கம கம கல்கண்டு சாதம், பொங்கல்.. மதுரையில் ரெடியாகும் விருந்து.. நாளைக்கு மீனாட்சி திருக்கல்யாணம்
மதுரை: உலகப் புகழ்பெற்ற மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நாளைய தினம் நடக்க உள்ளது.. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். திருக்கல்யாணத்தையொட்டி நாளை காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சுமார் 60 ஆயிரம் பக்தர்களுக்கு விருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் மதுரையில் குவிந்து வருகிறார்கள்.. இதனால் மதுரையே விழாக்கோலம் பூண்டுள்ளது..
உலகப்பிரசித்தி பெற்ற சித்திரைத் திருவிழா, மதுரையில் நடந்து கொண்டிருக்கிறது. கடந்த மாதம் 29ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக இந்த விழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, மீனாட்சி அம்மன் கோயிலில் ஒவ்வொரு நாளும் திருவிழாக்கோலம் பூண்டு வருகிறது..

தினமும் காலை இரவு என பல்வேறு வாகனங்களில் எழுந்தருளும் மீனாட்சி, சுந்தரேஸ்வரர் மாசி வீதிகளில் வலம் வந்து, பக்தர்களுக்குக் காட்சியளிப்பார்கள்.
சித்திரை திருவிழா
சித்திரை திருவிழாவின் 8வது நாளான நேற்று காலையிலேயே மீனாட்சிக்கு விசேஷமான பூஜைகள் செய்யப்பட்டது. பிறகு கோயிலில் இருக்கக்கூடிய பந்தலில் எழுந்தருளிய மீனாட்சி அம்மனுக்கு, "ராயர் கிரீடம்" எனப்படும் வைரக்கிரீடம் மற்றும் செங்கோலும் சூட்டப்பட்டு, அனுக்ஞை விநாயகர் சந்நிதியிலிருந்து கொண்டு வரப்பட்டது.
அப்போது, வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மனுக்கு பரிவட்டம் கட்டி, கிரீடம் சூட்டி, செங்கோலும் வழங்கப்பட்டது. பிறகு, மீனாட்சிக்கு பாண்டிய மன்னர்களின் அடையாளமாக கருதப்படும் வேப்பம்பூ மாலையும், மகிழம்பூ மாலையும் அணிவிக்கப்பட்டு பட்டாபிஷேகம் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது.
மீனாட்சி அம்மன் ஆட்சி
மதுரை சித்திரை திருவிழாவின் 9ம் நாளான இன்று அம்மனின் திக்கு விஜயம் நடக்கிறது. மீனாட்சி அம்மன் தடாதகை பிராட்டியாக மதுரையில் அவதரித்து ஆட்சி புரிகையில் மேற்கொண்ட திக்விஜய புராணத்தை குறிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கமாகும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, நாளை காலை மீனாட்சி-சொக்கர் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தையொட்டி, 60 ஆயிரம் பேருக்கு விருந்து பரிமாறப்படுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக, முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் கோயிலில் இருந்து சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை மற்றும் பவளக்கனிவாய் பெருமாள் ஆகியோர் இன்று மாலை புறப்பட்டு, இரவு 7 மணிக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை வந்தடைகின்றனர். நாளை காலை நடைபெறும் திருக்கல்யாண நிகழ்ச்சியிலும் பங்கேற்கின்றனர்.
திருக்கல்யாண வைபவம் - விருந்து
ஒவ்வொரு ஆண்டும் திருக்கல்யாண வைபவத்தின்போதும் பழமுதிர்ச்சோலை திருவருள் முருகன் பக்த சபை டிரஸ்ட் சார்பில், சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் திருக்கல்யாண விருந்து வழங்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில், இந்த முறையும் திருக்கல்யாணத்தையொட்டி, மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் 12000 சதுரடி பந்தலில் நாளை காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சுமார் 60 ஆயிரம் பக்தர்களுக்கு விருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கமகம சமையல் வேலை ஆரம்பம்
குறிப்பாக, கல்கண்டு சாதம், சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், வடை, சாம்பார் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம், உருளை கிழங்கு பொறியல், பச்சடி, ஊறுகாய் வழங்கப்படுகிறது. இதற்காக காய்கறிகள் வெட்டும் பணிகளும், விருந்து தயாரிப்பு பணிகளும் கமகமவென துவங்கியிருக்கிறது.
கடந்த வருடம்கூட, ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்களுக்கு, மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண விருந்து வழங்கப்பட்டது. இதற்காக சுமார் 6 ஆயிரம் கிலோ அரிசி, 6 டன் காய்கறிகள், மற்றும் சமையல் பொருட்கள் பயன்படுத்தி, 300க்கும் மேற்பட்ட பெண்கள், சமையல் பணியில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications