தமிழ்நாட்டில் தபால் பிரிக்கப்போவது மிஸ்ரா, ஜோஷி, அகர்வால்! லிஸ்ட் போட்டு விளாசும் சு.வெங்கடேசன்
மதுரை: அஞ்சல் துறையில் தபால் பிரிக்கும் பணிக்கான 946 பேரில் 46 பேர் மட்டுமே தமிழகத்தை சேர்ந்தவர்கள். ஏன் இந்த பாகுபாடு என சு.வெங்கடேசன் எம்பி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு பணிகளில் தமிழர்கள், தமிழகத்தை சேர்ந்தவர்கள் புறக்கணிக்கப்படுவதாக அவ்வப்போது குற்றசாட்டு எழுகிறது. மேலும் தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் தெரிந்தவர்களை பணியமர்த்தாமல் வடமாநிலத்தை சேர்ந்தவர்களை பணிக்கு அமர்த்துவதாகவும் புகார்கள் எழுவது உண்டு.
இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், மக்கள் பிரதிகள் கண்டனம் தெரிவிப்பர். இந்நிலையில் இந்திய அஞ்சல் துறை சார்பில் தமிழகத்துக்கான தபால் பிரிப்பு பணிக்கு மொத்தம் 946 பேர் நியமிக்கப்பட்டனர். இதில் 46 பேர் மட்டுமே தமிழகத்தை சேர்ந்தவர்களாக உள்ளதாகவும், ஏன் இந்த பாகுபாடு எனவும் மதுரை இந்திய கம்யூனிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன் எம்பி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

கல்பித், பவார், மண்டல்
‛‛இந்திய அஞ்சல் துறையில் தமிழ்நாட்டில் அஞ்சல் உதவியாளர்களாக, தபால் பிரிப்பு உதவியாளர்களாக பணியாற்றுவதற்காக 10.02.2022ல் 946 பேர் கொண்ட தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 46 பேர் மட்டுமே தமிழகத்தை சேர்ந்தவர்கள். மத்திய பணியாளர் தேர்வு (Staff Selection Commission) 2018 அடிப்படையில் தமிழ் நாட்டிற்கு ஒதுக்கப்பட்டவர்களின் பெயர்களை வாசித்தால் கல்பித், பவார், சிபு, அனூப், சாகா, மண்டல், சிங், லங்கா, பூனம், நீட்டு, மிஸ்ரா, பண்டிட், கௌரவ், சிபு, மித்ரா, குப்தா... இப்படியே நூற்றுக் கணக்கில் உள்ளது.

முகவரி வாசிக்க முடியுமா
கண்ணை விரித்து விரித்து தேடினால் எங்காவது முனியசாமி, கணேச பாண்டி, ராஜாராம் என்ற ஒரு சில தமிழ் பெயர்கள் மட்டுமே உள்ளன. இவர்கள்தான் தமிழ் நாட்டில் உள்ள 57 அஞ்சல் கோட்டங்களில், சிற்றூர்களில் தபால்களை பிரித்து தர போகிறார்கள். இவர்களால் முகவரிகளையாவது வாசிக்க முடியுமா.

நியாயமா
நாம் இந்தியர்கள் எல்லோரையும் நேசிக்கிறோம். ஆனால் மக்கள் சேவை எனும் போது மாநில மொழி தேர்ச்சி அவசியம் அல்லவா. வேலை வாய்ப்பு எனும்போது எல்லாவற்றையும் இந்தி பேசும் மாநிலங்களே தட்டிச் செல்கிற வகையில் தேர்வு முறைமை இருப்பது நியாயமா?

இடஒதுக்கீட்டு பட்டியல்
946 பேர் கொண்ட பட்டியலில் முன்னாள் இராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள் பட்டியல் தனியே தரப்பட்டுள்ளது. நல்லது. அது போல ஓபிசி, எஸ்சி, எஸ்டி இட ஒதுக்கீட்டு பிரிவினர் பட்டியல் தனியே தரப்பட வேண்டாமா? சமூக நீதி உறுதி செய்யப்படுகிறதா என்பதில் வெளிப்படைத் தன்மை வேண்டாமா?

மாநில அளவில் தேர்வு
எனவே மாநில மொழி அறிவு தேர்வு முறைமையில் பணி பெற வேண்டும். தேர்வுகள் மையப்படுத்தப்படாமல் மாநில அளவில் நடத்தப்பட வேண்டும். இட ஒதுக்கீடு அமலாக்கத்தில் வெளிப்படையாக இருக்க வேண்டும்'' என குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications