மதுரை முருகன் மாநாட்டில் நீதிமன்ற உத்தரவு மீறல்? 5வது தீர்மானத்தை கவனிச்சீங்களா
மதுரை: மதுரையில் இந்து முன்னணி சார்பில் முருகன் மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் அரசியல் பேசக்கூடாது என்று நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 5வது தீர்மானத்தால் நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்து முன்னணி சாா்பில் மதுரையில் முருகன் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து மதுரை பாண்டி கோயில் அருகே உள்ள அம்மா திடலில் முருக பக்தா்கள் மாநாடு பல்வேறு கலைநிகழ்ச்சியுடன் இன்று மாலை 3 மணிக்கு தொடங்கியது பறை இசை, மேளதாளம் முழங்க கலை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இந்த மாநாட்டில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து முருகன் பக்தர்கள், பாஜகவினர் பங்கேற்றனர். இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பிற நிர்வாகிகள், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல் முருகன் உள்பட பிற தலைவர்கள், அதிமுக மாஜி அமைச்சர்கள், மடாதிபதிகள், சாமியார்கள் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் அதிமுக மாஜி அமைச்சர்கள் பங்கேற்றனர். மாஜி அமைச்சர்களான ஆர்பி உதயக்குமார், செல்லூர் ராஜு, கடம்பூர்ராஜு, ராஜேந்திர பாலாஜி, எம்எல்ஏ ராஜன் செல்லப்பா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். இவர்கள் மாநாட்டின் முதல் வரிசையில் போடப்பட்டு இருந்த இருக்கையில் அமர்ந்து இருந்தனர்.
மாநாட்டையொட்டி, திருப்பரங்குன்றம் மலை, நிற்கும் நிலையில் சுவாமி முருகன் போன்று பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு இருந்தது. மேடையின் வலது பக்கத்தில் ஆதீன குருமகா சந்நிதானங்கள், ஆன்மிகப் பெரியவா்கள் அமருவதற்காக தனி மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேடைக்கு முன்னர் கலை நிகழ்ச்சிகளுக்கான மேடையும் அமைக்கப்பட்டு இருந்தது.
இந்த மாநாட்டில் மொத்தம் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருந்தன. முதல் தீர்மானம்: திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும். 2வது தீர்மானம்: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த பிரதமர் மோடிக்கு பாராட்டுகள். 3வது தீர்மானம்: திருப்பரங்குன்றம் மலை குமரனுக்கே சொந்தம் என முருகன் மலைகளை காக்க வேண்டும்.
4வது தீர்மானம்: தமிழகத்தில் உள்ள கோவில்களில் இருந்து இந்து சமய அறநிலையத்துறை வெளியேற வேண்டும். 5வது தீர்மானம்: தேர்தல்களில் இந்துக்கள் ஒற்றுமையாக இருந்து இந்துக்களின் வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும். 6வது தீர்மானம்: சஷ்டி தினத்தன்று சஷ்டி கவசத்தை ஒன்று சேர்ந்து பாட வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக அறுபடை வீடுகளின் மாதிரி அமைத்து பூஜை நடத்தவும், முருகன் மாநாட்டுக்கு போலீஸார் விதித்துள்ள கட்டுப்பாடுகளில் 6 நிபந்தனைகளை மாற்றியமைக்கவும் இந்து முன்னணி சார்பில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை 52 நிபந்தனைகளுடன் மாநாட்டுக்கு அனுமதி வழங்கியது. அதில் ஒன்று அரசியல் பேசக்கூடாது என்பதாகும்.
ஆனால் இன்றைய முருகன் மாநாட்டில் ‛‛தேர்தல்களில் ஒற்றுமையாக இருந்து இந்துக்களின் வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும்'' என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் மாநாட்டில் நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications