற்காக மனைவியை கொடூரமாக கொன்றுள்ளார் கணவன். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்..
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் உள்ள பசல்வர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் தரம்வீர் ஜாதவ் (வயது 52). காய்கறி வியாபாரி ஆவார். இவரது மனைவி சுந்தரி (50). இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். காய்கறி வியாபாரியான தரம்வீரின் குடிப்பழக்கம் உடையவர். அதனால் அடிக்கடி மது குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்து அவரை தாக்கி வந்துள்ளார்.
வழக்கம் போல் திங்கட்கிழமை இரவும் மது குடித்துவிட்டு தள்ளாடிய நிலையில் வந்தார் தரம்வீர். இதைப்பார்த்து அவரது மனைவி சுந்தரி கோபத்துடன் சண்டை போட்டுள்ளார். ஆனால் இதை கொஞ்சமும் பொருட்படுத்தாத தரம்வீர், மனைவியை திட்டிவிட்டு படுத்து தூங்கிவிட்டார். மறுநாள் காலையில் வழக்கம்போல் காலையில் எழுந்த சுந்தரியிடம் தரம்வீர் டீ போட்டு கேட்டார். ஆனால் இரவு நடந்த சண்டையில் மனம் உடைந்த சுந்தரி உடனடியாக டீ போட்டு கொடுக்கவில்லை. வெகுநேரம் கழித்து டீ போட்டு கொடுத்திருக்கிறார்.
இதனால் ஆத்திரம் அடைந்த தரம்வீர் வீட்டில் இருந்த வாளால் மனைவியின் கழுத்தை ஆட்டை அறுப்பதுபோல் அறுத்து தலையை துண்டித்து கொன்றுள்ளார். அதோடு நின்றுவிடாமல் அவரது உடலிலும் வாளால் சரமாரியாக வெட்டி இருக்கிறார்.. இதில் சுந்தரி கொடூரமாக இறந்து போனார். இந்த கொடூர காட்சி அவரது மகன், மகள்கள் பக்கத்திலேயே நடந்துள்ளதுதான். பிள்ளைகள் தடுத்தும் கேட்காமால் ஆத்திரத்துடன் இப்படி செய்தவர், தடுத்தால் உங்களையும் கொல்வேன் என்று மிரட்டி மனைவியை கொன்றுள்ளார்.
மனைவியை கொன்ற பின்னர், தரம்வீர் ரத்தம் சொட்டிய வாளுடன் அருகே இருந்த கரும்பு தோட்டத்துக்குள் தப்பி ஓடி உள்ளார். அவரை பிடிக்க அருகில் இருந்தவர்கள் முயற்சித்தபோது அவர்களையும் கொன்றுவிடுவதாக மிரட்டி உள்ளார். இந்த சம்பவம் பற்றி அறிந்த போஜ்பூர் போலீசார் விரைந்து சென்று சுந்தரியின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தரம்வீரின் மகன் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த தரம்வீரை கைது செய்து அவரிடம் இருந்த வாளையும் பறிமுதல் செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications