மதுரை திருமங்கலம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 5 பேர் பலி..முதல்வர் இரங்கல் - தலா.5 லட்சம் நிதி உதவி
மதுரை: திருமங்கலம் அருகே அழகுசிறை கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் நிகழ்ந்த விபத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பட்டாசு ஆலை விபத்தில் ஒரு பெண் உட்பட 5 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 10க்கும் அதிகமானோர் படுகாயமைடைந்துள்ளனர். வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தலா. 5 லட்சம் ரூபாய் நிவாரண உதவி அறிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
மதுரை திருமங்கலம் அருகே உள்ள அழகுசிறை கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில், அருகில் இருக்கக்கூடிய சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பணியாற்றி வந்தனர்.
இந்த ஆலையில் கோயில் திருவிழாக்கள் மற்றும் இல்ல நிகழ்ச்சிகளின்போது பயன்படுத்துவதற்கான அதிக சத்தத்துடன் வெடிக்கும் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தன. இன்று வழக்கம்போல், 15-க்கும் மேற்பட்டவர்கள் பட்டாசு ஆலையில் பணிபுரிந்து வந்தனர்.

5 பேர் மரணம்
இந்நிலையில், பட்டாசு ஆலையில் திடீர் விபத்து ஏற்பட்டது. வெடி விபத்தில் மூன்று கட்டிடங்கள் முழுவதும் வெடித்து சிதறி தரைமட்டமானது. இந்த விபத்தில் வடக்கம்பட்டியை சேர்ந்த அம்மாவாசி, வல்லரசு, கோபி, புளியகவுண்டன்பட்டியை சேர்ந்த விக்கி, அழகுசிறையை சேர்ந்த பிரேமலா உயிரிழந்துள்ளனர்.

சிதறிய உடல் பாகங்கள்
10க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். கட்டிடங்கள் முற்றிலும் தரைமட்டமானதில் உடல் பாகங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். இதில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட பத்துக்கும் மேற்பட்டோர் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

படுகாயங்களுடன் சிகிச்சை
படுகாயமடைந்தவர்கள் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. விபத்து நிகழ்ந்த இடத்தில் காவல்துறையினரும் வருவாய் துறை அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
இதனிடையே விபத்து குறித்து தகவல் அறிந்து மிகவும் வேதனை அடைந்ததாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அழகுசிறை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்த 5 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், வெடிவிபத்தில் காயமடைந்தோருக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications