ஏற்கனவே முடிவு பண்ணி தானே வச்சிருப்பீங்க! அப்பறம் ஏன் லேட்? தமிழக அரசுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி
மதுரை: மதுரை, திருச்சி, விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் முதல்வர்கள் நியமனம் செய்ய உத்தரவிட கோரிய வழக்கில், ஏற்கனவே அரசு கல்லூரிக்கான முதல்வர்கள் யார் என்று தீர்மானித்து வைத்திருப்பீர்கள் அவர்களை விரைந்து நியமனப்படுத்துவதில் காலதாமதம் ஏன்? என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், தென் மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள டீன் பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும், அந்த நடவடிக்கையை நீதிமன்றம் முழுமையாக கண்காணிக்கும் எனவும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள டீன் பணியிடங்களை விரைவாக நிரப்புவது தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை செயலர் பதில் அறிக்கை தாக்கல் செய்யவும், உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மதுரையை சேர்ந்த வெரோணிக்கா மேரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில், "மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதியுடன் ஓய்வு பெற்ற நிலையில், தற்போது மூத்த பேராசிரியர்கள் மருத்துவமனையின் பொறுப்பு முதல்வர்களாக பதவி வகித்து வருகின்றனர். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை தமிழகத்தில் இரண்டாவது பெரிய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக இயங்கி வருகிறது.
நாள்தோறும் 10 ஆயிரம் நோயாளிகளும், 3000 உள் நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகே 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் குழந்தைகளுக்கான பிரத்தியேக மருத்துவமனை கட்டுமான பணி மிகவும் மெதுவாக நடைபெற்று வருகிறது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவ மையம் முழுமையாக நடைமுறை படுத்தப்பட வேண்டும். வாகன போக்குவரத்து நிறுத்த வசதி, அறுவை சிகிச்சைகளில் தாமதம், அதிகளவிலான கூட்டம், சிகிச்சை அளிப்பதில் தாமதம், தரம் குறைந்த மருத்துவம், அவசரகால மருந்துகளை கொள்முதல் செய்வது போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண நிரந்தர முதல்வரை பணியமர்த்துவது மிகவும் அவசியம்.
மதுரையில் மட்டுமின்றி தேனி திருச்சி, விருதுநகர் உள்ளிட்ட பல அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் முதல்வர்கள் நியமிக்கப்படவில்லை. ஆகவே தமிழகத்தில் மதுரை உள்பட காலியாக உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
தமிழக சுகாதாரத்துறை தரப்பில் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. காலியாக உள்ள டீன் பதவிகளை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் துவங்கி விட்டது. முறையாக அனைத்து கல்லூரிகளுக்கும் விரைவில் முதல்வர் நியமனம் செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டது.
அப்பொழுது நீதிபதிகள் ஏற்கனவே கல்லூரிகளுக்கான டீன் யார் என்று முடிவு செய்து வைத்திருப்பீர்கள். அதை நடைமுறைப்படுத்துவதில் காலதாமதம் செய்ய வேண்டாம். எனவே விரைந்து காலியாக உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான டீன் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த நியமனங்களை நீதிமன்றம் கண்காணிக்கும், எனக் கூறி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.












Click it and Unblock the Notifications