“தொகுதி மறுவரையறை மசோதா: திமுக வெளிநடப்பு செய்யப்போவதாக தகவல் வருகிறது” - அமைச்சர் CTR நிர்மல்குமார்
மதுரை: "தொகுதி மறுவரையறை மசோதாவின்போது திமுக வெளிநடப்பு செய்யப்போவதாக தகவல் வருகிறது" என்று தவெக அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். மேலும், "அப்படி நடந்தால், அது ஆதரவு தருவதாகத்தான் அர்த்தம்" என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய பாஜக அரசின் தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக, தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்களின் ஆலோசனைக் கூட்டத்தைச் சென்னையில் நேற்று முதல்வர் விஜய் நடத்தினார். இந்தக் கூட்டத்தை திமுக, அதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் 37 எம்.பி.க்கள் புறக்கணித்தனர். அதேநேரம் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 19 எம்.பி.க்கள் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், இன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் பேசுகையில், "அரசியல் காரணங்களுக்காகவே மத்திய அரசு தற்போது தொகுதி மறுவரையறை மசோதாவைக் கொண்டு வருகிறது. மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், தமிழகத்திற்கான எம்.பி தொகுதிகளின் எண்ணிக்கை குறைய அதிக வாய்ப்புள்ளது. அவசியமற்ற இந்த காலகட்டத்தில் தொகுதி மறுவரையறையைக் கொண்டுவருவது சிறுபான்மை மக்களை ஒதுக்கும் செய;. தமிழக உரிமையைக் காக்க அனைவரும் ஒன்றிணைந்து இந்த மசோதாவை எதிர்க்க வேண்டும்" என்றார்.
மேலும் பேசிய அவர், "கடந்த ஏப்ரல் மாதம் அனைவரும் இணைந்து ஒரு தீர்மானம் கொண்டு வந்தார்கள். அந்தத் தீர்மானத்தின்படி திமுக இந்த மசோதாவிற்கு முழுமையான எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும். நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிராக வாக்களிக்க வேண்டும்.
ஆனால், தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்யப்படும்போது திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்யப்போவதாகத் தகவல்கள் வருகின்றன. திமுக வெளிநடப்பு செய்தால் அது மசோதாவை மறைமுகமாக ஆதரிப்பதற்குச் சமம். அப்படிச் செய்வது தமிழகத்திற்குச் செய்யும் மிகப்பெரிய துரோகம்.
ஆட்சியில் இருந்தபோதும் எடுத்த முடிவுக்கும் இல்லாத போது எடுக்கும் முடிவுக்கும் எவ்வளவு வித்தியாசம். தனது குடும்பத்தைக் காப்பாற்றவும், வழக்குகளில் இருந்து தப்பிக்கவுமே ஸ்டாலின் பாஜகவோடு இணக்கமாகச் செயல்படுகிறார். இதுவரை மறைமுகமாக ஆதரித்தவர்கள், இனி நேரடியாகவே ஆதரிக்கிறோம் என்று கூறிவிடலாம். ஸ்டாலின் குடும்பத்தை காப்பாற்ற ஒட்டுமொத்த தமிழக நலனையும் பாஜகவிடம் அடகு வைக்க பார்க்கிறது திமுக.
அதேசமயம் காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என திமுக சொன்னார்கள். பேரவையில் காவிரி விவகாரத்தில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைத்து கட்சிகளிடமும் அதுதொடர்பான தெளிவு இருக்கிறது. அதனால் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டிய அவசியமில்லை. எனவே, தொகுதி மறுவரையறை விஷயத்தில் திமுக தனது தெளிவான நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்த வேண்டும்," என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
