அதிமுகவில் சில மாற்றம் அவசியம்.. மிகவும் எமோசனலாக பேசிய செல்லூர் ராஜூ
மதுரை : தலைமையை நம்பி அதிமுக இல்லை என்றும் தொண்டர்ளை நம்பியே அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் உள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார். மேலும் இன்றைக்கு சில மாற்றங்களை செய்ய வேண்டியதும், கட்சியை வளர்க்க வேண்டியதும் அவசியமாக உள்ளது என்றும் கூறினார்.
Recommended Video
மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக 50வது பொன்விழா ஆண்டை சிறப்பாக கொண்டாடுவது குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இன்று நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசும் போது அதிமுக குறித்து மிகவும் உணர்ச்ச்சி பூர்வமாக பேசினார். அவர் கூறுகையில், எம்.ஜி.ஆர் ரசிகன் நான் அமைச்சராக இருந்தேன் என்பதில் பெருமையாக உள்ளது. என் உயிர் மூச்சு உள்ளவரை கட்சிக்காக உழைப்பேன். அதிமுக கரை கொண்ட வேஷ்டி தான் சாகும் போதும் என் உடலில் இருக்கும்.

10 வருடம் அமைச்சர்
அதிமுகவின் லட்சிய தொண்டனாக இருப்பேன். அதிமுக ஆளுங்கட்சியாக, எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஒன்று தான். காரில் போகும் போது தான் நான் அமைச்சர். காரை விட்டு இறங்கினால் சாதாரண தொண்டன் தான். மக்களின், தொண்டர்களின் அன்பு, ஆசை காரணமாக தான் பத்தாண்டு காலமாக அமைச்சராக இருந்தேன்.

அதிமுக
அதிமுகவில் மட்டுமே ஜனநாயகம் உள்ளது. திமுகவில் ஜனநாயகமே இருந்தது கிடையாது. திமுக என்ற கட்சி கருணாநிதி குடும்ப கட்சி. திமுகவில் தலைவர் பதவி, முதலமைச்சர் பதவி கருணாநிதி குடும்பத்திற்கு மட்டுமே சொந்தமானது. ஆனால் அதிமுகவில் சாதாரண தொண்டன் கூட முதல்வராகலாம். அதற்கு எடுத்துக்காட்டு தான் இபிஎஸ்- ஒபிஎஸ்.

சில மாற்றம்
அதிமுகவை சாதாரணமாக நினைத்து விட கூடாது . ஒரு காலத்தில் கட்சியில் பதவிக்கு வர வேண்டுமானால் எத்தனை தியாகங்களை செய்ய வேண்டும் தெரியுமா? இன்று வரலாறு மாறி உள்ளது. இன்றைக்கு சில மாற்றங்களை செய்ய வேண்டியதும், கட்சியை வளர்க்க வேண்டியதும் அவசியமாக உள்ளது.

வரலாறு இல்லை
கட்சிக்கு அதிகமான இளைஞர்ளை கொண்டு வரவேண்டும் என்றால் இளைஞர்களுக்கு புதிய பதவி, புதிய பொறுப்புகள் கொடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியிலும் கட்சியிலும் சாதாரணமானவர்கள் உயரமான இடத்திற்கு வரலாம். அதிமுகவை விட்டு ஓடியவர்களை பற்றி கவலையே கிடையாது.

கவலையில்லை
இன்று திமுகவை நிமிர்த்தி வைத்திருக்கிறார்கள் என்றால் அது அதிமுகவிலிருந்து சென்றவர்கள் தான். இன்று திமுக அமைச்சர்கள் மாவட்டச்செயலாளர்கள் பலர் அதிமுகவில் இருந்து அடையாளம் காணப்பட்டு அங்கு சென்றவர்கள். அதைப்பற்றி நமக்கு கவலையில்லை.
தலைமையை நம்பி இந்த இயக்கம் இருந்ததில்லை. தொண்டனை நம்பியே அதிமுக உள்ளது.


Click it and Unblock the Notifications
