விஜயே நேரடியாக அழைத்தும் மறுத்தோம்.. திருமாவளவன் பகீர்.. அப்படி என்னதான் நடந்துச்சு
மதுரை: தவெக வருகை தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல், மதிமுக கட்சிகள் தவெக கூட்டணியில் இணைந்துள்ளன. இதனால் அவர்களுக்கும் திமுகவுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்படுகிறது. இந்நிலையில் தேர்தல் நேரத்தில் என்ன நடந்தது, தவெகவுடன் எப்படி கூட்டணி ஏற்பட்டது, விஜய் என்ன சொன்னார், திமுகவால் ஏற்பட்ட வலி குறித்து திருமாவளவன் பரபரப்பை தகவலை வெளியிட்டுள்ளார்.
மதுரையில் நடந்த விசிக நிர்வாகி திருமண நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சி தலைவர் திருமாவளவன், "தேர்தல் முடிந்தவுடன் விசிக அமைச்சர் பதவி கேட்கிறார்கள், துணை முதலமைச்சர் பதவி கேட்கிறார்கள் கேட்கிறார்கள் என்று அவதூறு பரப்பினார்கள். கம்யூனிஸ்ட்கள் எடுக்கும் முடிவின்படி நாங்கள் முடிவு செய்வோம் என்று கூறினோம். அவ்வளவு தான். ஆனால் எங்கள் அறிவிப்பை கடுமையாக விமர்சித்தார்கள். ஒரு நாள் தான் நேரம் எடுத்தோம்.

விஜய் சொன்னது என்ன
அன்றைக்கே விஜய் வேளச்சேரியில் என்னை சந்தித்தார். வாங்க சார். நீங்க இடைத்தேர்தலில் போட்டியிடுங்கள். அமைச்சர் பொறுப்பை ஏற்று கொள்ளுங்கள் என விஜயும், ஆதவும் கூறினார்கள். அதை அப்போதே நான் கறாராக மறுத்துவிட்டேன். கம்யூனிஸ்ட்கள் எடுத்த முடிவின்படி நாங்கள் முடிவு செய்தோம். எங்களை அமைச்சரவையில் இணைத்து கொள்ள மீண்டும் வேண்டுகோள் விடுத்தனர். அதனடிப்படையில் அமைச்சரவையில் இணைய வேண்டியதானது.
உடனே எங்களுக்கு துரோகப்பட்டம் கொடுத்து விமர்சிக்கிறார்கள். அப்படி என்ன துரோகம் செய்தோம். திமுகவுடன் தானே மீண்டும் மீண்டும் பயணித்தோம். எவ்வளவு அவதூறு, வலிகளை எனக்கு எதிராக பரப்பினார்கள். 2009 தேர்தலில் எல்லா கட்சிகளும் அதிமுகவுக்கு ஆதரவளித்தனர். கம்யூனிஸ்ட்கள், பாமக உள்ளிட்ட எல்லாரும் அந்த கூட்டணியில் சேர்ந்தனர். நாங்கள் மட்டுமே திமுகவுடன் இருந்தோம். ராமதாஸ் உள்ளிட்ட பலரும் எங்களை அந்த கூட்டணிக்கு அழைத்தனர்.
எத்தனை அவதூறுகள்
திமுகவும், அதிமுகவும் வெவ்வேறு அணியாக இருந்தனர். எங்களிடம் எவ்வளவோ முயற்சித்தனர். ராஜிவ் காந்தி படுகொலையில் இருந்து, முள்ளி வாய்க்கால் போர் வரை ஈழத்தமிழர்களுக்காக அதிமுக செய்தது என்ன. பிரபாகரனை கைது செய்ய வேண்டுமென சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியவர் ஜெயலலிதா. அதை எல்லாம் காரணம் காட்டி திமுகவுடன் மட்டுமே பயணித்தோம்.
திமுகவுடன் இருந்ததால் அவ்வளவு பழிகளை நாங்கள் சுமந்தோம். இன்றைக்கும் திமுக கூட்டணியில் இருந்ததற்காகவே எங்களை விமர்சிக்கிறார்கள். அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. அவை நாகரீகம் கருதி ராஜபக்சேவுடன் கைக்குலுக்கியதை எல்லாம் விமர்சித்தனர். அத்தனையும் தாங்கி கொண்டு திமுகவில் இருந்தோம். ஆனால் எங்கள் மீது அவர்களே விமர்சிக்கிறார்கள்"


Click it and Unblock the Notifications
