'இல்லம் தேடி கல்வி ' திட்டம்... பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சொன்ன சூப்பர் விஷயம்
மதுரை: 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கல்வி திறனை மேம்படுத்துவதற்காக 'இல்லம் தேடி கல்வி' திட்டம் என்ற புதிய திட்டத்தை உருவாக்கி அதற்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை 5 நாட்கள் பள்ளி முடிந்த பிறகு மாலை நேரங்களில் இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
மதுரை மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் 'இல்லம் தேடி கல்வி' திட்டம் விழிப்புணர்வு கலை பயண பிரசார வாகனத்தை அமைச்சர்கள் பி.மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் வியாழக்கிழமை தொடங்கி வைத்தனர்.

பிடிஆர் தகவல்
பின்னர் நிகழ்ச்சியில் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசுகையில் "கொரோனா தொற்றால் கடந்த ஒன்றை ஆண்டுகளாக பள்ளிகள் செயல்படவில்லை. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே கல்வி கற்பிக்கப்படுகிறது.

முதல்வர் அறிவித்தார்
இந்த கல்வி மாணவர்களின் திறனை வளர்ப்பதற்கு போதாது என்று முதலமைச்சரின் பொருளாதார ஆலோசனை நிபுணர் குழு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் கருத்து தெரிவித்தனர். அதன் அடிப்படையில், 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கல்வி திறனை மேம்படுத்துவதற்காக 'இல்லம் தேடி கல்வி' திட்டம் என்ற புதிய திட்டத்தை உருவாக்கி அதற்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

30 லட்சம் மாணவர்கள்
பள்ளிகளில் உள்ள மாணவர்களின் விவரங்கள் மட்டுமின்றி, பிறப்பு சான்றிதல் அடிப்படையில் தகவல்களை திரட்டி, கல்வி பயிலாத மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு கல்வி போதிப்பதுதான் இந்த திட்டத்தின் நோக்கமாகும். இதன் அடிப்படையில் 30 லட்சம் மாணவர்கள் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

எப்படி கல்வி
எனவே அந்த மாணவர்களின் இருப்பிடத்திற்கே சென்று சமூத கூடங்கள் உள்ளிட்ட பகுதியில் மாலைநேர வகுப்புகள் எடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் முதல் கட்டமாக மதுரை உள்பட 9 மாவட்டங்களில் 'இல்லம் தேடி கல்வி' திட்டம் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும். அதற்கு தேவையான அனைத்து நிதியும் ஒதுக்கப்படும். திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை 5 நாட்கள் பள்ளி முடிந்த பிறகு மாலை நேரங்களில் இந்த கல்வி புகட்டும் திட்டம் செயல்படுத்தப்படும்" இவ்வாறு அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தன்னார்வலர்கள்
முன்னதாக கடந்த 18ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இல்லம் தேடி கல்வி திட்டம் எப்படி செயல்படுத்தப்படும் என்று கூறும் போது, "இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் மூலம் தன்னார்வலர்களை இணைப்பதற்கான இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. அதில் ஆர்வமாக பலர் பதிவு செய்ய முன்வர வேண்டும். இந்த திட்டத்தை நாம் அனைவரும் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மாலை 5 மணி முதல் 7 மணி வரை கல்வி மையங்களுக்கு அனுப்ப வேண்டும்.

எப்படி நடக்கும்
20 மாணவர்களுக்கு ஒரு தன்னார்வலர் என்கிற விகிதத்தில் இந்த திட்டமானது நடைமுறையில் இருக்கும். தொடர்ந்து 6 மாத காலத்திற்கு இந்த திட்டம் செயல்படும். மதுரை, திருச்சி, தஞ்சை, நாகை, கடலூர், திண்டுக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.இந்த கற்றல் வழி வகுப்புளை எல்லாம் அந்தந்தப் பள்ளி நிர்வாகமே கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் கற்றல் இடைவெளியை இந்த திட்டம் குறைக்கும். இதற்காக 200 கோடி ரூபாய் அளவிற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தன்னார்வளர்களுக்கு 1,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்க ஆலோசித்து வருகிறோம், கதை சொல்வது, பாடல் பாடுவது போன்ற செயல்பாடுகளும் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் செயல்படுத்தப்படும். தமிழகத்தில் கொரோனாவிற்கு பின்னர் கல்வி இடைநிற்றலில் ஒரு லட்சம் மேல் மாணவர்கள் பள்ளிக்கு வராமல் உள்ளனர். இந்த இல்லம் தேடி கல்வி திட்டம் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையும், 6 முதல் 8ஆம் வகுப்பு வரை என இரண்டு குழுக்களாக வகுப்புகள் நடைபெறும்" என்றார்.












Click it and Unblock the Notifications