போஸ்டரில் என் போட்டோ.. மதுரை தவெகவுக்கு சிடிஆர் நிர்மல்குமார் உத்தரவு.. டென்ஷனான மா.செ.க்கள்!
மதுரை: மதுரையில் பொறுப்பு அமைச்சரான சிடிஆர் நிர்மல்குமாருக்கும், தவெக எம்எல்ஏ-க்களுக்கும் இடையில் மோதல் அதிகரித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பாக அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார், கட்சி சார்பாக அடிக்கப்படும் எந்த போஸ்டராக இருந்தாலும் தனது புகைப்படம் இடம்பெற வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார். இது தவெக நிர்வாகிகளை சூடாக்கி இருக்கிறது.
உள்ளாட்சித் தேர்தல் நெருங்கிவிட்டதால், தவெகவில் கட்டமைப்பை வலுப்படுத்த கோரி அக்கட்சி தலைமை மாவட்டச் செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாகவே ஒரு தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்று நியமனம் செய்யப்பட்டனர். அந்த வகையில் மதுரை தவெகவில் மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கை 8ஆக இருக்கிறது.

அதேபோல் மதுரையில் பொறுப்பு அமைச்சராக சிடிஆர் நிர்மல்குமார் செயல்பட்டு வருகிறார். அண்மையில் சிடிஆர் நிர்மல்குமார் மற்ற மாவட்டச் செயலாளர்களுக்கு ஒரு உத்தரவை போட்டிருக்கிறார். அதாவது மதுரையில் எந்த மாவட்டச் செயலாளர் நிகழ்ச்சி நடத்தினாலும் அந்த பேனரில் தமது புகைப்படம் இடம்பெற வேண்டும். அதேபோல் எந்த போஸ்டராக இருந்தாலும் பொறுப்பு அமைச்சர் என்ற முறையில் நான் இருக்க வேண்டும்.
எதுவாக இருந்தாலும் கொஞ்சம் அனுமதி பெற்று செய்யுங்கள் என்று கறாராக கூறி இருக்கிறார். இதனால் தவெகவில் சீனியர் எம்எல்ஏ-க்களாக இருக்கும் கல்லாணை, தங்கப்பாண்டி, மதூர் பதுருதீன் உள்ளிட்டோர் கொந்தளித்துள்ளனர். சிடிஆர் நிர்மல்குமார் கட்சியில் இணைவதற்கு முன்பு இருந்தே விஜய் மக்கள் இயக்கத்தில் உழைத்தவர்கள் நாங்கள்..
மதுரையில் விஜய் ரசிகர்களை ஒருங்கிணைத்து எத்தனையோ நிகழ்ச்சியை நடத்தி கட்டமைப்புகளை உருவாக்கி இருக்கிறோம் என்று பதிலடி கொடுத்துள்ளனர். இதனால் தங்களின் அதிகார வட்டத்திற்குள் சிடிஆர் நிர்மல்குமார் தலையிட வேண்டாம் என்றும் தெளிவாக கூறி இருக்கின்றனர். இதனால் மதுரை தவெகவில் கோஷ்டி பூசல் உச்சத்தில் இருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் மதுரையில் கல்லாணை அல்லது தங்கப்பாண்டி இருவரில் ஒருவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இருவரையும் ஓரங்கட்டி சிடிஆர் நிர்மல்குமார் அமைச்சராகியதும் இந்த மோதலுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த பிரச்சனையை புஸ்ஸி ஆனந்த் வசம் கொண்டு செல்லவும் கல்லாணை தரப்பு முடிவு செய்துள்ளதாகவும் அக்கட்சியினர் கிசுகிசுக்கின்றனர்.


Click it and Unblock the Notifications
